முகப்பு /செய்தி /விளையாட்டு / வெலிங்டன் டெஸ்டில் கேன் வில்லியம்சன் சதம்… இங்கிலாந்து வெற்றி பெற 248 ரன்கள் இலக்கு

வெலிங்டன் டெஸ்டில் கேன் வில்லியம்சன் சதம்… இங்கிலாந்து வெற்றி பெற 248 ரன்கள் இலக்கு

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

நாளை கடைசி ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், இரு தரப்புக்கும் வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெலிங்டனில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்துள்ளார். இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 248 ரன்களை நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. 2ஆவது டெஸ்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். தொடக்க பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தாலும், ஜோ ரூட் – ஹேரி ப்ரூக் இணை அற்புதமாக விளையாடி 4 ஆவது விக்கெட்டிற்கு 302 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 435 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 53.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டிம் சவுத்தி 49 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 73 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 226 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஃபாலோ ஆன் ஆன நியூசிலாந்து அணி 2 ஆவது இன்னிங்சை விளையாடியது. நேற்றைய 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் நியுசிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய அந்த அணியின் வீரர்கள், கேன் வில்லியம்சன், டாம் ப்ளண்டெல் ஆகியோர் ரன்களை குவித்து நியூசிலாந்து அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர். 282 பந்துகளை எதிர்கொண்ட வில்லியம்சன் 132 ரன்களும், விக்கெட் கீப்பர் டாம் ப்ளெண்டல் 166 பந்துகளில் 90 ரன்களும் எடுத்தனர்.

162.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 483 ரன்களை 2ஆவது இன்னிங்ஸில் எடுத்தது. இதையடுத்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். இன்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 11 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 48 ரன்கள் எடுத்துள்ளது. பென் டக்கெட் 23 ரன்களுடனும், ஒல்லியே ராபின்சன் 1 ரன் எடுத்தும் களத்தில் உள்ளனர். நாளை கடைசி ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், இரு தரப்புக்கும் வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது.  2 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

First published:

Tags: Cricket