WI vs SA 4th T20: வெளுத்து வாங்கிய பொலார்ட், வாரி வழங்கிய ரபாடா, இங்கிடி; பிராவோ 1 ஓவரில் 3 விக். : வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி

பொலார்ட்.

 செயிண்ட் ஜார்ஜில் நேற்று நடைபெற்ற 4வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மே.இ.தீவுகள் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை இதுவரை 2-2 என்று சமன் செய்து கடைசிப்போட்டியை சுவாரசியமாக்கியுள்ளது. 

  • Share this:
டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா பீல்டிங்கைத் தேர்வு செய்ய  முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் பொலார்ட் (51 நாட் அவுட், 25 பந்து, 2 நான்கு 5 சிக்ஸ்) பொளந்து கட்ட 20 ஓவர்களில் 167/6 என்ற ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 146/9 என்று தோல்வி தழுவியது, டிவைன் பிராவோ 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

நாளை சனிக்கிழமை 5வது, இறுதிப்போட்டி நடைபெறுகிறது. அய்டன் மார்க்ரமின் முதல் ஓவரிலேயே 20 ரன்களை லெண்டில் சிம்மன்ஸ், எவின் லூயிஸ் விளாசினர், பொலார்ட் அதிரடியில் கடைசி 4 ஓவர்களில் 66 ரன்கள் விளாசப்பட்டது. ஆனால் இடையில் 15 ஓவர்களில் 81 ரன்களையே எடுத்தனர். அதாவது 2வது ஓவரிலிருந்து 16வது ஓவர் வரை தென் ஆப்பிரிக்க ஸ்பின்னர்கள் தப்ரைஸ் ஷம்சி ( 13/2), ஜார்ஜ் லிண்டே (2/16) கடுமையாக மே.இ.தீவுகளை முடக்கியதோடு சிம்மன்ஸ், ஹெட்மையர், பூரன், ஆண்ட்ரே ரஸல் உட்பட 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கடைசியில் பொலார்ட் இறங்கும் போது ஸ்கோர் 16 ஓவர்களில் 101/6 , ஆனால் அப்போதுதான் பொலார்ட் தனிநபராக எதிர்த் தாக்குதல் நடத்தினார். பேபியன் ஆலனும் இவரும் 6 சிக்சர்களை விளாசினர், இதில் பொலார்ட் மட்டுமே 5 சிக்சர்கள்.



ரபாடா வீசிய இன்னிங்ஸின் 19வது ஓவர் அவர் வாழ்நாளின் அதிக ரன்கள் கொடுத்த ஓவர் ஆனது 25 ரன்கள் அவர் ஓவரில் விளாசப்பட்டது. மேலும் 4 ஓவர்களை வீசாதது இதுவே முதல் முறை. 3 ஓவர் 36 ரன்கள் விளாசப்பட்டார். 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகளை இவர் மொத்தமாக வாரி வழங்கினார். அதே போல் லுங்கி இங்கிடியின் கடைசி 2 ஓவர்களில் 30  ரன்கள் விளாசப்பட அவர் 4 ஓவர் 48 என்று வள்ளலானார். கிறிஸ் கெய்ல் 5 ரன்களில் வெளியேறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குவிண்டன் டி காக்கின் தனிமனித போராட்டம்:

மே.இ.தீவுகள் பந்து வீசிய போது பிடல் எட்வர்ட்ஸ், கிறிஸ் கெய்ல் தொடக்கத்தில் புதிய பந்தில் வீசினர். கெய்ல் தன் வழக்கமான ஜாலி பாணியில் வீசி ரீஸா ஹெண்ட்ரிக்ஸை வெளியே இழுத்து ஸ்டம்ப்டு ஆகச் செய்தார்.

குவிண்டன் டி காக்


தென் ஆப்பிரிக்காவின் மற்ற விக்கெட்டுகள் சரிவடைய குவிண்டன் டி காக் போராளியானார். அவர் ஒருமுனையில் நின்று 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 60 ரன்களை எடுத்து டிவைன் பிராவோ வீசிய இன்னிங்ஸின் 18வது ஓவரின் முதல் பந்தில் வைடு புல்டாஸை விரட்டி பாயிண்டில் சிம்மன்சிடம் கேட்ச் ஆகி வெளியேறினார், இது ஒரு பெரிய திருப்பு முனை ஏனெனில் இவர் அவுட் ஆகும் போது ஸ்கோர் 126 ரன்கள் என்று தென் ஆப்பிரிக்க வெற்றி வாய்ப்பை தக்கவைத்திருந்தது.



ஆனால் இதே ஓவரில் டீகாக், ஷம்சி, இங்கிடி விக்கெட்டை வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவின் வெற்றி கதவுகளை அறைந்து சாத்தினார். இடையில் ஜார்ஜ் லிண்டே விக்கெட்டையும் பிராவோ கைப்பற்றி 4 ஓவர் 19 ரன் 4 விக்கெட் என்று அசத்தினார். தென் ஆப்பிரிக்கா கடைசியில் ரபாடாவின் 16 நாட் அவுட் மூலம் 146/9 என்று முடிந்தது. ஆந்த்ரே ரசல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர் 2-2 என்று சமநிலையில் உள்ளது, சனிக்கிழமை இறுதி ஆட்டம்.  ஆட்ட நாயகன் கெய்ரன் பொலார்ட்.
Published by:Muthukumar
First published: