15-20 ஆண்டுகள் நேர்மையாக ஆடிவிட்டு இந்தப் பேச்சையெல்லாம் நான் கேட்க வேண்டுமா?- மதச்சார்புக் குற்றச்சாட்டுக்கு வாசிம் ஜாஃபர் வேதனை

15-20 ஆண்டுகள் நேர்மையாக ஆடிவிட்டு இந்தப் பேச்சையெல்லாம் நான் கேட்க வேண்டுமா?- மதச்சார்புக் குற்றச்சாட்டுக்கு வாசிம் ஜாஃபர் வேதனை

வாசிம் ஜாஃபர்.

நான் மதரீதியாக அணியை பிரித்தாள்கிறேன் என்பதெல்லாம் சுத்தமாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். ஏன் இதைச் செய்கிறார்கள் என்றால் தங்களின் தவறுகளை மறைத்துக் கொள்ள மதத்தைக் கையில் எடுக்கின்றனர்.

 • Share this:
  உத்தரகண்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய இந்திய முன்னாள் வீரரும் இந்தியாவின் டாப் ரஞ்சி சாதனையாளருமான வாசிம் ஜாபர் தன்னை மதரீதியாகப் பார்க்கிறார்கள் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

  உத்தரகண்ட் கிரிக்கெட் சங்கத்தின் செயலர் மாஹிம் வர்மா அனைத்திலும் தலையிடுகிறார், ஒவ்வொரு விஷயத்துக்கும் அவரிடம் போராட வேண்டியிருந்ததாகவும் தகுதியுள்ள வீரர்களைத் தேர்வு செய்ய முடியவில்லை, அவருக்கு வேண்டப்பட்டவர்களையும் பெரிய இடத்துப் புள்ளைகளையும் சேர்க்கின்றனர் என்று வாசிம் ஜாஃபர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

  மேலும் வங்கதேச அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்பு வந்தும் உத்தரகண்டிற்காக தான் அர்ப்பணித்து கடைசியில் என்னை என் மதத்தை வைத்து எடைபோட்டனர் என்பது எவ்வளவு வேதனை என்று வருந்தியுள்ளார் வாசிம் ஜாஃபர்.

  இது தொடர்பாக ஏ.என்.ஐ.க்கு அவர் அளித்த பேட்டியில், “இது மிகவும் என்னை புண்படுத்துகிறது, நெஞ்சு பொறுத்து கொள்ளவில்லை. மிகவும் தீவிரமாக கோச்சாக பணியாற்றினேன். தகுதியுள்ள வீரர்கள் அணியில் வர வேண்டும் என்று பாடுபட்டேன். கடைசியில் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவர்களுடன் போராட வேண்டியதாயிற்று.

  தகுதியற்ற பெரிய இடத்து புள்ளைகள் அணிக்குள் தள்ளப்பட்டனர். செயலர் மாஹிம் வர்மா பெரிய இடைஞ்சல். அடிக்கடி குறுக்கிட்டு தன் போக்குக்குச் சென்றார். விஜய் ஹஜாரே கோப்பைக்கு என்னை ஆலோசிக்காமல் அணியை தேர்வு செய்தனர். கேப்டனை மாற்றினார்கள், 11 வீரர்களும் மாற்றம். எப்படி அவர்களுடன் நான் பணியாற்ற முடியும்? நான் தான் அணியைத் தேர்வு செய்வேன் என்று கூறவில்லை ஆனால் பரிந்துரைகளைக் கூட கேட்க மாட்டேன் என்றால் நான் அங்கிருந்து என்ன பயன்?

  எனக்கு சுதந்திரமாக இயங்க அனுமதி கொடுங்கள் என்றேன். நான் நியாயமாக கிரிக்கெட் ஆடியவன். எந்த ஒரு எதிர்பாராத விஷயமும் நடக்க அனுமதிக்க மாட்டேன். தகுதிபடைத்த வீரர்களுக்கு வாய்ப்பில்லாமல் போவதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். நான் எல்லாவற்றையும் அவர்களிடம் கூறி விட்டேன் ஆனால் எதுவும் நடக்கவில்லை. நான் சார்ந்த மத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறேன், என்றும் நான் மதரீதியாக அணியைப் பிரித்தாள்கை செய்கிறேன் போன்ற துரதிர்ஷ்டவசமான குப்பைப் பேச்சுகளையெல்லாம் கேட்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

  15-20 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி விட்டு இந்தப் பேச்சையெல்லாம் நான் கேட்க வேண்டுமா? நான் மதரீதியாக அணியை பிரித்தாள்கிறேன் என்பதெல்லாம் சுத்தமாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். ஏன் இதைச் செய்கிறார்கள் என்றால் தங்களின் தவறுகளை மறைத்துக் கொள்ள மதத்தைக் கையில் எடுக்கின்றனர். மிகுந்த கவுரவத்துடன் நான் கிரிக்கெட்டை ஆடி வந்தேன்.

  நான் மதச்சார்புடையவனாக இருந்தால் என்னை எப்போதோ தூக்கி எறிந்திருப்பார்கள். நான் இப்போது ராஜினாமா செய்தவுடன் மதச்சார்பு அது இது என்றெல்லாம் கதை கட்டுகிறார்கள்.

  இவ்வாறு தன் வேதனையைக் கொட்டித்தீர்த்துள்ளார் வாசிம் ஜாஃபர்.
  Published by:Muthukumar
  First published: