சென்னையில் தனக்கும் தனது மனைவிக்கும் நடந்த துயரமான சம்பவத்தையும், அந்த நேரத்தில் விமான நிலைய அதிகாரிகள் உறுதுணையாக இருந்ததையும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இவற்றை அவர் குறிப்பிட்டுள்ள சுல்தான் என்னும் சுயசரிதை புத்தகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த வாசிம் அக்ரம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். பேட்டிங்கிலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய வாசிம் அக்ரம், பல ஆட்டங்களில் ஆல் ரவுண்டராகவும் ஜொலித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் தனது நினைவுகளை சுல்தான் என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது- 2009 அக்டோபர் மாதம் எனது மனைவியுடன் சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது நான் சென்ற விமானம் எரிபொருள் நிரப்ப சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த சமயத்தில் எனது மனைவி மயக்கமுற்று சுய நினைவை இழந்தார். இதைப் பார்த்து நான் அழுதேன். எங்கள் இருவரிடமும் பாஸ்போர்ட் மட்டுமே இருந்தது. விசா இல்லை.
இருப்பினும், அங்கிருந்த அதிகாரிகள் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். விசா பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னார்கள். ஒரு மனிதனாகவும், கிரிக்கெட் வீரராகவும் இந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. இவ்வாறு தனது சுயசரிதையில் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இதுபோன்ற பல சுவாரசிய சம்பவங்களை வாசிம் அக்ரம்இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பின்னர் வாசிம் அக்ரமின் மனைவி ஹுமா முப்தி சென்னை தனியார் மருத்துவனையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket