முகப்பு /செய்தி /விளையாட்டு / என்ன ஒரு கேட்ச்.. வருத்தத்திலும் வாஷிங்டன் சுந்தரை கொண்டாடும் ரசிகர்கள்..!

என்ன ஒரு கேட்ச்.. வருத்தத்திலும் வாஷிங்டன் சுந்தரை கொண்டாடும் ரசிகர்கள்..!

வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தர்

4ஆவது ஓவரில் பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர், ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ranchi, India

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இருந்தாலும் இந்திய அணியில்  வாஷிங்டன் சுந்தர் பிடித்த கேட்ச்சை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மூன்று ஒருநாள் போட்டிகளையும் இந்தியா முழுமையாக கைப்பற்றிய நிலையில் , முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டாரில் மிட்சல் 59 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தார். 4ஆவது ஓவரில் பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர், நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரரான பின் ஆலனை விக்கெட் எடுத்தார். அதே ஓவரின் இறுதி பந்தை அவர் வீசிய போது அதை எதிர்கொண்ட மார்க் சாப்மன், அதை நேராக அடிக்க முயன்றார். வாஷிங்டன் சுந்தர் அந்த பந்தை தனது வலது பக்கமாக டைவ் செய்து ஒற்றை கையில் பிடித்தார். இவர் பிடித்த இந்த கேட்ச்சை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து பாராட்டியுள்ளது. இந்த கேட்சை ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.

இந்த போட்டியில் 177 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க மிடில் ஆர்டர் சற்று தாக்கு பிடித்தனர். எனினும் விக்கெட்டுகள் சரிந்ததால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் அரை சதமும் சூர்ய குமார் யாதவ் 47 ரன்களும் எடுத்தனர். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் நியூசிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

போட்டியில் தோல்வியடைந்த வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், வாஷிங்டன் சுந்தர் பிடித்த கேட்ச்சை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

First published:

Tags: Ind vs NZ, India vs New Zealand, Washington Sundar