• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அறிமுகத்திலேயே ஆட்ட நாயகன் விருது: காட்டடியில் கதற விட்ட இஷான் கிஷன், கோலியின் சாதனை 3000; இந்தியா அபார வெற்றி

அறிமுகத்திலேயே ஆட்ட நாயகன் விருது: காட்டடியில் கதற விட்ட இஷான் கிஷன், கோலியின் சாதனை 3000; இந்தியா அபார வெற்றி

விராட் கோலி-ஆட்ட நாயகன் இஷான் கிஷன்.

விராட் கோலி-ஆட்ட நாயகன் இஷான் கிஷன்.

இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இஷான் கிஷன் அறிமுகப் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது பெற்றார். விராட் கோலி டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய முதல் வீரர் ஆனார்

  • Share this:
அகமதாபாத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் அறிமுக வீரர் இஷான் கிஷன் அதிரடியிலும், மீண்டும் பார்முக்கு வந்த (அதிர்ஷ்டத்துடன்) விராட் கோலியும், பவுலர்களும் அபாரமாக ஆடி தொடரை சமன் செய்யும் வெற்றியை இந்தியாவுக்குப் பெற்றுத்தந்தனர்.

டாஸ் வென்ற விராட் கோலி பிரமாதமாக இங்கிலாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தார், அந்த அணி 10 ஓவர்களில் 80 ரன்களுக்கும் மேல் எடுத்தாலும் அடுத்த 10 ஓவர்களில் ஷர்துல், புவனேஷ்வர், ஹர்திக் அவர்களை எலுமிச்சம் பழம் போல் பிழிந்தனர். ரன்கள் வரவில்லை பவுண்டரிகள் வறண்டு போக 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் இளம் புலி இஷான் கிஷன் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 56 ரன்கள் விளாச, விராட் கோலி 49 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 73 ரன்கள் விளாசி நாட் அவுட்டாக திகழ, இடையில் ரிஷப் பந்த் இறங்கி திகைப்பூட்டும் 2 சிக்சர்களுடன் 13 பந்துகளில் 26 ரன்களையும் எடுக்க இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இஷான் கிஷன் அறிமுகப் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது பெற்றார். விராட் கோலி டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய முதல் வீரர் ஆனார்.இந்தப் பிட்சிலும் ஒன்றும் இல்லை, இங்கிலாந்து பிரமாதமாக ஆடினர். ஆனால் கடைசியில் ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், குறிப்பாக ஷர்துல் விரல்களை விரித்து பந்தை பிடித்து மெதுவாக விட்ட லாவகத்தில் பாவம் பென் ஸ்டோக்ஸுக்கு சுத்த சுத்த பந்து மாட்டவே இல்லை. அற்புத பவுலிங். கோலியின் பேட்டிங்கை பாராட்டும் முன்பு ஷர்துலின் அபார ஸ்லோ பவுலிங் வெற்றிக்கு செய்த பங்களிப்பை பாராட்டியே ஆகவேண்டும். இங்கிலாந்து பவுலிங் ஸ்லோ பவுலிங்கை திறம்படப் பயன்படுத்தவில்லை.

முதல் ஓவரில் சாம் கரண், கே.எல்.ராகுலை 5 பந்துகள் இன்ஸ்விங்கரில் முடக்கி 6வது பந்தை சற்றே வெளியே ஸ்விங் செய்ய எட்ஜ் ஆகி பட்லரிடம் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார். மற்றபடி இங்கிலாந்து பவுலிங்கை இஷான் கிஷன் பிச்சு உதறினார். முதல் போட்டி போலவே அல்ல, ஏதோ 20-30 போட்டிகளை ஆடியது போல் இருந்தது அவரது அதிரடி ஆட்டம். சாம் கரண் 4 ஓவர்களில் 22 ரன்கள் என்று சிக்கனம் காட்டினார், ஜோப்ரா ஆர்ச்சரையும் அடிக்க முடியவில்லை என்றாலும் அவரிடம் வழக்கமான அச்சுறுத்தல் இல்லை, ஏனெனில் இந்தப் பிட்சில் ஒன்றுமே இல்லை. ஏதோ பெட்ஷீட்டில் வீசுவது போல் இருந்தது. ஒருவேளை மார்க் உட் இருந்திருந்தால் இந்திய அணியை ஆட்டியிருப்பார், அவரும் கடைசி நேர காயத்தில் ஆடவில்லை என்று கூறப்படுகிறது. பென் ஸ்டோக்ஸ் ஓரே ஓவரில் 17 ரன்கள் விளாசப்பட்டார்.

டாம் கரண் ஒழுங்காக வீசவில்லை, அவர் வீசிய முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் மிகப்பெரிய லாங் ஆன் சிக்சருடன் 16 ரன்களை விளாசினார். ஆர்ச்சரை பிரமாதமாக பவுண்டரி விளாசி தன் சர்வதேச அறிமுகத்தை அசத்தலாகத் தொடங்கினார். அரைசதத்தை மிகப்பெரிய சிக்சருடன் 28 பந்துகளில் கடந்தார், ஆதில் ரஷீத்தை பிய்த்து உதறி விட்டார்.

ஆதில் ரஷீத்தின் துரதிர்ஷ்டமும் கோலி, இஷாந்த் கிஷனின் அதிர்ஷ்டமும்: கோலிக்கு நடுவர் அவுட் கொடுப்பாரா மாட்டாரா?

ஒரு முனையில் இஷான் கிஷன் வெளுத்து வாங்க, விராட் கோலி தன் அடிப்படைகளுக்குத் திரும்பினார். ஆனாலும் அவர் 10 ரன்களில் இருந்த போது கிறிஸ் ஜோர்டான் பந்து ஒன்று லெக் திசையில் கோலி மட்டையின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச்சாக சென்றது ஆனால் பட்லர் கையில் பட்டு தரை தட்டியது, கோலி தப்பினார்.

அதே போல் முதல் பந்தில் இஷான் கிஷன் பவுண்டரி விளாச, அதே ஓவரில் பொறி வைத்து கொஞ்சம் வேகமாக ஆதில் ரஷீத் வீச இஷான் கிஷான் ஷாட் நேராக பென் ஸ்டோக்ஸிடம் டீப் மிடானில் கேட்ச் ஆனது, ஆனால் அதை அவர் கோட்டை விட்டார். மிக மோசமாக ஒரு கேட்சை அதுவும் ஸ்டோக்ஸ் விட்டது ஆச்சரியகரமாக இருந்தது என்பதோடு ஒருவேளை உஷ் கண்டுக்காதீங்க தருணமா என்றும் தெரியவில்லை.

அதே போல் கோலி 54 ரன்களில் இருந்த போது ரஷீத் அற்புதமாக ஒரு பந்தை உள்ளே செலுத்தி வெளியே திருப்ப கோலி வாரிக்கொண்டு அதை ஆட முற்பட பின் காலும் வெளியே வந்தது பட்லர் பைல்களை அகற்றும் முன் கோலி காலை கிரீசுக்குள் கொண்டு வர முயன்றார், ஆனால் கோட்டின் மேல்தான் பூட் நுனி இருந்தது, இது கிளீன் அவுட். ஆனால் 3வது நடுவர் கிளீன் ஆக அவுட் என்று தெரிந்த கோணங்களையெல்லாம் பார்த்து விட்டு, எந்தக் கோணத்தில் அவுட் இல்லை போல் தெரிந்ததோ அந்தக் கோணத்தைப் பார்த்து நாட் அவுட் என்றார். மகா அசிங்கம், அது நிச்சயம் அவுட். இங்கிலாந்து வீரர்கள் நாம் தலைகுனியுமாறு சிரித்தனர், ஆனால் கோலி கவலைப்படவில்லை.

