ஆஸ்திரேலியாவுக்கு 2 மாதங்களுக்கும் மேலாக பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்று கோப்பையுடன் இன்று காலை தாயகம் திரும்பினர்.
டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றி வரலாறு படைத்தது, முன்னதாக டி20 தொடரையும் கைப்பற்றியது.
டெல்லி, மும்பை, பெங்களூரு விமானநிலையத்தில் வந்திறங்கிய இந்திய அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஹானேவுக்கு பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் வாத்தியக் கருவிகள் முழங்க மலர்த்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்கூர், பிரித்வி ஷா ஆகியோர் மும்பை விமானநிலையத்தில் வந்திறங்கினர். அவர்களுக்கு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், ரசிகர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
மும்பை கிரி்க்கெட் சங்க நிர்வாகிகளான விஜய் பாட்டீல், அஜின்கயே நாயக், அமித் தானி, உமேஷ் கான்வில்கா ஆகியோர் வீரர்களை வரவேற்றனர். விமானநிலையத்திலேயே ரஹானே கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடினார்.
பிரிஸ்பேன் டெஸ்டில் ஹீரோவாகத் திகழ்ந்த ரிஷாப் பந்த் டெல்லி விமானநிலையத்தில் தரையிறங்கினார். நெட் பந்துவீச்சாளராக சென்று ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய 3 பிரிவுகளில் அறிமுகமாகி அசத்திய தமிழக வீரர் நடராஜன் பெங்களூரு விமானநிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.
அங்கிருந்து நடராஜனை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள அவரின் சொந்த கிராமமான சின்னப்பம்பட்டிக்கு அழைத்துச் செல்ல உள்ளனர்.பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ரவிச்சந்திர அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சென்னை விமானநிலையத்துக்கு இன்று காலை வந்து சேர்ந்தனர்.
கேப்டன் ரஹானேவுக்கு பாந்த்ராவில் உள்ள அவரது இல்ல வளாகத்தில் ஆச்சரியங்கள் காத்திருந்தன , அவர் காரிலிருந்து இறங்கி உள்ளே காலடி எடுத்து வைத்தவுடன் டிரம்ப்பட் வாத்தியம் முழங்க மலர் தூவி அவரை மக்கள் வரவேற்றனர். ’அஜிங்கிய இங்கு இருக்கிறார்’ அஜிங்கிய அஜிங்கியா என்ற கோஷங்களுக்கு இடையே வாத்தியக்கருவிகள் முழங்க அவருக்கு மலர்த்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஹானே தன் குழந்தை மற்றும் மனைவி ராதிகாவுடன் வரவேற்பை உற்சாகமாக ஏற்றுக்கொண்டார்.