விராட் கோலி முதலீடு செய்த ஆன்லைன் கேம் நிறுவனம் பிசிசிஐ-யின் ‘கிட்’ ஸ்பான்சர்- கிளம்பியது சர்ச்சை

விராட் கோலி

விராட் கோலி 2019 பிப்ரவரியில் முதலீடு செய்கிறார், நவம்பர் 17, 2020-ல் பிசிசிஐ எம்பிஎல் நிறுவனத்தை கிட் ஸ்பான்சராக நியமிக்கிறது.

 • Share this:
  விராட் கோலி முதலீடு செய்த ஆன்லைன் கேமிங் நிறுவனமான மொபைல் பிரீமியர் லீக் பிசிசிஐயின் கிட் ஸ்பான்சராக ஆனது குறித்து ஆதாயம் தரும் இரட்டை வணிக லாப சர்ச்சை விராட் கோலி மீது எழுந்துள்ளது.

  விளையாட்டு வீரர்களின் வர்த்தக நலன்களும் பிசிசிஐ-யின் வர்த்தக நலன்களும் ஒன்றிணையும் புள்ளி கிரிக்கெட் அணித்தேர்வு, கேப்டன் தேர்வு என்று அனைத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது என்ற குற்றச்சாட்டு சில ஆண்டுகளாகவே பிசிசிஐ மீதும் இந்திய வீரர்கள் மீதும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில் இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தியில், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கேலக்டஸ் ஃபன்வேர் தனியார் நிறுவனம் ரூ.33.32 லட்சத்துக்கு கடன்பத்திரங்களை விராட் கோலிக்கு ஒதுக்கியது. இந்த நிறுவனத்திற்குச் சொந்தமானதுதான் விராட் கோலி முதலீடு செய்த மொபைல் பிரிமியர் லீக் என்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனமாகும்.

  பிப்ரவரி 2019-ல் விராட் கோலி இதில் முதலீடு செய்ய பிற்பாடு இந்த நிறுவனம் இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக தேர்வு செய்யப்பட்டது. மேலும் மெர்கண்டைஸ் பார்ட்னராகவும் பிசிசிஐ-யுடன் இணைந்தது இந்த நிறுவனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  விராட் கோலி 2019 பிப்ரவரியில் முதலீடு செய்கிறார், நவம்பர் 17, 2020-ல் பிசிசிஐ எம்பிஎல் நிறுவனத்தை கிட் ஸ்பான்சராக நியமிக்கிறது.

  இந்த 3 ஆண்டு ஒப்பந்தங்களின் படி மூத்த இந்திய அணி, மகளிர் அணி யு-19 இந்திய அணி வீரர்கள் எம்பிஎல் ஜெர்சியை அணிய வேண்டும். நடப்பு ஆஸ்திரேலிய தொடரிலும் எம்பிஎல் லோகோவை இந்திய வீரர்கள் ஜெர்சியில் தரித்திருப்பதையும் பார்க்க முடியும். ஜனவரி 2020-ல் எம்பிஎல் விளம்பரத் தூதராக விராட் கோலி நியமிக்கப்பட்டார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு.

  கோலி வாங்கிய கடன் பத்திரங்கள் 10 ஆண்டுகள் சென்ற பிறகு பங்குப்பத்திரங்களாக மாறும். அதாவது ஒரு கடன் பத்திரம் ஒரு பங்கு பத்திரம் என்ற விகிதாச்சாரத்தில் பங்காக மாற்றப்படும், அப்படி மாறினால் எம்பிஎல் நிறுவனத்தில் விராட் கோலி 0.051% பங்குகளை வைத்திருப்பவர் ஆவார்.

  மேலும் கோலியுடன் தொடர்புடைய இன்னொரு நிறுவனம் கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சி.இ.ஓ. அமித் அருண் சஜ்தே மேலும் இரண்டு நிறுவனங்களில் கோலியுடன் கூட்டுறவு வைத்திருப்பவர் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

  மேலும் கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் இயக்குநராகவும் அமித் அருண் சஜ்தே இருக்கிறார். இந்த நிறுவனம்தான் விராட் கோலி, ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், ஷுப்மன் கில் ஆகியோரது வர்த்தக நடவடிக்கைகளையும் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில் ஆதாயம் தரும் வகையில் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்ந்து கொண்டு அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து அதே நிறுவனம் ஸ்பான்சராகவும் இருப்பதால் ஆதாயம் தரும் இரட்டை வணிக நலன் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: