ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது டெஸ்டில் சதம் அடித்து விராட் கோலி அசத்தியுள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து நடிகையும் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது விராட் கோலி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்டில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் விராட் கோலி இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். அவர் கடைசியாக 2019 நவம்பர் மாதம் 22 ஆம்தேதி கொல்கத்தாவில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் மேட்சில் சதம் அடித்திருந்தார். அதையடுத்து 40 மாதங்களுக்கு பின்னர் கோலி இன்று டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். இதற்கு இடைப்பட்ட நாட்களில் கோலி 41 இன்னிங்ஸ்களை டெஸ்டில் விளையாடியிருந்தார். இந்த போட்டிகளில் அவர் சதம் ஏதும் அடிக்காததால் அவர் மீது நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அவை அனைத்தையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது டெஸ்டில் சதத்தை அடித்து ஊதித் தள்ளியுள்ளார் விராட் கோலி.
இது அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் 28 ஆவது சதமாகும். நாட்கள் என்ற அடிப்படையில் 1,205 நாட்களுக்கு பின்னர் அவர் டெஸ்டில் சதம் அடித்துள்ளார். டெஸ்டில் சதம் அடிக்காததால் விமர்சனத்திற்கு ஆளாகி வந்த நிலையில், இன்றைய சிறப்பான ஆட்டம் விராட் கோலிக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. இதையொட்டி சமூக வலைளதங்களில் விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லனர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து, ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி சதம் அடித்ததன் பின்னணி குறித்து நடிகையும் அவரது மனைவியுமான அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். ‘உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டபோதிலும், சிறப்பாக கோலி விளையாடியுள்ளார். இந்த பண்புதான் என்னை எப்போதும் ஈர்க்கும்’ என்று கூறி ஹார்ட்டின் எமோஜியை அனுஷ்கா பதிவிட்டுள்ளார். இதன் மூலம் உடல் நல பாதிப்பையும் பொருட்படுத்தாமல் விராட் கோலி இன்று சதத்தை விளாசியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவரை சிலாகித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket