சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் சீனியர் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முரளி விஜய் தனது சமூக வலைதளப் பக்கங்களில் கூறியிருப்பதாவது- சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு பெறுகிறேன் என்பதை இந்த நாளில் மிகுந்த பணிவுடனும், நன்றியுடனும் அறிவிக்கிறேன். 2002 முதல் 2018 வரை வரையிலான ஆண்டுகள் என் வாழ்வில் எனக்கு சிறப்பு சேர்த்தன. குறிப்பாக இந்திய அணிக்காக விளையாடியதை மிகப் பெரும் கவுரவமாக நான் கருதுகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு தந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய சக அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள், அணி உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களுடைய ஆதரவு இல்லாமல், என்னுடைய கிரிக்கெட் பயணம் சிறப்பு பெற்றிருக்காது. கிரிக்கெட் ரசிகர்கள் எனக்கு அளித்த ஆதரவையும் ஊக்கத்தையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் என்னுடைய உயர்வு மற்றும் தாழ்வு என எனக்கு எப்போதும் உறுதுணையாக ரசிகர்கள் இருந்தனர். அவர்களுடனான என்னுடைய பயணத்தை என்றைக்கும் மறக்க முடியாது. கடைசியாக எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எனக்கு நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் எனக்கு தந்தனர். அவர்கள் எனக்கு முதுகெலும்பை போல் ஆதரவாக இருந்தனர்.
கிரிக்கெட் உலகில் இருக்கும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள ஆவலாக உள்ளேன். புதிய சூழல்களில் என்னுடைய புதிய சவால்களை எதிர்கொள்ள ஆவலாக இருக்கிறேன். கிரிக்கெட் வீரராக என்னுடைய புதிய பயணம் தொடங்க உள்ளது. என் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை நோக்கி நகர்கிறேன். என்னுடைய முன்னாள் அணி வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் கொடுத்த நினைவுகள் அனைத்துக்கும் நன்றி. இவ்வாறு முரளி விஜய் கூறியுள்ளார். இந்திய அணிக்காக முரளி விஜய் 87 சர்வதேச போட்டிகளில் விளையாடி ஒட்டுமொத்தமாக 4,490 ரன்களை எடுத்துள்ளார். இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,982 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோன்று 17 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket