• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • WC T20 Final : கோப்பையை வெல்ல ஆஸி.-க்கு 173 ரன்கள் இலக்கு

WC T20 Final : கோப்பையை வெல்ல ஆஸி.-க்கு 173 ரன்கள் இலக்கு

48 பந்துகளை எதிர்கொண்ட கேன் வில்லிலயம்சன் 3 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்தார்.4 ஓவர்கள் வீசிய ஆஸி. வீரர் மிட்செல் ஸ்டார்க் 60 ரன்கள் கொடுத்து எதிரணிக்கு உதவிகரமாக இருந்தார்.

  • Share this:
    டி20 உலகக்கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலியாவுக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.

    உலகக்கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டி ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30-க்கு தொடங்கியது. இந்த தொடரில் பெரும்பாலும் 2வது பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற்று வரும் நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் பவுலிங்கை தேர்வு செய்தார்.

    நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்திலும், டேரில் மிட்செலும் களத்தில் இறங்கினார். 4-வது ஓவர் முடிவில் மிட்செல் (11 ரன் 8 பந்து 1 சிக்ஸ்), ஹசல்வுட் பந்தில் கீப்பர் மேத்யூ வடேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பின்னர் கேப்டன் வில்லியம்சனும், குப்திலும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்கத்திலேயே விக்கெட் விழுந்ததால் பொறுப்புணர்ச்சிக்கு அளவில்லாமல் விளையாடிய குப்தில், 35 பந்துகளில் 28 ரன்கள் (3 பவுண்டரி)எடுத்து வெளியேறினார். 10 ஓவர் முடிந்திருந்தபோது 19 பந்துகளை சந்தித்திருந்த வில்லியம்சன் 18 ரன்களை எடுத்திருந்தார்.

    அதன்பின்னர் அதிரடி ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து கேப்டன், சிக்சரும், பவுண்டரியுமாக வெளுத்தெடுத்தார். மேக்ஸ்வெல் வீசிய 13-வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்கள் பறக்க, அடுத்த ஓவரில் 32 பந்துகளில் அரைச்சதம் அடித்தார். அடுத்தடுத்த ஓவர்களிலும் கேப்டன் அதிரடியை தொடர்ந்ததால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. குறிப்பாக ஸ்டார்க் வீசிய 16-வது ஓவரில், வில்லியம்சன் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 22 ரன்களை எடுத்தார். 18-வது ஓவரின் 2-வது பந்தில் கிளென் பிலிப்ஸ் 18 ரன்கள் (17 பந்து 1 பவுண்டரி 1 சிக்ஸ்) எடுத்திருந்த நிலையில் ஹசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இதே ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட வில்லியம்சன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    48 பந்துகளை எதிர்கொண்ட கேன் வில்லிலயம்சன் 3 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை குவித்தது.

    பந்து வீச்சை பொருத்தளவில் ஹஸல்வுட், ஆடம் ஸாம்பா, பேட் கம்மின்ஸ் ஆகியோர் தங்களதுவேலையை கச்சிதமாக முடித்தனர். தலா 4 ஓவர்கள் வீதம் 12 ஓவர் வீசிய இவர்கள் மொத்தம் 69 ரன்களைக் கொடுத்தனர். ஹஸல்வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நியூசிலாந்துக்கு கடும் நெருக்கடி அளித்தார். 4 ஓவர்கள் வீசிய மிட்செல் ஸ்டார்க் 60 ரன்கள் கொடுத்து எதிரணிக்கு உதவிகரமாக இருந்தார். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: