வீணான கேட்ச் வாய்ப்பு: வாஷிங்டன் சுந்தர் - ஜானி பேர்ஸ்டோவ் இடையே களத்தில் சூடான மோதல்!!

வாஷிங்டன் சுந்தர்

கேட்ச் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்முனையில் இருந்த ஜானி பேர்ஸ்டோவ், சுந்தருக்கும், பந்துக்கும் இடையே வந்ததால் பந்து ஜானி பேர்ஸ்டோவின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது.

  • Share this:
நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியின் போது இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ்-க்கும் இடையே சூடான வார்த்தைப் போர் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்ற களிப்பில் இருந்த இந்திய அணி நேற்று இங்கிலாந்துடனான டி20 தொடரில் களமிறங்கியது. இதில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று துறைகளில் ஒன்றில் கூட இந்திய அணியால் சோபிக்க முடியாமல் போனது. இதன் காரணமாக 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி எளிமையான வெற்றியை ருசித்தது இங்கிலாந்து அணி.

இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டத்தை தவிர இந்திய அணி வீரர்களின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. ஆனால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோருக்கு இடையே மைதானத்தில் நடைபெற்ற காரசாரமான மோதல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இங்கிலாந்து அணி இன்னிங்ஸின் போது 14வது ஓவரை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வீசினார், இந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் சுந்தருக்கு எளிய கேட்சை ஒன்றை கொடுத்தார். ஆனால் அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்முனையில் இருந்த ஜானி பேர்ஸ்டோவ் சுந்தருக்கும், பந்துக்கும் இடையே வந்ததால் பந்து ஜானி பேர்ஸ்டோவின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. எளிதான கேட்ச்சை தவறவிட்டதால் அதிருப்தியடைந்த சுந்தர், ஜானி பேர்ஸ்டோவை நோக்கி ஏதோ பேச இருவருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும் களத்தில் இருந்த நடுவர் ஓடோடி வந்து இருவருக்கும் இடையிலான பதற்றத்தை தணித்தார்.ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் பின்னிலை வகிக்கிறது.

முன்னதாக இந்த போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டி20 போட்டிகளில் இந்தியா சார்பாக அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை பெற்றார் யுவேந்திர சாஹல். 46 போட்டிகளில் 60 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை அவர் பும்ராவிடம் இருந்து தட்டிப்பறித்தார். 50 போட்டிகளில் விளையாடிய பும்ரா மொத்தமாக 59 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
Published by:Arun
First published: