டி20 தொடரில் இந்தியாவை வீழ்த்தி அதே தன்னம்பிக்கையுடன் உ.கோப்பையையும் வெல்வதுதான் திட்டம்: ஜோஸ் பட்லர்

ஜோஸ் பட்லர்.

இந்த டி20 தொடரில் இந்தியாவை வீழ்த்தி அந்த தன்னம்பிக்கையை உலகக்கோப்பைக்கு எடுத்துச்சென்று அதிலும் வெற்றி பெற முயல்வதுதான் எங்கள் திட்டம்.

 • Share this:
  இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்ல இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு என்று இங்கிலாந்து அதிரடி வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

  இந்தியாவில் வரும் அக்டோபர்-நவம்பரில் ஐசிசி நடத்தும் 7வது டி20 உலகக்கோப்பை நடைபெறவிருக்கிறது. 2007-ல் பெரிய வெற்றிகளைப் பெற்று தோனி தலைமையில் முதல் உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி, 2014-ல் வங்கதேசத்தில் இறுதி வரை பயணித்தது. 2016-ல் இந்தியாவில் நடந்த தொடரில் அரையிறுதியோடு வீடு திரும்பியது.

  இந்தத் தொடருக்காகத்தான் அணிகள் அதிகம் டி20 போட்டிகளில் ஆடுகின்றன. இங்கிலாந்துடன் நாளை டி20 தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் இங்கு நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  அதுவும் ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா, ஹர்திக் பாண்டியா செம பார்மில் இருந்தார், கோலி அபாரமாக ஆடினார்.

  இந்நிலையில் ரிஷப் பந்த், ராகுல், ரோஹித் சர்மா, ஷ்ரேயஸ் அய்யர், பாண்டியா போன்ற அதிரடிக் கூட்டணியை வைத்துக் கொண்டு, பும்ரா, ஷமி, சாஹல், குல்தீப் அல்லது வாஷிங்டன் சுந்தரை வைத்துக் கொண்டு கோப்பையை வெல்ல முடியவில்லை எனில் அது கோலியின் கேப்டன்சி போதாமையையே வெளிப்படுத்துவதாக இருக்கும்.

  இந்நிலையில்தான் ஜோஸ் பட்லர் கூறும்போது, “உலகக்கோப்பைகளைப் பொறுத்தவரை வலுவான் உள்நாட்டு அணிக்கே கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகம் அந்த வகையில் இந்தியாவுக்கு இந்த முறை வாய்ப்புகள் அதிகம்.

  உலகக்கோப்பை டி20-யில் பல பிரமாதமான அணிகள் இருந்தாலும் நடத்தும் நாடுகள் நன்றாக ஆடிவந்துள்ளன. இந்தியா அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக உள்ளது, டி20 மட்டும் வித்தியாசமா என்ன?

  அதுவும் இந்தியாவில் ஆடும்போது நிச்சயம் இந்தியாவுக்குத்தான் அதிக வாய்ப்பு என்றே கூறுவேன்.

  இந்த டி20 தொடரில் இந்தியாவை வீழ்த்தி அந்த தன்னம்பிக்கையை உலகக்கோப்பைக்கு எடுத்துச்சென்று அதிலும் வெற்றி பெற முயல்வதுதான் எங்கள் திட்டம். எனவே உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் இங்கு 5 போட்டிகளில் ஆடுவது பிரமாதமான ஒரு வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளது.

  அதுவும் புதிய ஸ்டேடியம் அகமதாபாத் உலகக்கோப்பை டி20-யில் பெரும்பங்கு வகிக்கும் நிலையில் வேறு எந்த அணிக்கும் கிடைக்காத வாய்ப்பு இங்கு ஆட இங்கிலாந்துக்கு கிடைத்துள்ளது, இதை நிச்சயம் பயன்படுத்துவோம்.” என்றார் பட்லர்.
  Published by:Muthukumar
  First published: