மைக்கேல் வான் என்ற இங்கிலாந்து முன்னாள் கேப்டன் தன்னை ஒரு பெரிய கிரிக்கெட் வீரராக எண்ணிக்கொள்ளட்டும் அதில் தவறில்லை, ஆனால் ஆசிய நாட்டைச் சேர்ந்த வீரர்களை வசைபாடுவதாகட்டும் குறிப்பாக இந்திய அணி, விராட் கோலி போன்றோரை அவமதிப்பாகப் பேசுவதிலாகட்டும் ஒரு கிரிக்கெட் விமர்சகர் என்பதைத் தாண்டிய வன்மம் வெளிப்படுவதைப் பார்த்திருக்கலாம். ஆனால் அது அவருடைய நிறவெறி, இனவெறி அடிப்படையினால் விளைவது என்பது இப்போது யார்க் ஷயர் நிறவெறி வெளிப்பாட்டில் அம்பலமாகியுள்ளது.
யார்க் ஷயர் அணிக்கு ஆடிய பாகிஸ்தான் நாட்டு வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம் வீரர் அஜீம் ரஃபீக் என்பவர் பரபரப்பு நிறவெறிக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இது பெரிய விவகாரமாகி கிணறு வெட்ட பெரிய பூதமே கிளம்பியுள்ளது, மேத்யூ ஹோகார்ட் என்ற முன்னாள் இங்கிலாந்து பவுலர் இவர் மீது கடும் நிறவெறி வசைகளை பாடியுள்ளார். அஜீம் ரஃபீக், ஆதில் ரஷீத், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராணா நவேத், அஜ்மல் ஆகியோரை ஒரே இடத்தில் அமருமாறு கூறி நிறவெறி புத்தியைக் காட்டியுள்ளார்.
மேலும் இவர்களை எலிபெண்ட் வாஷர்ஸ் என்றும் இன்னும் மோசமான நிறவெறி வசைகளைப் பாடியுள்ளார். ஆனால் இவையெல்லாம் நட்பு ரீதியான கிண்டல் என்ற பெயரில்... இந்த வீரர்களுக்குப் பாவம் இது நிறவெறி, இனவெறி என்றே தெரியவில்லை. பிறகுதான் புரிந்த போது பொங்கி எழுந்தனர்.
இதில் பாதிக்கப்பட்ட ரஃபீக் வழக்கு தொடர்ந்து அது நடைபெற்று வருகிறது, இதில் மைக்கேல் வான் எப்படி நிறவெறி மனப்பான்மையாளர் என்பதை அவர் வெளியிட்ட போது பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. அதுவும் குறிப்பாக ஆசிய வீரர்களை நோக்கிய அவரது கண்ணோட்டம் இத்தனை மோசனமானதா என்ற ஆச்சரியமும் எழுந்தது, எனவே அவரது இந்திய அணி மீதான, விராட் கோலி மீதான விமர்சனங்கள் கிரிக்கெட்டையும் தாண்டிய இனவெறி வன்மம் சார்ந்தது என்பது ரஃபீக் கூற்றிலிருந்து உண்மையாகிறது.
இது தொடர்பாக ரஃபீக் கூறியதாவது, “மைக்கேல் வான் என்னுடைய ஹீரோ. 2005 ஆஷஸ் தொடரில் அவரது கேப்டன்சியை நான் ரசித்து பார்த்தேன். அவரது வழித்தோன்றலாக நான் என்னைக் கருதி கிரிக்கெட் ஆடி வந்தேன். 2009-ல் ஒரே ஓய்வறையில் மைக்கேல் வானுடன் நானும் இருப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. அப்போது எனக்கு வயது 18.ஆசிய வீரர்களான நான், சயீத் அஜ்மல், ரானா நவேத், ஆதில் ரஷீத் ஆகியோர் இருந்தோம். நாட்டிங்கம் ஷயருக்கு எதிரான போட்டியில் அனைத்து வீரர்களும் இணைந்து பேசிய பின்பு களத்தில் இறங்கும் முன் அவர் கூறியது எனக்கு பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
“நீங்கள் (ஆசியர்கள்) அளவுக்கதிகமாக இருக்கிறீர்கள், இது பற்றி பேசியாக வேண்டியுள்ளது”, என்றாரே பார்க்கலாம். அதன் பிறகு நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து ஆடவேயில்லை. அப்போது அவர் கூறியது எனக்கு கடும் மனக்கசப்பை ஏற்படுத்தியது. பிறகு கடும் கோபம் எழுந்தது. இங்கிலாந்துக்கு ஆட வேண்டும் என்பதால் சரி போகட்டும் என்று விட்டு விட்டேன். ஆனால் இதை மறக்க முடியாது. யார்க்ஷயரில் நிறைய இதைவிட மோசமாக ஏசியிருக்கிறார்கள், ஆனால் என் கிரிக்கெட் ஹீரோவிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை வந்ததை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை” என்றார். இப்படிப்பட்டவர்தான் இன்று வாய் கிழியப் பேசும் இந்த மைக்கேல் வான்.
அஜீம் ரஃபீக் கூறியதை இங்கிலாந்து ஸ்பின்னர் ஆதில் ரஷீத் அப்படியே ஆமோதிக்கிறார். ஆலி ராபின்சன் மீது நடவடிக்கை எடுக்கும் போது பெரிதாகப் பேசிய ஜோ ரூட்டும் ரஃபீக் மீதான நிறவெறியை கண்டிக்காமல் வேடிக்கைப் பார்த்தார் என்பதுதான் வேதனை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.