மெல்போர்ன் டெஸ்டின் முதல் நாளில் 47 ரன்கள் அடித்திருந்தபோது கோலி கொடுத்த கேட்ச்சைக் ஆஸ்திரேலியாவின் கேப்டன் டிம் பெய்ன் கோட்டை விட்டார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இன்று (26.12.18) காலை 5 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக ஹனுமா விஹாரியும், மயங் அகர்வாலும் களமிறங்கினர்.

மெல்போர்னில் டாஸ் போடும் இரு அணி கேப்டன்கள். (BCCI)
ஹனுமா விஹாரி 8 ரன்களில், பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆரோன் பிஞ்ச் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் மயங் அகர்வால், நிதானமாக விளையாடி அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். அவரும், பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் 76 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அறிமுக டெஸ்டில் அரைசதம் அடித்த மயங் அகர்வால். (BCCI)
பின்னர் வந்த புஜாரா அரைசதம் அடிக்க, முதல் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. கேப்டன் கோலி 47 ரன்களுடனும், புஜாரா 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். போட்டியின் 87-வது ஓவரில் விராட் கோலி கொடுத்த கேட்சை ஆஸ்திரேலியாவின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான டிம் பெய்ன் கோட்டைவிட்டார்.
மிச்செல் ஸ்டார்க் வீசிய 87-வது ஓவரின் முதல் பந்து கோலியின் பேட்டின் முனைப்பகுதியில் பட்டு முதல் ஸ்லிப்புக்குச் சென்றது. அதை பாய்ந்து பிடிக்க முயற்சித்த டிம் பெய்ன் கேட்ச்சைக் கோட்டைவிட்டார். முக்கியமான கேட்ச்சை தவறவிட்டதால், ஆஸ்திரேலிய அணி அதற்கான விலையை 2-வது நாளில் கொடுக்க வேண்டியதிருக்கும்.
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.