Home /News /sports /

1020 நாட்களுக்குப் பிறகு ஆப்கானின் ஆர்வமற்ற பவுலிங்கில் கோலி சதம் - இந்தியா ஆறுதல் வெற்றி

1020 நாட்களுக்குப் பிறகு ஆப்கானின் ஆர்வமற்ற பவுலிங்கில் கோலி சதம் - இந்தியா ஆறுதல் வெற்றி

விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி சுமார் 1020 நாட்களுக்குப் பிறகு கோலி தனது 71வது சதத்தை எடுத்து ரிக்கி பாண்டிங்கின் 71 சர்வதேச சத சாதனையை சமன் செய்தார்,

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
இந்தியாவுக்கும் ஆப்கானுக்கும் நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் விராட் கோலி சதத்தினால் உயிர் பெற்றது, ஆனால் ஆப்கானிஸ்தான் அணி ஏனோதானோவென்று விட்டேற்றியாக பவுலிங் செய்து, அலட்சியமாக பீல்டிங் செய்து அதைவிட அலட்சியமாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு வெற்றியைத்தாரை வார்த்தனர்.

எந்தவித ஆர்வமும் ஊட்டாத இந்தப் போட்டியில் ஆப்கான் அணியினரின் பந்து வீச்சு வழக்கமான வேகம், ஆக்ரோஷம் இல்லாமல் சொத்தையாக இருந்தது, பீல்டர்கள் கேட்ச்களை விட்டு, பவுண்டரிகளை விட்டு, ஏகப்பட்ட மிஸ்பீல்டுகளைச் செய்தனர். பாகிஸ்தானுக்கு எதிராக அந்த மரண அடி 2 சிக்சர்களுக்குப் பிறகே அவர்கள் யார் ஜெயிச்சா என்ன என்பது போல் ஆடினர். ஆகவே கோலியின் இந்தச் சதத்தை பெரிதாகக் கொண்டாட ஒன்றுமில்லை, இந்த சதத்தை வைத்து அவர் பார்முக்கு வந்துவிட்டார், இனி உலகமே அவ்வளவுதான் என்ற ரேஞ்சுக்கெல்லாம் யோசிக்க முடியாது.

சுமார் 1020 நாட்களுக்குப் பிறகு கோலி தனது 71வது சதத்தை எடுத்து ரிக்கி பாண்டிங்கின் 71 சர்வதேச சத சாதனையை சமன் செய்தார், கோலி தன் இன்னிங்சில் 61 பந்துகளில் 12 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 122 ரன்கள் விளாசி ஸ்ட்ரைக் ரேட் 200 வைத்திருந்தார். தொடக்கத்தில் ஆப்கான் பவுலர்கள் ஏனோ தானோவென்று வீசினர் பெரும்பகுதி இந்தியாவுக்கும் கோலிக்கும் போட்டுக்கொடுப்பது போல்தான் பவுலிங் இருந்தது, கோலிக்கு எடுத்த எடுப்பிலேயே கேட்ச் ட்ராப், இதோடு மிஸ்பீல்டிங்கில் நிறைய ரன்கள், பவுண்டரிகள் வந்தன. ராகுல் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்.

சூரியகுமார் யாதவ் இது என்னடா பவுலிங் என்று நினைத்தோ என்னவோ 6 ரன்களில் அவுட் ஆகிச் சென்றார்.கோலி கேப்டனான புதிதில் மாட்டிய டெஸ்ட்டிங் தன்மை இல்லாத இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் அடித்த சதமே கொஞ்சம் பரவாயில்லை என்ற ரேஞ்சுக்கு நேற்று ஆப்கானிஸ்தான் சொல்லி சொல்லி போட்டுக் கொடுத்தனர். ரஷீத் கானே ஆர்வமில்லாமல் வீசி 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 4 ஓவர் 33 ரன்கள் கொடுத்தார்.

Also Read:  88.44 மீ தூரம் ஈட்டி எறிந்து டைமண்ட் லீக் சாம்பியன்: நீரஜ் சோப்ரா வரலாறு

ரிஷப் பண்ட் முதல் ஆட்டத்தின் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி அவுட் ஆனதால் ரோஹித் சர்மாவிடம் வாங்கிய டோஸினால் கிரீசுக்குள் நின்று எனக்கென்ன என்பது போல் விட்டேற்றியாக ஆடி  20 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார், இந்தியா  212/2 என்று பெரிய ஸ்கோரை எட்டியது.

பவுலிங்கை விடவும் மோசமான பேட்டிங் ஆடிய ஆப்கான்:
சரி பேட்டிங்கில் ஆர்வமுடன் அடிப்பார்க்ள் என்று பார்த்தால், முதல் ஓவரிலேயே புவனேஷ்வர் குமாரிடம் சசாய், குர்பாஸ் இருவரும் டக்கில் வெளியேறினர், சசாய் எல்.பி.ஆக, குர்பாஸ் பவுல்டு ஆனார். இரண்டுமே அற்புத பந்துகள். புவனேஷ்வர் குமார் தன் சாதனை டி20 பவுலிங்காக 4 ஓவர் 4 ரன்கள் 5 விக்கெட்டுகளைச் சாய்க்க, தீபக் சஹார் 4 ஓவர் 28 என்று கொஞ்சம் தடுமாறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக்கை பேட்டிங்கில் இறக்கி விடாமல் அவருக்கு பவுலிங் கொடுத்த அரும்பெரும் கொடையைச் செய்தார், அவரும் 18 ரன்களை ஒரே ஓவரில் கொடுத்தார். ராகுலெல்லாம் கேப்டனாக இருந்தால், சூரியகுமார் யாதவை பவுலராக்கி விடுவார், செஹலை ஓப்பனிங்கில் இறக்கினாலும் இறக்குவார். சொல்ல முடியாது.

ஆப்கானின் கொஞ்சமாவது சொரணையுடன் ஆடினார் என்றால் அது இப்ராஹிம் சத்ரான் மட்டுமே இவர் 59 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். கடைசியில் ரஷீத் கான், 15, முஜீப் உர் ரஹ்மான் 18 என்று பங்களிக்க ஆப்கான் 20 ஓவர்களில் 111/8 என்று முடிந்தது, இந்த ஆப்கான் அணியை இந்திய அணியினால் ஆல் அவுட் செய்ய முடியவில்லை. ஆட்ட நாயகன் விராட் கோலி. வேறு ஒன்றும் இந்தப் போட்டியில் சொல்வதற்கில்லை, விராட் கோலி சதமெடுப்பதற்காகவே இந்தப் போட்டி ஆடப்பட்டது போல் தெரிந்ததை தவிர கிரிக்கெட் மதிப்பீடுகளின் படி இது ஒரு ஆர்வமற்ற, சுவாரசியமற்ற போட்டியே.
Published by:Ramprasath H
First published:

Tags: Asia cup cricket, Cricket, Virat, Virat Kohli

அடுத்த செய்தி