ரஷ்யாவின் தாக்குதல்களினால் இயற்கை வளம் நிரம்பிய உக்ரைனின் இருப்பே அபாயத்திற்குள்ள நிலையில் உக்ரைனில் கிரிக்கெட் மட்டும் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.
மெடிட்டரேனியன் கிரிக்கெட் லீக் என்ற கிரிக்கெட் தொடரில் ஆட அங்கு வீரர்கள் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்சிஎல் என்று அழைக்கப்படும் இந்த கிரிக்கெட் தொடருக்கு சைமன் கேடிச், பிராட் ஹாக் ஆகிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் பிராண்ட் தூதுவர்களாக உள்ளனர்.
உக்ரைன் தொடக்க வீரர் பெயர் வெய்ன் ஜீஷெக் (Wayne Zschech).உக்ரைனில் கிரிக்கெட் டீமா என்று பலரும் ஆச்சரியப்படலாம் ஆனால் அங்கு போர் இருந்தாலும் கிரிக்கெட்டும் உள்ளது. ஜீஷெக் உண்மையில் ஆஸ்திரேலியா வீரர், இவர் 1993லிருந்து உக்ரைனில் தான் இருக்கிறார். இவர் ஓப்பனிங் பேட்டர் என்பதோடு சர்ச் பாதிரியாகவும் இருந்து வருகிறார். உலக அளவிலான கிறிஸ்துவ திருப்பணி இயக்கத்தின் கள செயல்பாட்டாளராகவும் உள்ளார் ஜீஷெக்.
இவர் ஏகப்பட்ட நிவாரணப்பணிகளில் சமூகப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அகதிகளுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணச் சேவை வழங்கும் அமைப்பில் பணியாற்றி வருகிறார். இதோடு ஜீஷெக் உக்ரைன் கிரிக்கெட் வாரியத் தலைவர், இவரது சக வீரர் ஜக்ரூஸ்கி உக்ரைன் கிரிக்கெட் வாரியத்தின் துணைத்தலைவர்.
ஆசியாவிலிருந்து படிக்கச் சென்றவர்கள், பணிக்குச் சென்றவர்களைக் கொண்டு ஒரு கிரிக்கெட் அணியை உருவாக்கியுள்ளனர், இதுதான் உக்ரன் அணி என்பது. இப்போது போரினால் இவர்கள் சொந்த நாட்டுக்குச் சென்று விட்டனர், இவர்கள் துபாய் போன்ற நடுநிலை நகரங்களில் கூடி பயிற்சி பெற்று தொடருக்காக குரேஷியா செல்ல வேண்டும்.
ஐசிசி உறுப்பு நாடாக உக்ரைன் கிரிக்கெட் அணி இல்லையென்றாலும் கிரிக்கெட்டிலும் பலர் ஆர்வம் காட்டி அணியை உருவாக்கியுள்ளனர். ஆனால் ஒரு முழுநேர கிரிக்கெட் ஆடும் நாடு என்று இதனை கூற முடியாது. ஆனால் உக்ரைன் கிரிக்கெட் அமைப்பின் உறுப்பினர் கோரிக்கை விண்ணப்பம் ஜூலை மாதம் ஐசிசி பரிசீலனைக்கு வருவதாக கிரிக் இன்போ செய்திகள் கூறுகின்றன.
போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஆப்கானிஸ்தான் மட்டுமே ஐசிசி உறுப்பு நாடாக உள்ளது. உக்ரைன் கிரிக்கெட் சங்க தலைமைச் செயலதிகாரி கோபஸ் ஆலிவியர் தென் ஆப்பிரிக்கா காரர், மறைந்த பாப் உல்மரிடம் பயிற்சி பெற்று பயிற்சியாளராகவும் இவர் செயல்படுகிறார். இவர் முதன் முதலில் உக்ரைனில் பள்ளி ஆசிரியர் வேலைக்குத்தான் வந்தார். 2018-ல் இவர் வருவதற்கு முன்பே கிரிக்கெட் அங்கு ஓரளவுக்கு இருந்தது.
உக்ரைனின் ஆங்கிலம் கற்றுத்தரும் முறையில் அதிருப்தி அடைந்த ஆலிவியர், கிரிக்கெட் மூலம் ஆங்கிலம் கற்கும் புதிய கற்றல் முறையைப் புகுத்தினார். இதன் மூலம் தனியார் பள்ளிகளில் கிரிக்கெட் என்பது புகுந்தது. சுமார் 2,000 குழந்தைகள் இன்று கிரிக்கெட் பற்றி அறிந்திருக்கின்றனர் என்கிறார் ஆலிவியர்.
ஐசிசி உறுப்பினராவதற்கு உக்ரைனுக்காக பாடுபடுபவர் ஆலிவியர், இதற்காக ஐசிசி உறுப்பினராக உள்ள குரேஷியாவுடன் நெருக்கமான தொடர்பில் இருக்கிறார் ஆலிவியர். ஆலிவியர், ஜீஷெக் உள்ளிட்டோரின் முயற்சியினால் அங்கு கிரிக்கெட் வந்துள்ளது, ஐசிசி உறுப்பினர் ஆவது நடக்குமா என்பதை ஜூலை மாதம் தான் அறிய முடியும்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.