கோலிக்கு அவுட் தரக்கூடாது என்ற எழுதப்படாத விதி மீண்டும் அரங்கேற்றப்பட்டது. அப்போது இத்தனைக்கும் இந்தியா 15 ஓவர்கலில் 143/3 என்று வெற்றியின் விளிம்பில்தான் இருந்தது. அப்படியிருந்தும் கோலிக்கு அவுட் கொடுக்கக் கூடாது என்பதை நடுவர்கள் கடைப்பிடித்தனர். இது ஒரு மகா அசிங்கம்.


ஆனால் கோலியின் அபார ஆட்டத்தை குறை கூற முடியாது. அதுவும் அரைசதத்துக்காக இறங்கி வந்து நேராக ஒரே தூக்கு தூக்கி சிக்ஸுக்கு சொருகியதையும், வெற்றிக்கான ஷாட்டையும் ஆன் திசையில் புல்ஷாட்டில் சிக்ஸராக மாற்றியதையும் மறக்க முடியாது. கோலி 49 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 73 நாட் அவுட், இதில் டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்று சாதனை புரிந்துள்ளார்.

இடையில் இஷான் கிஷன் ரஷீத் பந்தில் எல்.பி.ஆனார். ரிஷப் பந்த் இறங்கி ஆதில் ரஷீத்தை ஒரு ஸ்டன்னின் ஸ்லாக் ஸ்வீப் சிக்சும், அதை விடவும் அசத்தும் விதத்தில் ஜோர்டான் பந்தை லான் ஆஃபில் அடித்த சிக்சரும் ரசிகர்களை குதியாட்டம் போட வைத்தன. ஆனால் அவரும் 26 ரன்களில் ஜோர்டானிடம் ஆட்டமிழந்தார்.

நன்றாகத் தொடங்கி இந்திய பவுலர்களின் கிடுக்கிப் பிடியில் சிக்கிய இங்கிலாந்து:

இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் மீண்டும் அசத்தினார், ஐபிஎல் தொடரில் என்னை ஏலம் எடுக்கவில்லையா? என்று கேட்டு அவர் அடிப்பது போல் இருந்தது. 35 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அவர் 46 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தரிடம் 2ம் முறையாக ஆட்டமிழந்த போது இங்கிலாந்து 11.1 ஓவர்களில் 91/3 என்று இருந்தது. ஜோஸ் பட்லர் புவனேஷ்வர் குமார் பந்தில் எல்.பி.ஆகி டக் அவுட் ஆனார்.

அபாய டி20 வீரர் டேவிட் மலான் 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து சாஹலிடம் எல்.பி.ஆனார். பேர்ஸ்டோ 1 பவுண்டரி ஒரு சிக்சருடன் 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தாலும் வாஷிங்டன் சுந்தர் பந்தில் சூரியகுமார் யாதவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

பேட்டிங் திடீரென கடினமாகிப் போனது. இந்திய அணியின் பீல்டிங்கும் சொதப்பலாக இருந்தது 3 கேட்ச்கள் விடப்பட்டன. ஷர்துல் தாக்குர், புவனேஷ்வர் குமார், சாஹல், ஹர்திக் , வாஷிங்டன் சுந்தர் பந்துகளை ஒன்றும் செய்ய முடியவில்லை, அதுவும் டெத் ஓவர்களில் ஷர்துல் அற்புதமாக ஸ்லோ பந்துகளை வீசி காலி செய்தார்.

இயான் மோர்கன் எப்படியோ 4 பவுண்டரிகளுடன் 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து இங்கிலாந்து ஸ்கோரை நகர்த்தினார். பென் ஸ்டோக்ஸ் 21 பந்துகள் ஆடி ஒரு பவுண்டரிதான் அடிக்க முடிந்தது என்றால் நம்ப முடிகிறதா? ஷர்துல் அவரை ஆட்டிப்படைத்து விட்டார். சாம் கரண் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட இங்கிலாந்து 164 ரன்களை எட்டியது.

இந்திய அணி இலக்கை எளிதில் விரட்டி தொடரை 1-1 என்று சமன் செய்தது. 3வது போட்டி நாளை 16ம் தேதி இதே மைதானத்தில் நடைபெறுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: