2011 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது குறித்து கோப்பையை வென்ற பிறகு அப்போதைய அணித்தலைவர் தோனி தான் எடுத்த சில பல முடிவுகள் குறித்து மனம் திறந்து பேசினார்.
இறுதிப்போட்டியில் அஸ்வின் இல்லை, பிரமாத பவுலர் ஸ்ரீசாந்த் இருந்தார், யுவராஜ் தொடர்ந்து பிரமாதமாக ஆடி மேட்ச் வின்னிங் இன்னிங்சை ஆடிவரும் சூழ்நிலையில் இறுதிப் போட்டியில் அன்று திடீரென தோனி இறங்கியது என்று பல முடிவுகள் சர்ச்சைகளைக் கிளப்பின. ஆனால் வெற்றி அத்தனை கேள்விகளையும் மூடிமறைத்தது. இந்திய அணி உலக சாம்பியன் ஆனது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது தோனி படை.
நம்பர் 5 இல் இறங்கிய தோனி, இலங்கையின் ஸ்பின் அச்சுறுத்தலைக் காலி செய்தார். இவரும் கம்பீரும் படிப்படியாக வெற்றியை நோக்கி நகர்த்தினர். கடைசியில் 17 பந்துகளில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில் லஷித் மலிங்காவை மிட் விக்கெட் பவுண்டரிக்கு இருமுறை விரட்டினார் தோனி, பிறகு நுவான் குலசேகராவை அந்த பிரபல வின்னிங் சிக்ஸ் விளாசி மட்டையை போர்வீரன் போல் சுழற்றினார் தோனி.
கோப்பையை வென்ற பிறகு தோனி கூறியதாவது:
இன்று சிலபல முடிவுகளை எடுத்தேன். வெற்றி பெறவில்லை எனில் என்னை நோக்கி கேள்வித் தோட்டாக்கள் பாய்ந்திருக்கும், அஸ்வினை ஏன் எடுக்கவில்லை, ஸ்ரீசாந்த் ஏன் இடம்பெற்றார்? ஏன் யுவராஜுகு முன்னால் நீ இறங்கினாய்? போன்ற கேள்விக்கணைகள் என்னை நோக்கிப் பாய்ந்திருக்கும். ஆனால் அதுதான் என்னை உண்மையில் உத்வேகப்படுத்தியது.
முந்தைய போட்டிகளில் எனக்கு அழுத்தம் நிறைய ஏற்பட்டது. அதனால்தான் இறுதிப்போட்டியில் முன்னால் இறங்க முடிவு செய்தேன், பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் சரி என்றார், சீனியர் வீரர்களும் சரியென்றனர். என்னை நானே நிரூபிக்க வேண்டிய தேவை இருந்தது.
விராட் கோலி, கவுதம் அபாரமாக பேட் செய்தனர், ஏகப்பட்ட சிங்கிள்களை எடுத்தனர். பிறகு பனிப்பொழிவின் உதவியுடன் ஸ்பின்னர்களுக்கு நெருக்கடி கொடுத்தோம். கவுதம் கம்பீர் பெரிய சதம் எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். என்றார் தோனி.
பிறகு கோப்பையுடன் மேடைக்குச் சென்றார். இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு அறிவித்தது பிசிசிஐ. கேரி கர்ஸ்டன், மற்ற உதவிப்பயிற்சியாளர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு. அணித்தேர்வாளர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு.