2019-ல் சொத்தை வங்கதேசத்துக்கு எதிரான செஞ்சுரிக்குப் பிறகு கோலி வேஸ்ட்: ஸ்கோர்லெஸ் கேப்டன்

கோலி அவுட் ஆன ஆண்டர்சன் பந்து.

2, 19, 3, 14, 74, 4, 11,72, 0, 62,27, 0,44, 13, 0 இதுதான் கோலி இந்த 2 ஆண்டுகளாக எடுத்துள்ள ஸ்கோராகும்.

  • Share this:
விராட் கோலி 2019ம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் சதம் எடுக்கவில்லை, கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக கோலி 136 ரன்கள் எடுத்தார், இதுதான் அவரது கடைசி சதம்.

அந்த டெஸ்ட் போட்டியிலும் வங்கதேசத்தில் அல் அமின் ஹுசைன், அபுஜயேத், எபாதத் ஹுசைன், தைஜுல் இஸ்லாம் என்ற ஊர் பேர் தெரியாத பவுலர்களை பின்னி எடுத்து சதம் கண்டார் கோலி, ஒரு நல்ல பவுலர் கூட அந்த அணியில் இடம்பெறவில்லை.

கோலி அவுட் ஆன ஆண்டர்சன் பந்து.


அதன் பிறகு சுத்த வேஸ்டாக ஆடி வருகிறார். அந்த டெஸ்ட் போட்டிக்குப் பிறகு கோலியின் ஸ்கோர் இதோ:

2, 19, 3, 14, 74, 4, 11,72, 0, 62,27, 0,44, 13, 0 இதுதான் கோலி இந்த 2 ஆண்டுகளாக எடுத்துள்ள ஸ்கோராகும். ஆனால் ஒட்டுமொத்த கரியரில் 27 சதங்கள் 25 அரைசதங்கள் அடித்துள்ளார், இது அரைசதத்தை சதமாக மாற்றும் ஒரு சிறந்த கன்வர்ஷன் ரேட்தான், ஆனால் 2019 வங்கதேசத்துக்கு எதிரான சதத்துக்குப் பிறகு அரைசதமே 3 முறைதான் எடுத்துள்ளார்.

ஸ்பின்னுக்கு ஆதரவான பிட்சில் ஸ்பின்னரிடம் ஆட்டமிழக்கிறார், வேகப்பந்து சாதக ஆட்டக்களங்களில் வேகப்பந்து வீச்சில் ஆட்டமிழக்கிறார், அவரது பலம்தான் என்ன? என்ற கேள்வி எழுகிறது.

விராட் கோலி


கேப்டனாக இருப்பதால்தான் அணியில் நீடிக்க முடிகிறது என்று ஒரு முறை கங்குலியை பயிற்சியாளர் கிரெக் சாப்பல் கூறினாரே அதே போல்தான் இப்போது கோலியும் உள்ளார். கங்குலியாவது கேப்டன் பதவியைத் துறந்தார், இவர் அதையும் செய்ய மாட்டார், மாறாக கேப்டன் பொறுப்புக்கு அடுத்து வருவது யார் என்று தெரிந்தால் அவரை அணியிலிருந்து ஓரங்கட்டத் தொடங்குவார். அஸ்வின் புவனேஷ்வர் குமாரை ஒதுக்கியது போன்று.

ஸ்விங் கண்டிஷன்களில் முன் காலை முன்னே தூக்கிப் போட்டு டெல்லி குழிப்பிட்ச்களில் ஆடிப்பழக்கப்பட்ட கால் நகர்த்தல்கள் ஸ்விங் கண்டிஷனில் எடுபடாது, ரோகித் சர்மாவே பின்னால் சென்று பந்து வந்த பிறகு மணிக்கட்டை தளர்த்தி வலது கையை தளர்த்தி நிதானமாகவே ஆடுகிறார், ஆனால் இவரோ அன்று வந்து நின்றவுடன் ரிச்சர்ட்ஸே ஆட மறுக்கும் விதத்தில் மட்டையை முன்னே நீட்டி ஆடி டக் அவுட் ஆனார்.

ஜோ ரூட்-விராட் கோலி


தென் ஆப்பிரிக்காவில் பிலாண்டர் கோலியை ஒர்க் அவுட் செய்து எடுத்தார், வரிசையாக அவுட் ஸ்விங்கர் பிறகு இன்ஸ்விங்கர் அவ்வளவுதான் எல்.பி. அல்லது, தொடர்ந்து இன்ஸ்விங்கராக வீசி ஒரு அவுட்ஸ்விங்கர் அவ்வளவுதான் வாரிக்கொண்டு அடிக்கப் போய் எட்ஜ் ஆவார், பிலாண்டர் அவருக்கு இதனை நன்றாகப் பயன்படுத்த அவரது வழியில் கைல் ஜேமிசன், ட்ரெண்ட் போல்ட் இப்போது மீண்டும் ஜேம்ஸ் ஆண்டர்சன். முதலில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் கோலியை காலி செய்தார்.

உலகத் தரம் வாய்ந்த ஒரு டெஸ்ட் வீரராக இந்திய ஊடகங்களால் தம்பட்டம் அடிக்கப்படும் ஒரு வீரர் இத்தனை சுலபமாக தன்னை ஒர்க் அவுட் செய்ய ஒப்புக் கொடுக்க மாட்டார்.  நாம் நிறைய வீரர்களை உதாரணம் காட்ட முடியும், சச்சின், பாண்டிங், லாரா போன்றவர்களை இவர் அளவுக்கு எந்த பவுலரும் ஒர்க் அவுட் செய்ததில்லை மாறாக இவர்கள் தான் பவுலர்களை ஒர்க் அவுட் செய்து அவர்களுக்கு பேட்டிங்கில் காட்டு காட்டென்று காட்டினர்.  கோலியை இவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது தவறு.

ஆனால் 2018 தொடரில் பிரமாதமாக ஆடிய கோலி ஆண்டர்சனுடனான போரில் வெற்றி பெற்றார், அவரிடம் விக்கெட்டையே கொடுக்காமல் 593 ரன்களை விளாசினார்.

ஆனால் மீண்டும் அவருக்கு அந்த பிரச்னை தோன்றியுள்ளது, ஸ்விங் பந்துகளை ஆடும் விதத்தில் அவர் கொஞ்சம் தடுமாறவே செய்கிறார். இந்தியாவில் ஸ்பின் பிட்சிலும் அவர் இங்கிலாந்துக்கு எதிராகத் தடுமாறினார். ஸ்பின்னர்களிடம் அவுட் ஆனார்.

கோலியின் பலம் எது ஸ்பின்னை ஆடுவதா, அல்லது வேகப்பந்தை ஆடுவதா என்பதே பிடிபடாமல் இருக்கிறது, இரண்டிலும் விரைவில் ஆட்டமிழக்கிறார், இரண்டையும் தடவுகிறார்.

விராட் கோலி 13 அவுட். |சவுத்தாம்ப்டன்.


இவரை ஒரு பிராண்டாகக் கட்டமைக்க தொடக்கத்தில் சொத்தை அணிகளுக்கு எதிராக போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சோபித்த கோலி ரியல் டெஸ்ட் என்றவுடன் சொதப்பத் தொடங்கினார்.

இப்போது வெறும் கள சேஷ்டைகளாகக் குறுகி விட்டார். ரசிகர்களோ அவரிடமிருந்து ஒரு சதமல்ல, ஒரு அரைசதத்தையாவது எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அவர்களுக்கு ஆறுதல் வழங்குவாரா என்பது இந்த இங்கிலாந்து தொடரில் தெரிந்து விடும்.
Published by:Muthukumar
First published: