பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20: உஸ்மான் கவாஜாவின் அதிரடி சதம்: சாதனை 247 ரன்கள் எடுத்த இஸ்லாமாபாத் வெற்றி

உஸ்மான் கவாஜா சதம்

அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் கேப்டனும் ஆஸ்திரேலிய வீரருமான உஸ்மான் கவாஜா 56 பந்துகளில் 105 ரன்கள் எடுக்க அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இது பாகிஸ்தான் சூப்பர் லீகின் அதிகபட்ச ஸ்கோராகும்.

 • Share this:
  இலக்கை விரட்டிய  பெஷாவர் அணி 20 ஓவர்களில் 232 ரன்கள் வரை வந்தது. ஆனால் 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வி கண்டது.

  பெஷாவர் அணியின் கேப்டன் வகாப் ரியாஸ் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இஸ்லாமாபாத் அணியின் பொறுப்பு கேப்டன் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா தொடக்க வீரராகக் களமிறங்கி 56 பந்துகளில் 13 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 105 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், இவருடன் இறங்கிய நியூசிலாந்தின் கொலின் மன்ரோ 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 28 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார்.

  ஆசிப் அலி 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 43 ரன்கள் விளாசினார். பிராண்டன் கிங் 22 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் வெளுத்து வாங்கினார்.

  தொடர்ந்து ஆடிய பெஷாவர் அணியில் ஷோயப் மாலிக் 68 ரன்களையும் கம்ரன் அக்மல் 53 ரன்களையும் விளாச கடைசியில் கேப்டன் வகாப் ரியாச் 15 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் நாட் அவுட்டாக திகழ்ந்தார், இவரும் உமைத் ஆசிப் 9 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தும் கடைசி 22 பந்துகளில் 47 ரன்கள் விளாசியும் 247 ரன்கள் இலக்கை எட்ட முடியவில்லை.

  10 ஒவர்கள் முடிவில் கம்ரன் அக்மல் விக்கெட்டை அப்போதுதான் இழந்த பெஷாவர் 93/3 என்று இருந்தது. அதன் பிறகு 5 ஓவர்களில் ஷோயப் மாலிக், ஸ்டெபானி ருதர்போர்டு 81 ரன்களை விளாசித்தள்ளினர். ஜஃபர் கோஹார் ஓவரில் ருதர்போர்டு லாங் ஆன், லாங் ஆஃப், டீப் ஸ்கொயர்லெக்கில் 4 சிக்சர்களை விளாசினார். 30 ரன்கள் அந்த ஓவரில் வந்தது இதனையடுத்து அவர் 4 ஓவர்களில் 65 ரன்களை விட்டுக் கொடுத்து பிஎஸ்.எல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் கொடுத்த பவுலர் ஆனார்.

  ஆனால் ருதர்போர்டு, மாலிக் இருவரும் சிறிய இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இதனால் பெஷாவர் 185/6 என்று ஆனது. அதன் பிறகுதான் வகாப் ரியாஸ், உமைத் ஆசிப் இணைந்து ஸ்கோரை 232 வரை கொண்டு சென்றனர் ஆனால் 15 ரன்களில் தோல்வியுற்றனர்.

  முன்னதாக இஸ்லாமாபாத் அணியின் தொடக்க வீரர்கள் கவாஜா, கொலின் மன்ரோ முதல் 3 ஓவர்களை நிதானமாக ஆடி அடுத்த 3 ஓவர்களில் 35 ரன்களை விளாசினர். இருவரும் சேர்ந்த் 10வது ஓவரில் 98 ரன்கள் என்று கொண்டு வந்தனர். இவர்கள் உருவாக்கிய உத்வேகத்தை ஆசிப் அலி விட்டு விடாமல் விளாசி 14 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 43 விளாச இஸ்லாமாபாத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 20 ஓவர்களில் 247/2. இந்த வெற்றி மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் 9 ஆட்டங்களில் 7-ல் வென்று 14 புள்ளிகளுடன் டாப் இடத்தில் உள்ளது. பெஷாவர் அணி 10 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.
  Published by:Muthukumar
  First published: