தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய இந்திய துணைக் கேப்டன் ரோகித் சர்மாவுக்குப் பதில் சேர்க்கப்பட்டுள்ள குஜராத் வீரர் பிரியங்க் கிரித் பஞ்சல் என்ற வீரருக்கு வயது 31 ஆண்டுகள் 249 நாட்கள் ஆகிறது. இந்த வயதில் ஏன் தேர்வு செய்யப்பட வேண்டும்? ஏன் முன்னமேயே வாய்ப்புக் கொடுக்கவில்லை?
இப்போது அவர் 32 வயதை நெருங்குகிரார். 2013ம் ஆண்டு ரோகித் சர்மாவை டெஸ்ட் அணிக்குள் அறிமுகம் செய்தனர், ஓஞ்சு போன வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் கண்டார் ரோகித் சர்மா. ஆனால் பிரியங்க் பஞ்சல் லிஸ்ட் ஏ, மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் 2008-ல் அறிமுகமாகி 13 ஆண்டுகள் சென்று அவருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது, இது ஏன்? அதுதான் மும்பை லாபி. இப்போது பிசிசிஐ பொறுப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் குஜராத் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் இவர் ரோகித் சர்மா, ஷுப்மன் கில், பிரிதிவி ஷா-வுக்கு முன்னரே தொடக்க வீரராக அணிக்குள் தேர்வு செய்யப்பட வேண்டியவர்தான்.
இன்று 32 வயதை நெருங்கும் பிரியங்க் பஞ்சல் 2008-ல் தன் அறிமுக டெஸ்ட்டிலிருந்தே ரன்களைக் குவித்து வந்தவர். 100 முதல் தர போட்டிகளில் 24 சதங்களை எடுதுள்ளார். சராசரி 45.52., 25 அரைசதங்களை எடுத்துள்ளார், 24 சதம் 25 அரைசதம் எனும்போது அரைசதத்தை சதமாக மாற்றும் கன்வர்ஷன் ரேட்டிலும் சிறந்து விளங்குகிறார். 13 ஆண்டுகால கரியரில் 7,011 ரன்களைக் குவித்துள்ளார். 2016-17 சீசனில் மட்டும் 1310 ரன்களைக் குவித்துள்ளார். கோலி, ரவிசாஸ்திரி, மற்றும் தேர்வுக்குழுவுக்கு இவர் புலப்படாமல் போனது ஆச்சரியமே.
அந்த சீசனில் 5 சதங்கள் விளாசி குஜராத் ரஞ்சி சாம்பியனாக உதவியவர். இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட வேண்டிய வயதில் இந்தியா ஏ அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். 2011 உலகக்கோப்பை நடக்கும் போது ரோகித் சர்மா இந்தியாவின் ஒருநாள் அணியிலேயே இல்லை. பிரியங்க் பஞ்சல். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடாததால் இவரது பெயர் தெரியாமல் போனது போலும்!!
இவரை விட 5 ஆண்டுகள் கழித்து முதல் தர கிரிக்கெட்டுக்கு அறிமுகமான உ.பி.யின் அபிமன்யூ ஈஸ்வரன் தொடக்க வீரர் இடத்துக்கு பரிசீலிக்கப்பட்டார். இது எப்படி? பிரியங்க் பஞ்சல் முச்சதம் அடித்த போது கூட கண்டுகொள்ளப்படவில்லை. 2016-ல் தான் 314 ரன்கள் விளாசினார். பைனான்சியல் மேனேஜ்மெண்ட்டில் முதுகலை பட்டம் பெற்ற இவர் பெரிய படிப்பாளி. ஆனால் கிரிக்கெட்டுக்கு தன்னை ஒப்படைத்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டை வைத்துத்தான் செலக்ஷன் என்பது இந்திய கிரிக்கெட்டின் போதாத காலமாகவே படுகிறது. ஷுப்மன் கில் இப்படித்தான் முன்னுரிமை பெற்றார். 2017-ல் முதல் தரக் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஷுப்மன் கில் எப்படி 2020-லேயே தேர்வு செய்யப்பட்டார். 2016-17 சீசனில் 1310 ரன்களை 5 சதங்கள் மூலம் எடுத்த பிரியங்க் பஞ்சல் அப்போது எங்கே போனார்? ஏன் தேர்வு செய்யவில்லை? ஒரு வீரரின் ஆற்றலை அழிப்பது என்றால் என்ன என்பதை பிசிசிஐயிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். என்ன செய்வது ரோகித் சர்மா, ஷுப்மன் கில், பிரிதிவி ஷா போன்றோருக்கு இருக்கும் லாபி பிரியங்க் பன்ச்சலுக்கு இல்லாமல் போனதால் பாவம் கரியரில் ஒரு உச்சம் தொட வேண்டிய வயதில் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படுகிறார், அதுவும் பிளேயிங் லெவனில் இடமில்லை. இதுதாண்டா இந்திய கிரிக்கெட்.
better late than never என்ற ஆங்கில சொலவடை அநீதிக்கு நியாயம் கற்பிப்பதாகும். பிரியங்க் பஞ்சலைப் பொறுத்தவரை better late than never என்பது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிதான். இப்படித்தான் ராஜஸ்தான் வெல் பில்ட் வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங் பாவம் தன் தொழில் குடும்ப வர்த்தகம் எல்லாவற்றையும் விட்டு விட்டு இந்திய அணிக்கு ஆடும் கனவுடன் 2004-ல் அறிமுகமானார். ஆனால் 2014-ல் இங்கிலாந்தில் வாய்ப்பு கொடுத்தனர். பாவம் அலிஸ்டர் குக் விக்கெட்டை இவர் எடுத்திருந்தால் ஒருவேளை 10 டெஸ்ட்களாகவது ஆடியிருப்பார், அன்று இவர் பந்தில் கேட்சை விட்ட புண்ணியவான் இன்று இந்தியாவின் சிறந்த பீல்டர் ரவீந்திர ஜடேஜா!
பங்கஜ் சிங் 2 டெஸ்ட் மற்றும் ஒரேயொரு ஒருநாள் போட்டியில் ஆடியதோடு 15 ஆண்டுகால கிரிக்கெட் கனவு முடிந்தது. முதல் தர கிரிக்கெட்டில் 472 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் பங்கஜ் சிங். ஆனால் இன்று நாம் தோனி, கோலி, ரோகித் சர்மா என்று பேசிக் காலத்தை கழிக்கிறோம். பிரியங்க் பஞ்சல், கருண் நாயர், பங்கஜ் சிங், அமோல் மஜூம்தார், முரளிதரனுக்கு முன்பே பந்தை ஸ்கொயராக திருப்பும் ஹைதராபாத் ஆஃப் ஸ்பின்னர் கன்வல்ஜித் சிங், பத்மாகர் ஷிவால்கர், ரஜிந்தர் கோயெல், சுதாகர் ராவ், மிகவும் நீளமான அநீதிகளின் பட்டியல் உள்ளது. இன்னும் எத்தனை எத்தனையோ வீரர்கள் இந்திய அணிக்கு ஆடாமலேயே கனவு நிறைவேறாமல் கிரிக்கெட்டை விட்டே போய்விட்டனர்.
இனியாவது திருந்துமா இந்திய அணித்தேர்வு? ஆற்றலழிப்பு அநீதிகள் தொடர்கதையாகாமல் தடுக்குமா பிசிசிஐ?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rohit sharma