Indian cricket team | ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்து தொடர்: பெரும்படையை இன்று தேர்வு செய்யும் பிசிசிஐ

இந்திய அணி.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இங்கிலாந்து செல்லும் மற்றும் அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து தொடருக்குமான அணித்தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் சுமார் 23 வீரர்களை தேர்வு செய்து அனுப்புவார்கள் என்று தெரிகிறது.

  • Share this:
    ஜூன் 18-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது

    ஒரே தொடருக்கு 23 வீரர்கள் என்பது இதுவரை இல்லாதது, ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளை அடுத்து அதிக வீரர்களைத் தேர்வு செய்து அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று சேத்தன் சர்மா தலைமையில் கூடும் இந்திய அணித்தேர்வுக்குழு 5 மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள், 4 தொடக்க வீரர்கள், 9 வேகப்பந்து வீச்சாளர்கள், சுமார் 5 ஸ்பின்னர்கள் என்று 23 வீரர்கள் தேர்வு செய்யப்படுவதாகத் தெரிகிறது. இவர்களோடு பயிற்சியாளர்கள், உதவிப்பயிற்சியாளர்கள், உடற்கூறு மருத்துவர், பிசியோ என்று ஒரு பெரும்படையே இங்கிலாந்து செல்கிறது.

    “பயணக்கட்டுப்பாடுகள், கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கின்றன. எனவேதான் காயங்கள், உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெரிய அணியை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. அப்போதுதான் போதிய பெஞ்ச் ஸ்ட்ரெந்த் இருக்கும்” என்று கிரிக்கெட் வாரிய வட்டம் கூறுகிறது.

    கொரோனா பாதித்த விருத்திமான் சஹாவையும் தேர்வு செய்யவிள்ளார்கள். ரிஷப் பந்த், இஷான் கிஷன் ஆகியோரும் அணியில் நிச்சயம் என்று தெரிகிறது.

    ஐபிஎல் போட்டிகள் ரத்தானதால் இங்கிலாந்துக்கு இந்திய அணி முன்னமேயே சென்று விடும் என்று கூறப்படுகிறது. கட்டாய குவாரண்டைனுக்கு பிறகு இந்திய அணிக்குள்ளேயே பிராக்டிஸ் மேட்ச்கள் நடைபெறும். முதற்கட்ட திட்டப்படி ஐபிஎல் முடிந்து ஜூன் 2ம் தேதி இந்திய அணி இங்கிலாந்து செல்லும் என்று இருந்தது.

    கடந்த ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பி தன் இழந்த இடத்தை மீண்டும் பிரிதிவி ஷா பிடிப்பார் என்று கூறப்படுகிறது. பெரிய அணியாக தேர்வு செய்யப்படுவதால் பார்மில் இருக்கும் பிரிதிவி ஷாவுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

    ரோகித் சர்மா, சுப்மன் கில், பிரிதிவி, ஷா, கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோரும் தேர்வு செய்யப்படுவார்கள். மொகமட் ஷமி, ரவீந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரியும் மீண்டும் அணிக்குள் வருகிறார்கள். நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணாவில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று தெரியவில்லை, பும்ரா, இஷாந்த், சிராஜ் இடம் உறுதி.

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்த பிறகு இங்கிலாந்து தொடர் தொடங்குகிறது, ஆனால் டெஸ்ட் போட்டிகள் ஆகஸ்டில்தான் நடைபெறுகிறது.

    நாட்டிங்காமில் ஆகஸ்ட்4-8 முதல் டெஸ்ட், அடுத்து லார்ட்ஸில் ஆகஸ்ட் 12-16, லீட்ஸில் ஆகஸ்ட் 25-29, ஓவலில் செப். 2-6, மான்செஸ்டரில் செப்டம்பர் 10-14 என்று டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.
    Published by:Muthukumar
    First published: