• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • இம்ரான் கான் எப்படிப்பட்டவர்? : ரவி சாஸ்திரி மனம் திறப்பு

இம்ரான் கான் எப்படிப்பட்டவர்? : ரவி சாஸ்திரி மனம் திறப்பு

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

ஸ்டார்கேஸிங் - பிளேயர்ஸ் இன் மை லைஃப் வெளியீட்டுக்காக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் தன் வாழ்நாளில் பார்த்த திறன் படைத்த மகா வீரர்கள் பற்றி பேசியுள்ளார், அதில் இம்ரான் கானின் அருமை பெருமைகளையும் எப்படி போட்டி மனப்பான்மை நிறைந்தவர் என்பதையும் விரிவாக மனம் திறந்து பேசியுள்ளார்.

 • Share this:
  கிரிக்கெட் ஆட்டத்தின் மிகப்பெரிய கேப்டன்கள் மற்றும் வீரர்களில் இம்ரான் கான் சிறந்தவர் என்ற எனது பார்வையை நியாயப்படுத்த பிற விளக்கங்களே தேவையில்லை என்று கூறும் ரவி சாஸ்திரி முதன் முதலில் இம்ரான் கான் ஆட்டத்தை 1978-ல் டிவியில் பார்த்ததாகத் தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிராக ஆட முடியாத வேகத்தில் வீசினார் இம்ரான் கான். பேட்டிங்கில் அவரது பிக் ஹிட்டிங் குறிப்பாக கராச்சியில் 3வது டெஸ்ட்டில் அவர் அடித்த அடியே அவரை இந்தியாவிலும் பிரபலமாக்கியது என்றால் மிகையாகாது என்கிறார் ரவிசாஸ்திரி.

  ரவிசாஸ்திரி மனம் திறந்து கூறியதாவது: “அடுத்ததாக பாகிஸ்தான் இந்தியா வந்த போது வான்கடே ஸ்டேடியத்தில் நார்த் ஸ்டேண்டில் எனக்கு ஒரு இடம் கிடைப்பதை உறுதி செய்தேன். பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்கள் பட்டாளம். அப்போது இம்ரான் கான் தான் பெரிய கவர்ச்சி, கிரிக்கெட் காரணங்களுக்காகவும் கிரிக்கெட் அல்லாத காரணங்களுக்காகவும். ஆனால் இம்ரான் கான் காயமடைந்து பவுலிங் வீசாமல் போனார், பாம்பேயில் இந்தியா வென்றது, தொடரை பாகிஸ்தான் இழந்தது. அந்த இந்திய அணி உறுதியான ஒரு இந்திய அணி.

  ஆனால் 1982-83-ல் நாங்கள் பாகிஸ்தான் சென்ற போது இம்ரான் கான் கேப்டன், அந்த இந்திய அணியில் நானும் இருந்தேன். அப்போதுதான் 22 அடியில் அவரது பேட்டிங் பவுலிங் திறமைகளைக் கண்டு அசந்து போனேன். 1980-களின் மத்தியில் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இம்ரான் கான் என்று எந்த வித தயக்கமும் இல்லாமல் நான் கூறுவேன். ஸ்விங், வேகம் உண்டு, பந்தை தாமதமாக ஸ்விங் செய்து அச்சுறுத்துவார். அந்தத் தொடரில் அவர் காயமடைந்த பிறகு 2 ஆண்டுகள் அவரால் வீச முடியவில்லை, இல்லையெனில் சர்வ சாதாரணமாக அவர் 150-160 கிமீ வேக உச்சத்தை தொட்டிருப்பார்.

  ஸ்விங்கில் அவரது கட்டுப்பாடு அசாத்தியமானது, உள்ளே கொண்டு வரும் இன் - டிப்பர்களில் கைதேர்ந்த அவர் பேட்ஸ்மென்களுக்கு கிரீசில் நரகத்தைக் காட்டக்கூடியவர். ரிவர்ஸ் ஸ்விங் பற்றி அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை. பிட்ச், நாடு, மண்ணுக்கு ஏற்றவாறு லெந்த், ஸ்விங், வேகத்தை மாற்றக்கூரிய அசாத்திய திறமைசாலி இம்ரான். 1982-83-ல் இம்ரான் எங்களை சீரழித்தார் (40 விக்கெட்டுகள்). இத்தனைக்கும் இங்கு கவாஸ்கர், அமர்நாத் உள்ளிட்ட அனுபவ பேட்டிங் வரிசை இருந்தது.  6வது டெஸ்ட்டில் ஓபனிங் இறங்கினேன் நான், அப்போது தான் அவரது முழுத்திறமையையும் பார்க்க முடிந்தது. நான் என் முதல் டெஸ்ட் சதத்தை அடித்தேன். ஆனால் அவர் பவுலிங் போடும் போது நான் பயப்படாத ஒரு பந்து கூட இல்லை என்று அடித்துச் சொல்ல முடியும். பாகிஸ்தான் ஏற்கெனவே தொடரை வென்றிருந்தனர், இம்ரான் காயமடைந்தாலும் அவரது ஓய்வு ஒழிச்சலில்லாத கிரிக்கெட் ஆசையைக் கண்டு வியந்து போனேன். அடுத்த 6-7 ஆண்டுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட், ஒருநாள் என்று அதிக போட்டிகளில் ஆடியது, அவை அனைத்திலும் மற்றவர்களை விட இம்ரான் கான் உயரத்தில் இருந்தார். இந்தியாவுக்கு எதிராக அவரது ஆக்ரோஷமே தனிதான்.

  இம்ரான் பந்து வீசக் கூடாது என்றேன் அதற்கு அவர் பிறகு பழித்தீர்த்தார்:

  1987-ல் அண்டர்-25 அணியை பாகிஸ்தானுக்கு எதிராக நான் கேப்டனாக வழிநடத்திய போது, இம்ரான் கான் லேட்டாக வந்தார். டிராபிக்கில் மாட்டிக் கொண்டேன், என்று மன்னிப்பும் கேட்டார், ஆனால் இறங்கியவுடனே பந்து வீசவும் ஆசைப்பட்டார், ஆனால் அது விதிமுறைகளுக்கு எதிரானது என்று நான் அவர் உடனே வீசக்கூடாது என்று மறுத்தேன். நடுவர்கள் மழுமாறினர், ஆனால் நான் நடுவர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டேன், அவர் வீசக்கூடாது நீங்கள் உங்கள் கடமையை ரூல் படி செய்யுங்கள் என்றேன். அப்போது கடுப்பான இம்ரான் கான், என்ன கூறினார் தெரியுமா, வாசிம் அக்ரம் மற்றும் மற்றவர்களிடம் என்னை பவுன்ஸ் செய்து காயப்படுத்த வேண்டும் என்பதே.

  இந்தச் சம்பவத்தை இம்ரான் மறக்கவில்லை, பிறகு ஷார்ஜாவில் ஆடும்போது எனக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட பை-ரன்னர் வேண்டுமென்று கேட்டேன், அந்தச் சம்பவத்தை மறக்காத இம்ரான் எனக்கு பை ரன்னர் கொடுக்க மறுத்தார். அப்போது 100 ரன்களுக்கு விக்கெட் எதையும் நாம் இழக்கவில்லை. ஆனால் பை ரன்னர் மறுத்ததால் நான் ஆட்டமிழந்தேன் விக்கெட்டுகள் சரமாரியாக விழ 240 ரன்களை விரட்ட முடியாமல் தோற்றோம். களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் இம்ரான் வெளியே நட்புடன் பழகுவார். ஆனால் சகஜமாக அனைவருடனும் பழகக்கூடியவர் அல்லர். அவரை மேட்டுக்குடி என்று பலரும் வர்ணித்தனர், ஆடம்பரம் என்றனர், ஆனால் என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு ரிசர்வ்டு கேரக்டர்.

  அந்தக் காலக்கட்டத்தில் இருந்த 4 ஆல்ரவுண்டர்களில் இம்ரான் கான் சிறந்த பேட்ஸ்மென், உத்தி ரீதியாக பிரமாதமாக ஆடுவார், எந்த டவுனிலும் அவர் இறங்கலாம். வர்ணனியில் வாசிம் அக்ரமுடன் இருக்கும் போது இம்ரான் கான் கொடுக்கும் லெக்சர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார், விக்கெட்டை தூக்கி எறிந்தாலோ பவுலிங் சரியாக வீசவில்லை என்றாலோ பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் இம்ரான் கான் தன் உரைகளை நிறுத்தமாட்டார். உலகக்கோப்பையை அவர் 1992-ல் வெல்லும் போது அவர் கால்வாசி பவுலராகக் கூட இருக்கவில்லை, ஆனால் அந்த மன உறுதி, போட்டி மனப்பான்மை சிறிதும் குன்றாதவராக இருந்தார். தானே முன்னால் இறங்கி அணியை சிதறாமல் வழிநடத்தினார்.

  கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு அரசியலில் சேர்ந்தார், நான் இது பற்றி வாசிம் அக்ரமிடம் கேட்டேன், ஒரு வேளை இம்ரான் தவறிழைக்கிறாரோ என்றேன், அதற்கு வாசிம் அக்ரம், “இம்ரான் கான் ஒன்றை முடிவெடுத்து விட்டார் என்றால் அதிலிருந்து பின் வாங்கும் பழக்கம் கிடையாது. அவருக்கு 100 வயதானாலும் சரி பின் வாங்க மாட்டார் என்றார். இன்று இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இருக்கிறார். தன் அம்மாவின் நினைவாக கட்டிய கேன்சர் மருத்துவமனையே இம்ரான் கானின் மன உறுதிக்கும் விடா முயற்சிக்கும் சான்று” இவ்வாறு இம்ரான் கானை புகழ்ந்து தள்ளினார் ரவி சாஸ்திரி.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: