U19 WorldCup | மைதானத்தில் மோதிக்கொண்ட இந்திய, வங்கதேச வீரர்கள் - வீடியோ

Under 19 world cup final

U19 WorldCup | மைதானத்தில் மோதிக்கொண்ட இந்திய, வங்கதேச வீரர்கள் - வீடியோ
Under 19 world cup final
  • News18
  • Last Updated: February 10, 2020, 8:50 AM IST
  • Share this:
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி, வங்கதேச அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்தியா - வங்கதேச அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சக்சேனா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தாலும், மற்றொரு தொடக்க வீரரான களமிறங்கிய ஜெய்ஸ்வால் 88 ரன்கள் எடுத்தார்.


அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால், 47.2 ஓவர்களில் இந்திய அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆரம்பம் முதலே நிதானமாகவே விளையாடியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், குறைந்த ரன்கள் இலக்கு என்பதால், வங்கதேச அணி எளிதாக வெற்றியை நெருங்கியது.

அப்போது மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, ரன் இலக்கும் 170 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, 42.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து, வங்கதேச அணி வெற்றிபெற்று, உலகக் கோப்பையையும் கைப்பற்றியது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதல்முறையிலேயே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வங்கதேசம் சாதனை படைத்துள்ளது.இந்த போட்டியின் நாயகனாக வங்கதேச அணி கேப்டன் அக்பர் அலியும், தொடர் நாயகனாக இந்தியாவின் ஜெய்ஸ்வாலும் தேர்வு செய்யப்பட்டனர்.

பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றவுடன் அந்த அணி வீரர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்து வெற்றியை கொண்டாடினர். அப்போது எதிர்பாராத விதமாக இரு அணியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இந்திய அணி பயிற்சியாளர் ஓடி வந்து இந்திய அணி வீரர்களை சமாதானப்படுத்தினார்.



எனினும் மோதல் கட்டுப்படவில்லை. வாக்குவாதம் அதிகமானதை அடுத்து அதிகாரிகள் பலரும் மைதானத்திற்குள் வந்து இரு அணி வீரர்களையும் எச்சரித்து அப்புறப்படுத்தினர். இந்த மோதலால் மைதானத்தில் சில நிமிடங்கள் பரபரப்பானது.

வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள், இந்திய வீரர்களை கடும் வார்த்தைகளால் கேலி செய்ததாகவும், அதனால், மோதல் ஏற்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்