ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

விராட் கோலி, சுப்மன் கில் சதம்… இந்திய அணி 390 ரன்கள் குவிப்பு…

விராட் கோலி, சுப்மன் கில் சதம்… இந்திய அணி 390 ரன்கள் குவிப்பு…

சதம் அடித்த விராட் கோலி

சதம் அடித்த விராட் கோலி

அதிரடியாக ரன்கள் குவித்த விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்களை எடுத்தார். இதில் 8 சிக்சர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் விராட்கோலி, சுப்மன் கில் ஆகியோர் சதம் அடித்துள்ளனர். முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் களமிறங்கியுள்ளனர்.  இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இன்று போட்டிதொடங்கியபோது டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து ரோஹித் சர்மா – சுப்மன் கில் இணை களத்தில் இறங்கி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. 49 பந்துகளில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகளை பறக்கவிட்ட கேப்டன் ரோஹித் சர்மா 42 ரன்கள் எடுத்திருந்தபோது கருணாரத்னே பந்துவீச்சில், அவிஷ்கா பெர்னாண்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பின்னர் இணைந்த சுப்மன் கில்- விராட் கோலி இணை, தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.

89 பந்துகளில் அற்புதமாக சதம் அடித்து சுப்மன் கில் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்ட அவர் 116 ரன்கள் எடுத்திருந்தபோது கசுன் ரஜிதா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் அடித்து அசதினார். அவருக்கு சிறப்பான முறையில் ஷ்ரேயாஸ் பார்ட்னர்ஷிப் கொடுத்ததால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

இருவரும் 3ஆவது விக்கெட்டிற்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷ்ரேயாஸ் 38 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கே.எல்.ராகுல் 7 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்னிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் இலங்கை பந்துவீச்சை சிதறடித்த விராட் கோலி 150 ரன்களை கடந்தார்.

6 சிக்சர் 13 பவுண்டரிகளை விளாசிய கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாட தொடங்கியுள்ளது.

First published:

Tags: Cricket