‘ஜால்ரா’அடிப்பதில் ‘வேற லெவல்’ தொட்ட கிளென் மேக்ஸ்வெல்: கோலி போல வருமா என புகழாரம்

‘ஜால்ரா’அடிப்பதில் ‘வேற லெவல்’ தொட்ட கிளென் மேக்ஸ்வெல்: கோலி போல வருமா என புகழாரம்

கிளென் மேக்ஸ்வெல்

நான் மன அழுத்தத்திலிருந்து விடுபட கிரிக்கெட்டிற்கு ஓய்வு அளித்து பிரேக் கொடுத்தேன் அதைப் பாராட்டிய முதல் வீரர் விராட் கோலிதான்

  • Share this:
உலகில் பல முன்னாள், இந்நாள் வீரர்கள்  ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்களில் அணிகளில் ஏதாவது வேலை கிடைத்தால் தேவலை என்று விராட் கோலியை அளவுக்கதிகமாக புகழ்ந்து பேசுவதும், ரோஹித் சர்மாவை புகழ்வதும், ஐபிஎல் கேப்டகளைப் புகழ்வதும் அல்லது  இந்திய அணி எப்படி சுரங்கப்பாதை பிட்சைப் போட்டு எதிரணியை 0-வுக்கு ஆல் அவுட் செய்தாலும் சரி புகழ்ந்து தள்ளுவது என்ற புதிய தாரக மந்திரத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

சூழல் இப்படியிருக்க கடந்த ஐபிஎல் தொடரில் சொதப்பு சொதப்பென்று சொதப்பிய கிளென் மேக்ஸ்வெலை 14.25 கோடிக்கு கோலி தலைமை ஐபிஎல் அணியான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்தததும் கிளென் மேக்ஸ்வெலுக்கு தலைகால் புரியவில்லை.

அதனால் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 2021 ஐபிஎல் தொடரில் வேற லெவலுக்கு போகப்போவதாக தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து முன்னாள் வீரர் சைமன் டூல் கூறியது போல் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு நல்ல தரமான நியூஸிலாந்து வீரர்களை விட 2ம் தர ஆஸ்திரேலிய வீரர்களைத்தான் பிடித்திருக்கிறது.

இந்நிலையில் ரூ.14.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் தன் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக விராட் கோலி பற்றி புகழ்ந்து தள்ளியதாவது:

ஆர்சிபி அணியுடனான இந்த தொடர் வேற லெவலுக்குச் செல்லும். இப்போதைக்கு ஆட்டத்தின் உச்சம் கோலிதான் டெஸ்ட் முதல் டி20 வரை அனைத்து வடிவ வீரராக உள்ளார் கோலி.

அவர் நிலைமைக்கு ஏற்ப தன் ஆட்டத்தை மாற்றிக் கொள்கிறார். நீண்ட நேரத்துக்கு ஆதிக்கம் செலுத்துகிறார், கேப்டனாக இந்திய அணியின் அழுத்தத்தை சுமப்பதோடு அந்த அணியின் சிறந்த வீர்ராகவும் இருக்கிறார்.

அவர் பணி செய்யும் விதம் குறித்து அருகில் இருந்து பார்க்க ஆசைப்பட்டேன், இப்போது அந்த வாய்ப்பு கிடைத்தது. கிரிக்கெட் மட்டுமல்ல அவரது பயிற்சி முறை, உடல்தகுதியை பராமரிக்கும் விதம் இதோடு தலைமைத்துவம் பற்றி ஒன்றிரண்டை உருவிக்கொள்ள முடிந்தால் அதுவும் நல்லதுதானே.

நான் மன அழுத்தத்திலிருந்து விடுபட கிரிக்கெட்டிற்கு ஓய்வு அளித்து பிரேக் கொடுத்தேன் அதைப் பாராட்டிய முதல் வீரர் விராட் கோலிதான். என் நிலைப்பாட்டுக்கு திடமான ஆதரவு தந்தவர் கோலிதான். என்மீதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு, நெருக்கடி ஆகியவை இருந்ததை தன்னுடன் அவர் அடையாளப்படுத்திக் கொண்டிருப்பாராக இருக்கும்., என்றார் கிளென் மேக்ஸ்வெல்.

ராயல் சாலஞ்சர்ஸ் இந்த முறை கைல் ஜேமிசன், டேன் கிறிஸ்டியன் ஆகியோரையும் எடுத்து அணியை வலுப்படுத்தியுள்ளார்.

இதுவரை கோலி தலைமையில் ஆர்சிபி கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published: