முகப்பு /செய்தி /விளையாட்டு / Women’s T20 WC : வங்கதேசத்தை எளிதாய் வென்றது இலங்கை அணி

Women’s T20 WC : வங்கதேசத்தை எளிதாய் வென்றது இலங்கை அணி

இலங்கை வீராங்கனை ஹர்ஷிதா

இலங்கை வீராங்கனை ஹர்ஷிதா

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிருக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணியை இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாய் வென்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீராங்கனைகளாக விக்கெட் கீப்பர் ஷமிமா சுல்தானா, முர்ஷிதா காதுன் ஆகியோர் களத்தில் இறங்கினர். முர்ஷிதா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, ஷமிமா 20 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ஷோபனா மோஸ்தரி 29 ரன்களும், கேப்டன் நிகார் சுல்தானா 28 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற, வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 126 ரன்களை எடுத்தது.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இலங்கை அணி அடுத்ததாக பேட் செய்யத் தொடங்கியது. தொடக்க வீராங்கனையாக களத்தில் இறங்கிய கேப்டன் சமாரி அட்டப்பட்டு 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஷ்மி குணரத்னே 1 ரன்னிலும், விக்கெட் கீப்பர் அனுஷ்கா சஞ்சீவனி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் 25 ரன்னுக்கு 3 விக்கெட் என அணி தடுமாறிக் கொண்டிருந்தது. 4 ஆவது விக்கெட்டிற்கு ஹர்ஷிதா மாதவியுடன், நிலாக்சி டி சில்வா இணைந்தார். இருவரும் வங்கதேச அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடி ஹர்ஷிதா 50 பந்துகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்தார். 18.2 ஓவர் முடிவில் இலங்கை அணி 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்ஷிதாவுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த நிலாக்சி 41 ரன்களுடன் களத்தில் இருந்தார். குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

First published:

Tags: Cricket