Home /News /sports /

கோலி களத்தில் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? : இங்கிலாந்து முன்னாள் வீரர் கூறுவதென்ன?

கோலி களத்தில் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? : இங்கிலாந்து முன்னாள் வீரர் கூறுவதென்ன?

விராட் கோலி!

விராட் கோலி!

இந்திய கேப்டன் விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாகச் செயல்படக் கூடியவர் விக்கெட் விழுந்தாலும் விழாவிட்டாலும் எதிரணியினர் ரன் எடுத்தாலும் எதிரணியினர் விக்கெட் எடுத்தாலும் அது தனக்கு ஏதோ பெர்சனலாக நிகழ்ந்தது போல் ரியாக்‌ஷன் காட்டுவார் கோலி, இத்தகைய நடத்தை எதனால் என்பதற்கு இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் விளக்கம் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சனைப் பவுன்சரில் தாக்கி காயப்படுத்துமாறு பும்ராவிடம் கூறியதும் கோலிதான், அதற்காக பும்ரா கிரீசைத் தாண்டி வந்தெல்லாம் முயற்சி எடுத்து நோ-பால் ஆனது, ஆனால் நோ-பால் ஆனாலும் பரவாயில்லை ஆண்டர்சனை காயப்படுத்தும் ‘புனித’ நோக்கமே உன்னதம் என்பது கோலியின் துணிபு. அந்த ஓவரில் 10 பந்துகள் வீசினார் பும்ரா.

  பதிலுக்கு பழிக்குப் பழி வாங்குகிறேன் என்று இங்கிலாந்து இறங்கி பல்பு வாங்கி டெஸ்ட்டையே கோட்டை விட்டது வேறு ஒரு விஷயம், இதற்காக இங்கிலாந்து ஊடகம் இவர்களைக் கடுமையாகச் சாடியது, அதாவது, ஷமி, பும்ரா இங்கிலாந்தை கோமாளியாக்கி விட்டனர் என்று கேலி செய்தனர். இது போதாதென்று ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீசும் போது கோலி ‘இது ஒன்றும் உங்கள் வீட்டுக் கொல்லைப்புறமல்ல’ என்று அவர் பிட்சை சேதம் செய்தார் என்ற நினைப்பில் வசையை ஏவி விட்டார். இவைஎல்லாம் இந்த முறை கோலிக்குச் சாதகமாக முடிந்தது, இன்னொரு முறை நெகட்டிவ் ஆக போய்விடும்.

  கிரிக்கெட்டை அதன் தன்மையுடன் ஆடி வெல்ல வேண்டும், ரகானே ஆஸ்திரேலியாவில் சாதித்தது போல், அது கோலிக்கு வராது, ஏன் இந்த ஆக்ரோஷம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் எங்கு போயிற்று? காரணம், கேன் வில்லியம்சன் ஒரு ஜென் பவுத்தத் துறவி போல் கேப்டன்சி செய்தார், பேட்டிங் செய்தார், வழிநடத்தினார், அவர் கோலியைக் கண்டு கொள்ளவில்லை.

  தன்னைச் சீண்டினால்தான் தான் ஆக்ரோஷமாக ஆடுவேன் என்று அடுத்தவரை நம்பியிருப்பது அவரது பேட்டிங்குக்கு உலை வைத்து விட்டது.

  ஆனால் கெவின் பீட்டர்சன் சொல்ல வருவது இதுவல்ல:

  கெவின் பீட்டர்சன்


  ''விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முன்னோடிகளான, ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் ஆகியோரின் தடத்தைப் பின்பற்ற தன்னை உந்தித் தள்ளுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சச்சின், திராவிட் உள்ளிட்டோர் கோலியின் ஹீரோக்களாக உள்ளார்கள்.

  டெஸ்ட்டில் ஜாம்பவானாகத் தான் உருமாறுவதற்கு, டெஸ்ட் போட்டியில் மட்டுமல்ல டி20 போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பது கோலிக்கும் தெரியும். அதனால்தான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கோலி அதிகமான முக்கியத்துவம் அளிக்கிறார்.

  டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆழமான நேசிப்பு தேவைப்படும் இந்நேரத்தில், உலகளாவிய சூப்பர் ஸ்டாரான கோலியை இப்படி உற்சாகமான நிலையில் பார்ப்பது எவ்வளவு நல்லவிதமாக இருக்கிறது.

  அனைத்துச் சூழல்களிலும் தன்னுடைய அணி செயல்படும் என கோலி மதிப்பிடுகிறார். ஆஸ்திரேலியா சென்று கடுமையான சூழலிலும் இந்திய அணி வென்றது. இங்கிலாந்து பயணம் வந்து லார்ட்ஸ் மைதானத்திலும் வெற்றி பெற்றது கோலியை மிகப்பெரிய அளவு திருப்திப்படுத்துகிறது.

  கோலியின் உற்சாகம், போட்டியின் மீதான தீவிரம், அணி வீரர்களை அவர் நடத்தும் விதம் ஆகியவற்றைப் பார்க்கும்போது கோலிக்கு டெஸ்ட் கிரிக்கெட்தான் எல்லாமே என நமக்குத் தெரியும். இதுபோன்ற தருணங்கள்தான் கோலியின் பாரம்பரியத்தை வரையறுக்கும்.

  இங்கிலாந்துக்கு வந்து ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஓர் அணி சிறப்பாகச் செயல்படுவது என்பது கடினமானது. டிரண்ட் பிரிட்ஜில் மட்டும் கடைசி நாளில் மழை இல்லாமல் இருந்திருந்தால், இந்தியா டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கும்.

  முகமது சிராஜ் கடைசி நாளில் பந்துவீசியது அவரின் தீவிரம், வலிமை, பந்துவீச்சின் தரத்தை வெளிப்படுத்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உண்மையில் சிறப்பானதாக சிராஜின் பந்துவீச்சு இருந்தது. இந்த டெஸ்ட் போட்டிக்கு அனைத்து விதங்களிலும் இந்திய அணி தங்களைத் தகுதியாக்கியுள்ளது.

  இதனால், இங்கிலாந்து அணி 3-வது டெஸ்ட் போட்டிக்கு ஏராளமான மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து பேட்டிங்கில் மோசம் எனக்கூற முடியாது, ஆனால், கடைசி நாளில் அவர்கள் பேட் செய்தது ஒட்டுமொத்த மோசம்'', என்று கோலியின் ஆக்ரோஷத்துக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஒரு நேயம், ஆசை என்று புது முட்டுக் கொடுத்துள்ளார் பீட்டர்சன்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Captain Virat Kohli, India Vs England

  அடுத்த செய்தி