உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பேட்டில் உரசி சென்ற ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் முன்னாள் சர்வதேச நடுவர் சைமன் டஃபெல் இது ஒரு தெளிவான தவறு என்று ஐ.சி.சி விதியை எடுத்துரைத்துள்ளார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை வென்று வரலாற்று சாதனைப் படைத்தது. பரபரப்பின் உச்சத்திற்கே சென்ற இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு கடைசி நொடி வரை தொடர்ந்தது.
போட்டி டிராவில் முடிவடைய வெற்றி யாருக்கு என நடைபெற்ற சூப்பர் ஓவரும் டிராவில் முடிவடைய பவுண்டரி எண்ணிக்கைகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்காற்றியவர் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.
இந்த போட்டியில் ஐ.சி.சியின் விதிமுறைகளால் மிகப் பெரிய குழப்பம் உருவாகி உள்ளது. சூப்பர் ஓவர் டிராவானால் பவுண்டரி எண்ணிக்கைகளை வைத்து ஒரு அணி வெற்றி பெற்றதாக எப்படி அறிவிக்க முடியும் என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் இந்த போட்டியின் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரி எல்லைக்கு விரட்டி பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சித்தார்.
நியூசிலாந்து வீரர் கப்தில் ரன்அவுட் செய்யும் நோக்கத்துடன் பந்தை விக்கெட் கீப்பருக்கு த்ரோ செய்தார். பந்து எதிர்பாராதவிதமாக ஸ்டோக்ஸில் பேட்டில் உரசி பவுண்டரிக்கு சென்றது. இதற்கு நடுவர் 6 ரன்கள் கொடுத்தது போட்டியில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது நடுவரின் தெளிவான தவறு என முன்னாள் சர்வதேச நடுவர் சைமன் டஃபெல் கூறியுள்ளார். ஐசிசியின் விதிமுறையின் படி, பந்து ஓவர் த்ரோவின் போது பவுண்டரி சென்றால் 4 ரன்கள் வழங்கப்படும். 4 ரன்கள் தவிர்த்து கூடுதலாக அந்தப் பந்தில் பேட்ஸ்மேன்கள் ஓடி எடுத்து முடித்த ரன்கள் சேர்க்கப்படும். அதாவது ஃபீல்டர்கள் த்ரோ செய்யும்போது ஓடி முடித்த ரன்கள். அந்த விதிப்படி த்ரோ செய்யும்போது, பேட்ஸ்மேன்கள் இருவரும் எல்லைகளைக் கடந்து சென்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் கப்தில் த்ரோ செய்யும் போது ஸ்டோக்ஸ், ரஷித் இருவரும் 2-வது ரன்களை அப்போது தான் ஓட முயன்றனர். எனவே இதற்கு 5 ரன்கள் கொடுத்திருக்க வேண்டுமென்று சைமன் டஃபெல் கூறியுள்ளார். நடுவர்களின் பணி சவாலானது தான், ஆனால் நடுவர்கள் போட்டியில் கவனமாக செயல்பட வேண்டும். இங்கிலாந்திற்கு 5 ரன்கள் கொடுத்திருக்க வேண்டும், 6 ரன்கள் கொடுத்தது தவறான முடிவு என்று டஃபெல் கூறியுள்ளார்.
Also Read : ஐசிசியின் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த 2 இந்திய வீரர்கள்... கேப்டன் வில்லியம்சன் தான்!
Also Read : ஐ.பி.எல் தொடரில் மேலும் 2 புதிய அணிகள்?
Also Read : உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் 7 பேர் அயல்நாட்டவர்! இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.