முகமது சிராஜை பார்த்தவுடன் பீறிட்டு அழுத தாய் ஷபானா பேகம்: தந்தையை இழந்த சோகத்தில் தாய்-மகன் கண்ணீர்

முகமது சிராஜ்.

நிறைய முறை அவரை அழைக்க வேண்டும் என்று நினைப்பேன், பிறகுதான் புரியும் அவர் உயிரோடு இல்லை என்பது. அவரை நான் நிரம்பவும் இழந்துள்ளேன், அவரது ஆன்மா சாந்தியடையட்டும்- சிராஜ்.

 • Share this:
  வெற்றிகரமான ஆஸ்திரேலியா தொடருக்குப்பிறகு நாடு திரும்பிய இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஹைதராபாத்தில் தன் இல்லத்துக்குத் திரும்பிய போது 6 மாதங்களுக்குப் பிறகு தன் 2வது மகனைப் பார்த்ததில் அவரது தாயார் ஷபானா பேகம் கண்ணீரை அடக்க முடியாமல் அழுது தீர்த்தார்.

  3 டெஸ்ட் போட்டிகளில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய சிராஜ், பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதை மறக்க முடியாது.

  முன்னதாக தன் தந்தையின் சமாதிக்குச் சென்ற சிராஜ் மலரஞ்சலி செலுத்தினார். இல்லம் திரும்பியவுடன் தாயைக் கண்ட மகிழ்ச்சி, அவருக்கோ தன் 2வது மகன் 6 மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியதால் ஏற்பட்ட உச்சபட்ச உணர்ச்சி.

  நுரையீரல் நோய் காரணமாக சிராஜின் தந்தை முகமது கவுஸ் 53 வயதிலேயே காலமானார். இவர் முன்பு ஆட்டோ ஓட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  “நான் வீடு திரும்பியவுடன் என் அம்மாவைப் பார்த்து அழுதேன். ஆனால் வலுவான மனநிலையில், தன்னம்பிக்கையுடன் இருந்தேன்” என்று அவர் பிற்பாடு ஊடகங்களிடம் தெரிவித்தார்.

  சிராஜ் வீடு திரும்பியவுடன் நடந்தவற்றை கிரிக்கெட் ஊடகம் ஒன்றுக்கு விவரித்த சிராஜின் பால்ய நண்பர் ஷபி, 6 மாதமாக தன் மகனைப் பார்க்கவில்லை, இதனால் ஊர் திரும்பியவுடன் அவருக்கு அழுகை பீறிட்டு வந்தது, என்றார், சிராஜ் தன் தாயாரை தேற்றினார்.

  பிறகு தனக்கு ஹைதராபாத் காலை உணவு வேண்டும் என்று சிராஜ் கேட்டதாக அவர் நண்பர் தெரிவித்தார்.

  செய்தியாளர்கள் சந்திப்பில் சிராஜ் கூறியது:

  என் தந்தையின் இழப்பை என்னால் முதலில் தாங்க முடியவில்லை. மன அழுத்தத்துக்கு ஆளானேன். குடும்பத்தினருடன் பேசினேன், தந்தையின் கனவை நிறைவேற்று என்றனர், தந்தையின் கனவை நிறைவேற்றினேன்.

  அவர் மரணமடையும் போது கூட நான் இங்கு இல்லை என்பதை நினைத்த போது சமாதியருகே என் தொண்டை அடைத்தது. நான் எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டும் என் தந்தைக்கே அர்ப்பணிப்பேன்.

  ஒவ்வொரு முறை நான் சிறப்பாக ஆடும்போதும் நான் அவருடன் தொடர்பு கொள்ள ஆசைப்படுவேன். நிறைய முறை அவரை அழைக்க வேண்டும் என்று நினைப்பேன், பிறகுதான் புரியும் அவர் உயிரோடு இல்லை என்பது. அவரை நான் நிரம்பவும் இழந்துள்ளேன், அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

  என்றார் சிராஜ்.
  Published by:Muthukumar
  First published: