பவுலிங்கில் தீவிரத்தன்மை இல்லை: தோல்வி குறித்து விராட் கோலி

கோலி

ராகுல் ஒரு சாம்பியன் பிளேயர் தொடர்ந்து அவர் எங்களின் முக்கிய பேட்ஸ்மெனாகவே இருப்பார் என்பதில் ஐயமில்லை. டி20 என்பது இன்ஸ்டிங்க்ட் சம்பந்தப்பட்ட ஆட்டம், ஒரு சில ஷாட்கள் மாட்டி விட்டால் போதும் எனவே ராகுலுக்கும் அதுதான் பிரச்னை, விரைவில் சிக்கலிலிருந்து மீள்வார்.

 • Share this:
  அகமதாபாத் டி20 போட்டியில் இந்தியா நேற்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது, வழக்கம் போல் பிட்சில் பந்துகள் கொஞ்சம் எழும்பி வேகமாக வந்தால் சிக்கல்தான், கோலி தவிர வேறு யாரும் ஆட முடியவில்லை.

  மார்க் உட் எக்ஸ்பிரஸ் பவுலர். மணிக்கு 150 கிமீ வேகம் என்பது சர்வ சாதாரணமாக அவருக்குக் கைகூடுகிறது. இதனால் ராகுல் ஸ்டம்பை இழந்தார். இன் கட்டர் அவருக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ரோகித் சர்மா ஒதுங்கினார், இறங்கினார் உடலுக்கு வந்த ஷார்ட் பிட்ச் பந்தை நேராக கொடியேற்று ஆர்ச்சரிடம் கேட்ச் ஆனார்.

  இஷான் கிஷனை தொடக்கத்தில் இறக்கவில்லை. பவர் ப்ளே ஸ்பெஷலிஸ்ட் வாஷிங்டன் சுந்தருக்கு கொடுக்காமல் சாஹலிடம் கொடுத்து பட்லர் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் விளாசி எழுச்சி பெறச் செய்தது விராட் கோலியின் மட்டமான, தான் தோன்றித்தனமான கேப்டன்சியினால்தான்.

  ரிஷப் பந்த்தை கோலி இழுத்து விட்டு ரன் அவுட் ஆக்கி விட்டார். கடைசியில் விராட் கோலி அதியற்புதமாக ஆடினார். சில சிக்சர்கள் ஆச்சரிய ரகம், கிளாஸ் ரகம் கலந்தவை கடைசி 5 ஓவர்களில் சிக்சர்கள் உட்பட 9 முறை பவுண்டரியைக் கடந்தது அவர் ஷாட்கள். ஆனாலும் கடைசியில் 156 ரன்கள் போதவில்லை. காரணம் பந்துவீச்சில் உயிரோட்டமே இல்லை, செத்த பவுலிங்காக உள்ளது.

  இதைத்தான் கோலி இரண்டாவது பாதியில் தீவிரத்தன்மை இல்லை என்றார்.

  அவர் கூறியதாவது, “எனது இன்னிங்ஸ் அணிக்கு உதவினால் எனக்கு மகிழ்ச்சிதான். அணிக்கு உதவாத இன்னிங்சை ஆட நான் விரும்ப மாட்டேன். இங்கிலாந்து பவுலர்களிடம் கூடுதல் வேகம் இருந்தது, நல்ல இடங்களில் அவர்கள் பந்தை பிட்ச் செய்தார்கள்.

  கூட்டணி தான் முக்கியம் 2 கூட்டணிகளை அமைத்தோம். ஹர்திக் பாண்டியாவினால் கூட நேராக ஷாட்களை ஆட முடியவில்லை, பிட்ச் கொஞ்சம் கடினமான பிட்ச். நன்றாக செட் ஆகி பிறகு ரன்கள் அடிக்க வேண்டிய பிட்ச் இது. 2 போட்டிகளுக்கு முன்பு நான் பார்மில் இல்லை, இப்போது என் பாணிக்குத் திரும்பியுள்ளேன்.

  ராகுல் ஒரு சாம்பியன் பிளேயர் தொடர்ந்து அவர் எங்களின் முக்கிய பேட்ஸ்மெனாகவே இருப்பார் என்பதில் ஐயமில்லை. டி20 என்பது இன்ஸ்டிங்க்ட் சம்பந்தப்பட்ட ஆட்டம், ஒரு சில ஷாட்கள் மாட்டி விட்டால் போதும் எனவே ராகுலுக்கும் அதுதான் பிரச்னை, விரைவில் சிக்கலிலிருந்து மீள்வார்.

  டாஸில் தோற்றால் வருவதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இங்கிலாந்து பவுலர்கள் சரியான திசையில் சரியான இடத்தில் வீசினர், அதுவும் கூடுதல் வேகம் இருந்ததா அது அவர்களுக்கு பெரிய ஆயுதமாக உள்ளது. 2வது பாதியில் பவுலிங்கில் தீவிரம், ஆக்ரோஷம் இல்லை. பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியாவுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் பொறுப்பு அளிக்கலாம் என்று கருதுகிறோம், பேட்டிங்கில் அவரால் என்ன செய்யமுடியும் என்பதை நாம் அறிவோம்.

  இவ்வாறு கூறினார் கோலி.
  Published by:Muthukumar
  First published: