மற்றவர்களுக்கு ஓய்வு கொடுக்க விராட் கோலி யார்?- ரோகித் சர்மா ‘ரெஸ்ட்’ விவகாரத்தில் சேவாக் விளாசல்

மற்றவர்களுக்கு ஓய்வு கொடுக்க விராட் கோலி யார்?- ரோகித் சர்மா ‘ரெஸ்ட்’ விவகாரத்தில் சேவாக் விளாசல்

சேவாக் - ரோகித் சர்மா.

“ரோகித் சர்மா 2 போட்டிகள் ஓய்வு எடுப்பார் என்று கூறப்பட்டது. இது விராட் கோலிக்கு பொருந்தாதா? ஏன் அவர் ஓய்வு எடுக்கக் கூடாது? ஒரு கேப்டனாக அவர் அடுத்த 2-3 போட்டிகளில் நான் ஓய்வு எடுக்கிறேன் என்று கூறுவார் என்று நான் நம்பவில்லை.

  • Share this:
ரோகித் சர்மாவுக்கு முதலிரண்டு போட்டிகளில் ஓய்வு அளித்துள்ளதாக விராட் கோலி தெரிவித்தது சேவாக் பார்வையில் படுமோசமான முடிவாகியுள்ளது, கோலியை சேவாக் கடுமையாகச் சாடியுள்ளார்.

கோலி சொல்வதொன்று செய்வதொன்றாகி வருகிறது, ரோகித் சர்மாவுடன் ராகுல் தொடக்க வீரராக இறங்குவார் என்று கூறிவிட்டு ரசிகர்களின் ஏமாற்றத்துக்கு இணங்க்க முதல் இரண்டு போட்டிகளில் ரோகித்துக்கு ஓய்வு என்று அறிவித்தார்.

ரோகித் சர்மாவுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது, சச்சின், சேவாக், கங்குலி போல அவரும் புகழடைந்து விட்டார், இந்நிலையில் ஸ்பான்சர்கள், ஒளிபரப்பு உரிமை பெற்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் டிஆர்பி ரேட்டிங் அனைத்திற்கும் ரோகித் சர்மாவின் பங்களிப்பு அவசியம். ஒருவேளை மிகப்பெரிய வியாபாரியாக இருக்கும் கோலி அந்தப் போட்டி காரணமாக சரிசமமாகத் திகழும் ரோகித் சர்மாவை உட்கார வைத்து அழகு பார்க்கிறாரோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி சொதப்பி எடுக்க, ரோகித் சர்மா பிரமாதமாக ஆடி புகழடைந்தார். அதுவும் குழிப்பிட்சில் அபாரமாக ஆடி திறமையை வெளிப்படுத்த விராட் கோலியுடன் ஒப்பிட்டு ரோகித் சர்மா உயர்த்தப்பட்டார். தனக்கு அடுத்து யாரும் இருக்கக் கூடாது என்பதில் கோலி கவனமாக இருப்பார் என்பதை நாம் ஏற்கெனவே ரகானேவை தென் ஆப்பிரிக்காவில் உட்கார வைத்ததைப் பார்த்திருக்கிறோம். புஜாராவை இலங்கையில் உட்காரவைத்து ‘அவரது பேட்டிங் ஸ்லோ’ காரணம் என்று கூறியதையும் பார்த்திருக்கிறோம். கேப்டன்சி திறமையுடைய அஸ்வினை ஒருநாள், டி20-யிலிருந்து காலி செய்ததையும் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில் பேட்டிங்கில் மட்டுமல்ல, கருத்துகளிலும் அதிரடி மன்னன் ஆகிய விரேந்திர சேவாக், கிரிக்பஸ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், “ரோகித் சர்மா 2 போட்டிகள் ஓய்வு எடுப்பார் என்று கூறப்பட்டது. இது விராட் கோலிக்கு பொருந்தாதா? ஏன் அவர் ஓய்வு எடுக்கக் கூடாது? ஒரு கேப்டனாக அவர் அடுத்த 2-3 போட்டிகளில் நான் ஓய்வு எடுக்கிறேன் என்று கூறுவார் என்று நான் நம்பவில்லை.

கோலி தானாகவே ஓய்வு அறிவித்து விட்டு, அதாவது ஓய்வெடுப்பதை தன் முடிவாக அவர் என்றுமே அறிவித்ததில்லை. எனவே மற்றவர்களுக்கு ஓய்வு அளிக்கும் முடிவை இவர் எப்படி எடுக்க முடியும்? ரோகித் சர்மாதானே அதை அறிவிக்க வேண்டும்” என்று விளாசினார்.

இதே நிகழ்ச்சியில் அஜய் ஜடேஜா, “எந்த பேட்ஸ்மெனும் ரெஸ்ட் எடுக்க விரும்ப மாட்டார்கள். இது ரிதம் சம்பந்தப்பட்டது, பார்மில் இருக்கும் யாரும் நான் வரவில்லை என்று கூற மாட்டார்கள். இதைத்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் செய்தது, முக்கிய வீரர்களு ஓய்வு அளித்து 3-1 என்று உதை வாங்கியது” என்றார்.
Published by:Muthukumar
First published: