ஐபிஎல் என்பது கிரிக்கெட் என்பதிலிருந்து மாறுபட்டு கிரிக்கெட்டையே ஆக்ரமிக்கும் ஒரு தொழிலாக, வர்த்தகமாக ராட்சத உருவமெடுத்துள்ளது, இதனால் டேவிட் வார்னர் போன்ற வீரர் ஒருநாள் ‘நான் ஆஸ்திரேலியாவுக்கு ஆடப்போவதில்லை’ என்று கூறினால் அது எத்தனை பெரிய இழப்பு என்று கூறியிருந்தார் ஆடம் கில்கிறிஸ்ட். இந்த உண்மை நம் சுனில் கவாஸ்கருக்கு கோபத்தைப் பொத்துக் கொண்டு வரவழைத்தது. ‘எங்கள் ஐபிஎல்-ஐ சொல்ல நீ யார்? உன் வேலையைப் பார்’ என்று கவாஸ்கர் பதிலுரைத்தார்.
ஆனால் இன்று நடந்ததென்ன? நியூசிலாந்து கிரிக்கெட்டே தனக்கு வேண்டாம், மைய ஒப்பந்தத்திலிருந்து தன்னை விடுவிக்கும் படி நியூசிலாந்தின் ஆகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் கேட்டு விண்ணப்பிக்க, அவரை முடிவை மாற்றிக்கொள்ளுமாறு பல சுற்றுக்கள் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் பேச்சு வார்த்தை நடத்த கடைசியில் அது தோல்வியில் முடிய நியூசிலாந்து கிரிக்கெட்டிலிருந்தே ட்ரெண்ட் போல்ட் விடுவிக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுதும் தனியார் பணமழை லீகுகள் குறைந்த உழைப்பில் பெரிய சம்பளத்தைக் கொட்டி கொடுக்கின்றன. காரணம், பார்வையாளர்களுக்கு டி20 மேல் இருக்கும் நேயம், தேச, பிரதேச, நாட்டுப்பற்று எல்லைகளைக் கடந்த தனிமனித சுயநலமாக பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.
தனியார் கிரிக்கெட்டினால் தென் ஆப்பிரிக்கா ஏ.பி.டிவில்லியர்ஸ் என்ற மேதையை இழந்தது, கிறிஸ் மோரிஸ் என்ற சிறந்த ஆல்ரவுண்டரை இழந்தது.. இலங்கை மலிங்காவை இழந்தது, வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெய்லை இழந்தது., பட்டியல் இன்னும் நீளும்.
கிரிக்கெட் மட்டுமல்ல, எந்த ஒரு விளையாட்டும் உடல், மன லயத்தையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்துவதோடு வாழ்க்கையின் முக்கியமான விழுமியங்களை, மதிப்பீடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே கிரிக்கெட் பணத்துக்காகவும் அல்ல, கிரிக்கெட் கிரிக்கெட்டுக்காகவும் அல்ல, கிரிக்கெட் கற்றுக்கொடுக்கும் தன்னொழுக்கம், கட்டுக்கோப்பு, நேர்மை, நீதி, நியாய உணர்வுகள், ஆகியவற்றோடு நாட்டோடு முடிந்து விடாத சர்வ மனித நேயமாக, தேசங்கடந்த, பிரதேசம் கடந்த, ஜாதி, மத பேதங்கள் கடந்த நாமெல்லோரும் மனித குலம் என்ற சமத்துவ உணர்வை சமபாவனையை மலரச் செய்யும் உயரிய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுப்பது, பணம் இதில் இரண்டாம் பட்சம் அல்ல கடைசி பட்சம்தான்.
ஆனால் இன்று பணமழை தனியார் கிரிக்கெட்டுகள், டி20 லீகுகள் வீரர்களை வெறும் cricket being- என்பதாக சுருக்கி விட்டது. இதற்கு மாறாக, Being of cricket என்பது எந்த ஒரு விளையாட்டிலும் அதிலிருந்து உருவாகி அதனைக் கடந்து நிற்கும் உயரிய மனித விழுமியங்கள் கொண்டதாக விளையாட்டை வாழ்வது. இனி அது சாத்தியமில்லை, தேசங்கடந்த பிரதேச குறுகிய எல்லைகள் கடந்ததாக இருந்த கிரிக்கெட் இப்போது வெறும் பணம் பண்ணும் சுயநலமிகளை கட்டவிழ்த்து பரந்துபட்ட நலன்கள், விழுமியங்களிலிருந்து தன்னலமாக சுருங்கி விட்டது, வீரர்களை சுருக்கி விட்டது. இது தேசிய கிரிக்கெட்டையும் பாதிப்படையச் செய்கிறது என்பது மட்டுமல்ல விஷயம்.
