தோனியின் மேலும் ஒரு சாதனையை தகர்த்த விராட் கோலி!

தோனியின் சாதனையை தகர்த்த விராட் கோலி!

ஒட்டுமொத்தமாகவும் 35 டெஸ்ட் வெற்றிகளை பெற்று அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுத்தந்த கேப்டன் என்ற சாதனையும் கோலி வசமே உள்ளது.

  • Share this:
அகமாதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி பெற்ற இமாலய வெற்றியின் மூலம் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் என்னற்ற சாதனைகளை படைத்திருக்கிறார். அந்த வகையில் கேப்டனாக அவர் படைத்த முக்கியமான சாதனைகளுள் ஒன்றைத் தான் விராட் கோலி முறியடித்திருக்கிறார்.

அகமதாபாத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய மண்ணில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்திருக்கிறார். கோலி இந்திய மண்ணில் 29 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு அதில் 22 வெற்றிகளை பெற்றுள்ளார். அதே நேரத்தில் இந்திய மண்ணில் 30 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட தோனி 21 வெற்றிகளை பெற்றிருக்கிறார்.

விராட் கோலி!


அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாகவும் 35 டெஸ்ட் வெற்றிகளை பெற்று அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுத்தந்த கேப்டன் என்ற சாதனையும் கோலி வசமே உள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் இரண்டே நாட்களில் வெற்றி கிடைத்திருக்கிறது. இன்று ஒரே நாளில் 17 விக்கெட்கள் வீழ்ந்திருக்கின்றன. ஸ்பின்னர்களின் சொர்க்கபுரியாக இந்த மைதானம் மாறியிருக்கிறது. வெறும் 49 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சிக்ஸர் அடித்து தித்திப்பான வெற்றியை ஈட்டித்தந்தார் ரோகித் சர்மா.

இந்த போட்டி தான் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு 100வது டெஸ்ட் போட்டியாகும். அதே நேரத்தில் இந்த போட்டியில் தான் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 400 விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இங்கிலாந்து அணியின் வாய்ப்பும் பறிக்கப்பட்டுள்ளது. 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் மார்ச் 4ம் தேதி துவங்குகிறது. இதில் தோல்வி அடையாமல் வெற்றி அல்லது டிரா என எது செய்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி களம் காணுவது உறுதி.
Published by:Arun
First published: