Home /News /sports /

சைலண்ட் மோடில் இருவர்... ரசிகர்கள் சந்தேகம்...! தோனி ஓரங்கட்டப்படுவதற்கான பின்னணியில் யார்...?

சைலண்ட் மோடில் இருவர்... ரசிகர்கள் சந்தேகம்...! தோனி ஓரங்கட்டப்படுவதற்கான பின்னணியில் யார்...?

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி

 • News18
 • Last Updated :
  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மகேந்திர சிங் தோனி, ஓரங்கட்டப்படுவதற்கான பின்னணியில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இருப்பதாக அவரின் ரசிகர்கள் கருதுகின்றனர். ஆனால், உண்மை என்ன?

  இந்திய கிரிக்கெட்டில் வெற்றிக் கேப்டன்களாக உலா வந்தவர்கள் சவுரவ் கங்குலி மற்றும் மகேந்திர சிங் தோனி. களத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய கங்குலி, தனது அணியினரிடையே போர்க் குணத்தை விதைத்து, இந்திய கிரிக்கெட்டின் நவீன சிற்பியாக திகழ்ந்தார். ஆனால், இவருக்கு நேர் எதிரான குணாதிசயம் கொண்ட தோனி, களத்தில் அமைதியாகவும், தீர்க்கமாகவும் முடிவு எடுத்து, டி-20 உலகக்கோப்பை, ஒருநாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் சாம்பியன் கோப்பை ஆகியவற்றை இந்தியாவுக்கு வென்று கொடுத்துள்ளார்.

  கங்குலியால் அடையாளம் காணப்பட்டு, இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்தவர் தோனி. இருப்பினும், 2007 வாக்கில் கேப்டனாக தோனி பொறுப்பேற்றதும், ஒருநாள் அணியில் கங்குலிக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க மறுத்து வந்தார்.

  இதனால், 2008-ம் ஆண்டு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கங்குலி ஓய்வு முடிவு எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். தோனி மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணியை வழிநடத்த ஆரம்பித்ததும் மூத்த வீரர்களை ஓரம்கட்டத் தொடங்கினார்.  இதன் காரணமாக ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோர் 2012-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே, 2011 உலகக் கோப்பையில் ஜொலித்த யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கான முக்கியத்துவம் குறைந்தது.

  சீனியர் வீரர்கள் ஃபீல்டிங் செய்வதில் தடுமாறுவதாக தோனி வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இதன் காரணமாக, யுவராஜ், சேவாக், கம்பீர், ஹர்பஜன் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டனர்.

  தோனி கேப்டனாக இருந்த காலத்தில், 2013-ல் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே முறையாக அறிவிப்பு வெளியிட்டு ஓய்வுபெற்றார். அதேவேளையில், 2014-ல் டெஸ்ட் போட்டியில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வுபெற்ற போதும், டி-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வந்தார்.

  ஆனால், 2015-க்குப் பின் தோனியால் சர்வதேச போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. இதன் எதிரொலியாக, 2019 உலகக் கோப்பை கிரிக்கெட்டில், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிக்குப் பின் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

  தான், கேப்டனாக இருந்த போது முன்னணி வீரர்கள் உடல் தகுதியுடன் இல்லை என கூறி, அவர்களை புறக்கணித்தார். ஆனால், தற்போது இளைஞர்களுக்கு சவால்விடும் அளவிற்கு தோனி உடல் தகுதியுடன் இருந்த போதும், அணிக்கு வெற்றியை ஈட்டித்தரும் வகையில் அவரின் பேட்டிங் திறன் அமையவில்லை.

  இந்த நிலையில் தான், கடந்த 2019 நவம்பர் மாதம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார். அப்போது, தோனியின் எதிர்காலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கங்குலி, இதுதொடர்பாக கேப்டன் விராட் கோலியிடம் பேசவில்லை என்றார்.  இதன் தொடர்ச்சியாக அண்மையில் வெளியான பிசிசிஐ வீரர்களுககான ஒப்பந்தப் பட்டியலில் இருந்து தோனியின் பெயர் நீக்கப்பட்டது. இதுவே, அவர் ஓய்வு அறிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ மறைமுகமாக வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
  அத்துடன், ஒப்பந்தத்தில் தோனி பெயர் இடம்பெறாதது குறித்த கேள்விக்கும் கங்குலி பதிலளிக்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக கோலியும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இருவருமே அமைதியை பதிலாக வைத்துள்ளனர். எனவே, தோனியின் கிரிக்கெட் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்படுகிறது.

  அதேநேரம், ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனியின் ஆட்டத்தை பொறுத்து டி-20 உலகக் கோப்பை வாய்ப்பு குறித்து முடிவு செய்யப்படும் என தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்திருந்தார்.

  இதனால், வருகின்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தோனி, தனது திறமையை நிரூபித்து, மீண்டும், இந்திய அணிக்காக களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
  Published by:Sankar
  First published:

  Tags: MS Dhoni, Sourav Ganguly

  அடுத்த செய்தி