இன்று, நான், நியூசிலாந்து, என் தாய்நாடு, கிரிக்கெட் என்று ட்ரெண்ட் போல்ட் கண்ணீர் மல்கக் கூறி செண்டிமெண்ட் ஆடினாலும் அவர் தொடங்கி வைத்திருப்பது வேறொரு ஆட்டத்தையே.
இன்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், இவரைப்போன்று வேறு எந்த வீரரும் முடிவெடுத்து விடாதீர்கள் என்று கெஞ்சிக் கூத்தாடும் நிலையே ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டை இப்படித்தான் ஐபிஎல்-ம் அழித்தது, கோல்பாக் டீல் என்று இங்கிலாந்து உள்நாட்டு அணி கிரிக்கெட்டும் அழித்தது. மேற்கிந்திய கிரிக்கெட்டை அமெரிக்க என்பிஏ என்ற தனியார் கூடைப்பந்து அழித்தது. இன்று வெஸ்ட் இண்டீஸில் அஸ்வின் கூறுவது போல் முதல் தர கிரிக்கெட்டையே காணோம்!! கரீபியன் பிரீமியர் லீக் தான் அங்கு உள்ள உள்நாட்டு கிரிக்கெட், இது தனியார் டி20 லீக் ஆகும். இங்கிலிஷ் பிரீமியர் லீக் என்ற ஒன்று வணிக ரீதியாக பெரிய சக்சஸ், ஐபிஎல் போன்று உருவானது, இன்று உலகக்கோப்பைக் கால்பந்தைக் காட்டிலும் இங்கிலிஷ் பிரிமியர் லீக், கோலோச்சுகிறது, ஆனால் இங்கிலாந்து கால்பந்து என்னவானது 1964க்குப் பிறகு உலகக்கோப்பையை இன்னும் வெல்ல முடியவில்லை.
ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் சர்வதேச விளையாட்டில் பெரிய அளவில் ஆடினால்தான் பெரிய லீகுகளில் அணிகள் அழைக்கின்றன என்று கூறப்பட்டாலும் தென் ஆப்பிரிக்காவின் இளம் வீரர்கள் ஸ்டப்ஸ் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிக்காமலேயே பெரிய நட்சத்திரங்களாகி விடுகின்றனர். கிறிஸ் கெய்ல் மே.இ.தீவுகள் கிரிக்கெட்டை விட்டு தனியார் கிரிக்கெட்டை பிரதானப்படுத்தினார், மலிங்கா அன்றே டெஸ்ட் கிரிக்கெட்டா வேண்டவே வேண்டாம் என்று ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை அளித்தார்.
இதனாலெல்லாம் இலங்கை கிரிக்கெட் எப்படி பாதிக்கப்பட்டது என்பதை நாம் இங்கிருந்து கொண்டு சொல்ல முடியாது, அதே போல்தான் இப்போது நியூசிலாந்து கிரிக்கெட்டில் நடக்கிறது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டை அழித்து வருகிறது, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அழிந்தே விட்டது.
ஆகவே ட்ரெண்ட் போல்ட் என்ற தனி நபர் ஏற்கெனவே தொடங்கப்பட்ட ஒரு ஆட்டத்தை மேலும் வலுப்படுத்திவிட்டார், ஆனால் இது கிரிக்கெட்டை வலுவிழக்கச் செய்யும், சர்வதேச கிரிக்கெட் அழிவது என்பது அது சார்ந்த மனித வாழ்வியல் விழுமியங்களையும் சேர்த்து அழிப்பது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். போட்டி, பொறாமை, வன்மம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டது தனியார் லீகுகள். அதற்கும் சர்வதேச விளையாட்டுக்கும் மதிப்பீட்டளவில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது.
ஆகவே உலகிற்கு சொல்ல விரும்புவது என்னவெனில் ட்ரெண்ட் போல்ட் வழியை பின்பற்றாதீர்கள் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தன் மற்ற வீரர்களுக்குச் சொல்வதைத்தான். ஆடம் கில்கிறிஸ்ட் சொன்ன போது கவாஸ்கர் கோபமடைந்தது அவரது குறுகிய மனோபாவத்தைக் காட்டுவதே. கிரிக்கெட்டையும் அது சார்ந்த விழுமியங்களையும் வீரர்களையும் குறுகிய மனோபாவத்திலிருந்து மீட்க வேண்டும் என்பதே கிரிக்கெட் பண்டிதர்களின் கருத்தாக இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AB de Villiers, Adam Gilchrist, Chris gayle, IPL, Lasith Malinga