Home /News /sports /

U-19 உலகக் கோப்பை- 5-வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்தியா?

U-19 உலகக் கோப்பை- 5-வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்தியா?

டாம் ப்ரெஸ்ட், யாஷ் துல்

டாம் ப்ரெஸ்ட், யாஷ் துல்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இந்தியாவும் இங்கிலாந்து அணியும் மோதவுள்ளன.

    14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மேற்கிந்திய தீவுகள் நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.

    இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தனை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றியுள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலியாவுடன் அரையிறுதிப் போட்டியை எதிர்கொண்ட இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ந்து நான்காவது முறையாக ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று ஆண்டிகுவாவிலுள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்தியா, இங்கிலாந்து அணி மோதும் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரையில் நடைபெற்றுள்ள 14 ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரில் 8 முறை இறுதிப் போட்டிகளில் விளையாடி 4 முறை இந்தியா கோப்பையை வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 1998-ம் ஆண்டுக்குப் பிறகு கோப்பை வெல்லவில்லை.

    கேப்டன் யாஷ் துல் மற்றும் துணை கேப்டன் ஷேக் ரஷீத் ஆகியோர் கொரோனா தொற்று காரணமாக 3 லீக் ஆட்டங்களில் 2ஐ தவறவிட்டனர். இருப்பினும் இந்திய அணி பைனல் போட்டி வரை சென்றுள்ளது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய வலுவான அணியாக உள்ளது. ஆரம்ப விக்கெட்டுகளை இழந்த பிறகும், யாஷ் மற்றும் ரஷீத் 3வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் வெற்றிக்கு பிறகு, கடந்த 24 ஆண்டுகாலமாக கோப்பையை வெல்லாமல் இருப்பதை முடிவுக்கு கொண்டு வர இங்கிலாந்து ஆர்வமாக உள்ளது. இந்தியாவைப் போலவே இங்கிலாந்தும் இந்தப் தொடர் முழுவதும் தோற்கடிக்கப்படவில்லை. எனவே, இந்த இறுதிப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Cricket, U19 WorldCup

    அடுத்த செய்தி