அகமதாபாதில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மொகமர் சிராஜை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்தார் பென் ஸ்டோக்ஸ், அதில் இரண்டு எட்ஜ் பவுண்டரிகள்.
இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, சிராஜ் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே எதிரணி பேட்ஸ்மென்களைச் சீண்டுகிறார் என்றே தெரிகிறது.
தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது. பிட்ச் கொஞ்சம் கொஞ்சம் தூசுத் தும்பட்டையாகி வருகிறது, பென்ஸ்டோக்ஸை பிரமாதமாக வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர்.
ஸ்டோக்ஸ் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 55 ரன்கள் என்று அபாயகரமாக ஆடிவந்தார். அப்போது அவருக்கு வீசிய வாஷிங்டன் சுந்தர், ரவுண்ட் த விக்கெட்டில் வீசி குட்லெந்தில் பிட்ச் செய்து வெளியே திருப்பிக் கொண்டிருந்தார், ஆனால் ஒரு பந்தை மிகப்பிரமாதமாக அதே லெந்தில் பிட்ச் செய்து திருப்பாமல் அண்டர் கட்டர் போல் வீசினார், ஸ்டோக்ஸ் முன் காலை நீட்டி ஆடியிருக்க வேண்டும், தவறான லைனில் ஆடி எல்.பி.ஆகி வெளியேறினார்.
இதற்கு முன்னர்தான் சிராஜுடன் வாக்குவாதம் நடந்தது. அப்போது கோலி புன்னகையுடன் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார்.
ஸ்லெட்ஜிங்கை சிராஜ் செய்ததால் கோலி சிரித்தபடியே நடந்து கொண்டார், ஆனால் பென் ஸ்டோக்ஸ் மிகவும் சீரியசாக இருந்தார். இந்தப் பேச்சுக்கள் கொஞ்சம் நீளவே களநடுவர்களும் தலையிட்டனர்.
ஆனால் இதோடு முடியவில்லை தொடர்ந்து சிராஜ், ஸ்டோக்ஸ் முறைப்பு முணுமுணுப்புப் படலம் தொடர்ந்தது. சிராஜ் ஜானி பேர்ஸ்டோவையும் எல்.பி. செய்தார். பின் காலில் வாங்கினார் பேர்ஸ்டோ.
சிராஜ்-ஸ்டோக்ஸ் சம்பவத்தின் போது வர்ணனையில் இருந்த ஸ்வான், “இது நட்பு ரீதியாகத் தெரியவில்லை” என்றார்.
கவாஸ்கர், “சிராஜ் என்ன சொல்கிறாரோ சொல்லட்டும், ஸ்டோக்ஸ் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும், கோலி பீல்டிங்கில் இருக்கிறார் அவருக்கு ஒன்றுமில்லை, ஆனால் ஸ்டோக்ஸ்தான் கவனத்தை இழப்பார், அதனால் பேச்சுவார்த்தை, வாக்குவாதத்தை அவர் தவிர்க்க வேண்டும்” என்றார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து தொடங்கி 145/5 என்று ஆடிவருகிறது இப்போது ஆலி போப் 22 ரன்களுடனும் லாரன்ஸ் 15 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.