ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்று வரலாறு படைத்ததையடுத்து ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் லபுஷேன் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி 3ம் இடத்துக்கு முன்னேறினார். விராட் கோலி 4ம் இடம் சென்றார்.
சிட்னியில் ஆஸி. வயிற்றில் புளியைக் கரைத்த 97 ரன்கள், பிரிஸ்பனில் நேற்று அசைக்க முடியா வெற்றி 89 ரன்கள் என்று பின்னி எடுக்கும் ரிஷப் பந்த் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 13ம் இடம் பிடித்துள்ளார். இப்போது டாப்-ல் உள்ள ஒரே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரிஷப் பந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் குவிண்டன் டி காக் 677 புள்ளிகளுடன் 15வது இடத்தில் இருக்கிறார், ரிஷப் பந்த் இப்போது 691 புள்ளிகளுடன் 13ம் இடம்பெற்றுள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் புஜாரா 7வது இடமும், ரஹானே 9ம் இடமும் பிடித்துள்ளனர். டேவிட் வார்னர் 11ம் இடத்துக்கு இறங்கினார்.
பவுலிங்கில் கமின்ஸ் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். பேட்டிங்கில் கேன் வில்லியம்சன் முதலிடம். பவுலிங்கில் பிராட் 2ம் இடம். இந்தியா தரப்பில் டெஸ்ட் பவுலிங் தரநிலையில் 8ம் இடத்தில் அஸ்வினும், 9ம் இடத்தில் பும்ராவும் உள்ளனர்.