• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IND vs NZ WTC Final | ரோகித் சர்மா, கில் நல்ல தொடக்கத்துக்குப் பிறகு கோலி, ரகானே ஸ்டெடி- 146/3

IND vs NZ WTC Final | ரோகித் சர்மா, கில் நல்ல தொடக்கத்துக்குப் பிறகு கோலி, ரகானே ஸ்டெடி- 146/3

கோலி-ரகானே. | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் 2021.

கோலி-ரகானே. | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் 2021.

சவுத்தாம்டனில் நடைபெறும் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.

  • Share this:
முதல் நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட நேற்று 2ம் நாள் ஆட்டத்திலும் மழை மற்றும் மோசமான வெளிச்சம் காரணமாக 64.4 ஓவர்கள்தான் வீச முடிந்தது, இதில் ஆட்ட முடிவில் கேப்டன் விராட் கோலி 124 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 44 ரன்கள் என்று நங்கூரம் பாய்ச்சியுள்ளார். எதிர்முனையில் ரகானே 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களுடன் ஆடி வருகிறார்.

நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன், வாக்னர், போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். கோலியும் ரகானேவும் இதுவரை 4வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் 58 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

இரு அணிகளும் உயர்தர டெஸ்ட் கிரிக்கெட்டில் விட்டுக் கொடுக்கா தரத்துடன் ஆடிவருகின்றன. பந்துகள் கடுமையாக ஸ்விங் ஆகும், கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும் கடினமான பிட்ச் இது.

நியூசிலாந்து அணி டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. 4 வேகப்பந்து வீச்சுக் கூட்டணியுடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆனால் 4 வேகப்பந்து கூட்டணி விரும்பத்தகுந்த முடிவை நியூசிலாந்துக்கு அளிக்கவில்லை.

ஷுப்மன் கில்லின் தைரியம்:

ஏனெனில் ரோகித் சர்மா (34), ஷுப்மன் கில் (28) நல்ல தொடக்கம் கொடுத்தனர். கடினமான பிட்சில் கடும் ஸ்விங்கில் ஆரம்ப சாதகங்களை நியூசிலாந்து பவுலர்கள் பயன்படுத்தவில்லை என்பதோடு தேவைப்படும் வேகமும் பந்து வீச்சில் இல்லை. ரோகித் சர்மா, ஷுப்மன் கில் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து ஆடினர். ஷுப்மன் கில் இரண்டு புல் ஷாட்கள் பிரமாதம், கைல் ஜேமிசனை 2 நேர் டிரைவ் என்று ஆடியதோடு வேகப்பந்து வீச்சுக்கு மேலேறி வந்து ஆடி தைரியத்தைக் காட்டினார் கில்.

ஷுப்மன் கில்


ரோகித் சர்மாவும் ஆஃப் சைடில் வலுவாக திகழ்ந்தார், டிம் சவுத்தியை இரண்டு பவுண்டரிகள் விளாசினார். முதல் ஒருமணி நேர ஆட்டத்தில் கில், ரோகித் ஜோடி நல்ல ஃப்ரீயாகவே ஆடினர்.

கைல் ஜேமிசன் தான் கடைசியில் விக்கெட்டைக் கைப்பற்றினார். கொலின் டி கிராண்ட் ஹோம் வேகம் இல்லாவிட்டாலும் விவேகமாக வீசினார், கடுமையாக ஸ்விங் செய்தார், ஆனாலும் இருமுறை அவர் சற்றே ஷார்ட் ஆக வீச ரோகித் அவரை 2 ஸ்கொயர் டிரைவ்கள் அடித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடைசியில் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்களில் இருந்த ரோகித் சர்மா, தன்னம்பிக்கையின் உச்சத்தில் இருந்ததால் கைல் ஜேமிசனின் வழக்கமான அவுட்ஸ்விங்கரை காலை நீட்டி ஆடப்போக எட்ஜ் ஆகி 3வது ஸ்லிப்பில் சவுத்தி கையில் போய் உட்கார்ந்தது.

