இந்திய அணியில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது, இளம் வீரர்கள் இதற்காக விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டிகளில் அதகளப் படுத்தி வருகின்றனர், ஹர்திக் பாண்டியாவின் கரியரைக் காலி செய்யக் காத்திருக்கும் மத்தியப் பிரதேச வீரர் வெங்கடேஷ் அய்யர் நேற்று சண்டிகர் அணிக்கு எதிராக 151 ரன்களை வெளுத்து வாங்கினார்.
ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்ப சரியான ஒரு ஆல்ரவுண்டர் கிடைத்துள்ளார், அவர்தான் வெங்கடேஷ் அய்யர். ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டியிலிருந்து விரைவில் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் ஒருநாள் அணியிலும் கூட அவருக்கு இடம் கிடைக்காது போல் தெரிகிறது.
சண்டிகர் பவுலர் ஜெகஜித் சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மத்தியப் பிரதேச அணி 14வது ஓவரில் 56/4 என்று தடுமாறி வந்தது, அப்போது 6ம் நிலையில் இறங்கிய வெங்கடேஷ் அய்யர், முதலில் கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவாவுடன் சேர்ந்து 122 ரன்கள் கூட்டணி அமைத்தார், ஸ்ரீவஸ்தவா 4 பவுண்டரி 1 சிக்சருடன் 80 பந்துகளில் 70 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். கடைசியில் புனீத் தாதே, குமார் கார்த்திகேயா இறங்கி சிறு அதிரடி இன்னிங்ஸை ஆட மத்தியப் பிரதேச அணி 331/9 என்ற ஸ்கோரை எட்டியது.
வெங்கடேஷ் அய்யர் சிக்சர் மழை பொழிய கடைசி 5 ஓவர்களில் 70 ரன்கள் விளாசப்பட்டது. மத்திய பிரதேச அணி 331 ரன்கள் எடுத்தாலும் சண்டிகர் மகாவிரட்டலில் ஈடுபட்டது அந்த அணி, 13.2 ஓவர்களில் 77/3 என்று குறுக்கப்பட்டாலும், தொடக்க வீரரும் கேப்டனுமான மனன் வோரா 95 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 105 ரன்கள் விளாசினார்.
இவருடன் அன்கிட் கவுஷிக் நின்று 119 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 111 ரன்களை எடுக்க இருவரும் சேர்ந்து 166 ரன்கள் சேர்த்தனர். இதனால் இலக்கை விரட்டி ஒரு அதிர்ச்சித் தோல்வியை மத்தியப் பிரதேசத்துக்கு அளித்து வெங்கடேஷ் அய்யரின் அதிரடிக்கு பதிலடி கொடுக்க முனைந்தது, ஆனால் 326 ரன்கள் என்று வெகுநெருக்கமாக வந்து தோல்வி தழுவியது. வெங்கடேஷ் அய்யர் 10 ஒவர்களில் 64 ரன்கள் விளாசப்பட்டார், ஆனால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் அய்யர். குறிப்பாக குரீந்தர் சிங் என்ற அதிரடி வீரர் 12 பந்தில் 18 ரன்கள் எடுத்து அபாயகரமாக திகழ்ந்த போது அவரை வெங்கடேஷ் அய்யர் வீழ்த்தினார்.
கே.எஸ்.பரத்தின் அதிரடி 161; ஷிகர் தவானின் தொடர் சொதப்பல்கள்:
ஷிகர் தவான் டெல்லி-ஹரியானா போட்டியில் மீண்டுமொரு முறை சொதப்பி 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஏற்கெனவே 0, 12, 14 என்பதுதான் இவரது ஸ்கோராக இருந்து வருகிறது, எனவே விரைவில் இவரிடமிருந்து ஓய்வு அறிவிப்பை எதிர்பார்க்கலாம். டெல்லி வீரர் ஜாண்டி சித்து 100 ரன்களையும் லலித் யாதவ் 75 ரன்களையும் அனுஜ் ராவத் என்ற 7ம் நிலை வீரர் 16 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சர்களை விளாசி 44 ரன்களை எடுத்ததால் டெல்லி 267/5 என்ற ஸ்கோரை எட்டி ஹரியாணாவை 10 ரன்களில் வீழ்த்தியது.
ஹரியாணா அணியில் சிவம் சவுகான் 107 ரன்களையும், பிரமோத் சந்திலா 78 ரன்களையும் எடுக்க 257 ரன்கள் வரை வந்து நெருக்கடி கொடுத்தனர். ஆனால் பவுலிங்கில் டெல்லி அணியில் பிரதீப் சங்வான் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தார்.
Also Read: பாண்டிச்சேரியிடம் தமிழ்நாடு அதிர்ச்சித் தோல்வி- விஜய்ஹசாரே டிராபி ரவுண்ட்-அப்
தென் ஆப்பிரிக்கா தொடருக்கான டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படாத விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத் 109 பந்துகளில் 161 ரன்கள் விளாசினார். இமாச்சல அணியை ஆந்திரா அணி 30 ரன்களில் வீழ்த்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay hazare trophy