நீல் வாக்னர் இன்ஸ்விங்கராக வீசி வந்தவர் ஷுப்மன் கில்லுக்கு ஒருபந்தை வெளியே எடுக்க கில் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

புஜாராவின் வேஸ்ட் இன்னிங்ஸ்:

புஜாரா இறங்கி ஓவராக அறுவையைப் போட்டார், அடிக்க வேண்டிய பந்துகளை கூட அடிக்காமல் நான் இந்திய அணியின் சுவர் என்பது போல் ஓவர் பிட்ச் பந்துகளை கைக்கு நேராக அடித்துக் கொண்டிருந்தார், ஷார்ட் ஆகக் குத்தி அழகாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே காட்டும் பந்துகளை தேர்ட்மேட்ன், டீப் பாயிண்ட் இல்லாத நிலையில் அப்பர் கட் செய்திருக்க வேண்டிய அவர் படுத்தி எடுத்தார்.

புஜாரா.


34 பந்துகள் அவர் டக்கிலேயே இருந்தார். அந்த அளவுக்கூ நியூசிலாந்து பந்து வீச்சு அச்சுறுத்தலாக இல்லை. மேலும் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய வேண்டும், இவர் ஒருமுனையில் இப்படி பிளேடு போட்டால் எதிர்முனையில் ரிதம் பேட்ஸ்மென் கோலிக்கு பெரிய கடினமாகி விடுகிறது, ஒரே பவுலரை 2-3 ஓவர்கள் கோலி போன்றவர்கள் ஆடினால் அதனால் அவர் ஆட்டமிழக்க வாய்ப்புள்ளது.

புஜாராவிடம் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வதுதான் டெஸ்ட் கிரிக்கெட் என்று யாராவது சொல்ல வேண்டும். கடைசியில் என்னவாயிற்றோ தெரியவில்லை வாக்னரை ஒரு கட் ஷாட் பவுண்டரியும் ஒரு கவர் டிரைவ் பவுண்டரியும் அடித்தார் புஜாரா, வாக்னர் கடுப்பாகி அடுத்த பந்தை பவுன்சராக்கி ஹெல்மெட்டில் அடி கொடுத்தார். புல் ஷாட் சிக்கவில்லை, ஹெல்மெட்டின் ஒருபகுதி தெறித்து மைதானத்தில் விழுந்தது. 54 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த புஜாரா, ட்ரெண்ட் போல்ட் மீண்டும் பந்து வீச வந்த போது இன்ஸ்விங்கருக்கு காலை முன்னால் நகர்த்தி தவறாக ஆடி எல்.பி. ஆகி வெளியேறினார். ரிவியூ செய்யலாமா என்ற அவரது நப்பாசையை கோலி முறியடித்தார். ஏனெனில் அது பிளம்ப் எல்.பி.

விராட் கோலி அபாரம்:

ரன்கள் வறண்ட நிலையிலும் விராட் கோலி ஒரு ராஜ கவர் டிரைவ் பவுண்டரி அடித்தார், சாமர்த்தியமாக பந்தை இடைவெளியில் தட்டி விட்டு ஒன்று, இரண்டு, மூன்று என்று பிரமாதமாக ஆடிவருகிறார். ரன்களை மிக வேகமாக ஓடுகிறார் கோலி.

ரகானேவும் பிரமாதமான ஷாட்களை ஆடினார், சவுத்தியின் பந்தில் அடித்த புல்ஷாட் இருவருக்குமான 50 ரன் கூட்டணியை உறுதி செய்தது.

கோலியையும் ரகானேவையும் டிம் சவுத்தி ஒரே ஓவரில் இரு முறை பீட் செய்தார், 65 ஓவர்கள் ஆகியும் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகின்றன. விராட் கோலி இங்கிலாந்து பிட்சில் எப்படி ஆட வேண்டுமோ அப்படி பந்துகளை நன்றாக வர விட்டு ஆடுகிறார்.

கோலி சர்வதேச போட்டியில் சதம் எடுத்து 18 மாதங்கள் ஆகின்றன. கோலியின் கவர் டிரைவ் மற்றும் மிட்விக்கெட் பிளிக் ஷாட்களை நியூசிலாந்து முடக்கினர். இன்று கோலி என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: