Home /News /sports /

9 வயது முதலே தினமும் 1,500 பவுன்சர்களை எதிர்கொண்டு பயிற்சி: ஷுப்மன் கில் பேட்டிங் சக்சஸ் ஸ்டோரி

9 வயது முதலே தினமும் 1,500 பவுன்சர்களை எதிர்கொண்டு பயிற்சி: ஷுப்மன் கில் பேட்டிங் சக்சஸ் ஸ்டோரி

ஷுப்மன் கில்.

ஷுப்மன் கில்.

பஞ்சாபின் மொஹாலியிலிருந்து 300 கிமீ தொலைவில் உள்ள கிராமத்தில் தான் கில்லின் குடும்பம் வசித்து வந்தது. ஆனால் தன்னைப்போல் தன் மகன் ஆகிவிடக்கூடாது என்பதால் கிராமத்திலிருந்து நகரத்துக்கு குடிபெயர முடிவெடுத்தார் லக்விந்தர். மொஹாலிக்கு வந்து விட்டார்.

மேலும் படிக்கவும் ...
கோட்டையைத் தகர்த்த ஆஸி.தொடரின் மிகப்பெரிய கண்டுப்பிடிப்பு என்றால் அது தொடக்க வீரர் ஷுப்மன் கில் தான். பேக்ஃபுட்டில் அவர் ஆடும் ஷாட்கள் இந்தியாவிற்கு ஆடிய, 1983 உ.கோப்பை வெற்றியில் பெரும்பங்களித்த மும்பையின் சந்தீப் பாட்டீலை நினைவுபடுத்துவதாக உள்ளது.

ஆஸ்திரேலியா கோட்டையைத் தகர்த்த டெஸ்ட் தொடர் வெற்றியில் ஷுப்மன் கில் 6 இன்னிங்ஸ்களில் 259 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம் இவர், பெரிய திறமைகள் படைத்தவர்.

கொஞ்சம் சந்தீப் பாட்டீல், கொஞ்சம் அசாருதீன் கலந்த சூப்பர் ஸ்டைலிஷ் பேட்ஸ்மென் என்றால் இன்றைக்கு ஷுப்மன் கில் தான்.

மற்ற இந்திய வலது கை பேட்ஸ்மென்கள் போல் அல்லாமல் இவர் தன் இடது காலை முழுதாகவோ, அல்லது அரைகுறையாகவோ முன்னால் நீட்டி ஆடுவதில்லை, அதே போல் மட்டையை உடலுக்கு வெளியே தள்ளிக்கொண்டு போய் நீட்டுவதில்லை சுழற்றுவதில்லை.

சச்சின் டெண்டுல்கர் 17 வயதிலேயே ஆஸ்திரேலிய பிட்ச்களுக்காக முதலில் வலது காலை பின்னால் நகர்த்தி பந்து வந்தபிறகு ஸ்விங் பவுன்ஸ் ஆன பிறகு ஆடுவார் அல்லது ஆடாமல் விடுவார். இப்படி ஆடுவதால் பவுலர்கள் அவ்வப்போது ஃபுல் லெந்தில் வீச முனைவார்கள், எல்.பி.எடுக்க ஆசைப்படுவார்கள், இதனால் பந்து மட்டைக்கு வரும்போது ஸ்கோரிங் வாய்ப்புகள் அதிகம்.

அதே பார்முலாதான் தற்போது ஷுப்மன் கில் பயன்படுத்துகிறார், பேக் அண்ட் அக்ராஸ் பேட்டிங் கால் நகர்வு என்பதே அதன் தாரக மந்திரம்.

1981 தொடருக்கு கவாஸ்கர் தலைமையில் ஆஸ்திரேலியா சென்ற போது சந்தீப் பாட்டீலுக்கு லென் பாஸ்கோ, டெனிஸ் லில்லி, போன்றோர் பவுன்சர்களாக வீசித்தள்ளுவார்கள், அப்போதெல்லாம் இப்போதுள்ள பாதுகாப்பான ஹெல்மெட் கூட இல்லை, முகத்தை மறக்கும் ஹெல்மெட் இல்லை அது, வெறும் தலைக்கவசம் மட்டுமே. அத்தகைய பயங்கர பவுலிங்குக்கு எதிராக தாவாங்கட்டை, பின் மண்டையிலெல்லாம் சந்தீப் பாட்டீல் அடி வாங்கியிருக்கிறார்.

ஆனால் திரும்பி வந்து பின் காலில் சென்று வெளுத்து வாங்குவார். அப்படித்தான் அடிலெய்டில் சந்தீப் பாட்டீல் ஒரு 174 ரன்களை விளாசினார். அந்த இன்னிங்ஸ்தான் இன்று வரை ஆஸ்திரேலியாவில் இந்திய ஒருவர் ஆடிய ஆகச்சிறந்த இன்னிங்ஸ் என்று இயன் சாப்பல் விதந்தோதுவார்.

இந்த சந்தீப் பாட்டீல் தான் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸை ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் விளாசியதோடு 80 ரன்களிலிருந்து ஒரே ஓவரில் 104 என்று சதம் கண்டவர்.

இன்று ஷுப்மன் கில்லைப் பார்த்தால் சந்தீப் பாட்டீலைப் பார்ப்பது போல் உள்ளது. அதே போல் கொஞ்சம் அசாருதீன், மார்க் வாஹ் ஆகியோரது ஸ்டைல்களும் உள்ளன.

பாட் கமின்ஸ், ஹேசில்வுட், ஸ்டார்க் அன்று ஷார்ட் பிட்ச் பந்துகளாக போட்டுத் தாக்க பிரிஸ்பனின் 5ம் நாள் உடைந்த பிட்சில் புஜாரா ஒருமுனையில் சுவராக நின்று பந்துகளை உடம்பில் வாங்கிக் கொண்டார். ஆனால் ஷுப்மன் கில் அதே பந்துகளை அனாயசமாக ஹூக், புல்ஷாட், அப்பர் கட் என்று எதிர்கொண்டதோடு, மிட் ஆனிலும் புல் ஷாட் ஆடினார். இதுதான் சந்தீப் பாட்டீல், மொகீந்தர் அமர்நாத் ஆகியோரது ஸ்டைல் ஆகும். அன்று ஸ்டார்க் வீசிய ஷார்ட் பிட்ச் பந்துகள் நிரம்பிய ஓவரில் 20 ரன்கள் விளாசினார். அதுவும் விராட் கோலிக்கு எப்படி முன்காலில் வந்து ஆடும் ராஜ கவர் டிரைவ் பிரமாதமான ஷாட்டோ, ஷுப்மன் கில்லின் பேக்ஃபுட் பஞ்ச் ஷாட்கள் கண்களில் ஒற்றிக்கொள்ளும் ரகம்.

தந்தையினால் பெற்ற ஷார்ட் பிட்ச் பவுலிங்குக்கு எதிரான பேட்டிங் பயிற்சி:

ஷுப்மன் கில் தந்தை லக்விந்தர் பஞ்சாப் அணிக்கு ஆட முடியாமல் போனது, ஆனால் அவரது கிரிக்கெட் நுட்பம் அளப்பரியது. ஷுப்மன் கில்லின் முதல் பயிற்சியாளர் அவர் தந்தையே.

பஞ்சாபின் மொஹாலியிலிருந்து 300 கிமீ தொலைவில் உள்ள கிராமத்தில் தான் கில்லின் குடும்பம் வசித்து வந்தது. ஆனால் தன்னைப்போல் தன் மகன் ஆகிவிடக்கூடாது என்பதால் கிராமத்திலிருந்து நகரத்துக்கு குடிபெயர முடிவெடுத்தார் லக்விந்தர். மொஹாலிக்கு வந்து விட்டார்.

ஷார்ட் பிட்ச் பவுலிங் ஒரு வீரரின் கிரிக்கெட் கரியரையே மாற்றக்கூடியது, இது பலரது கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துள்ளது, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் போன்றோர்களுக்கே டெஸ்ட்டில் பெரிய இடம் கிடைக்காமல் போனது இந்த ஷார்ட் பிட்ச் பவுலிங்கை கையாளத் தெரியாததுதான்.

இந்நிலையில் ஷுப்மன் கில் தந்தை ஆங்கில தினசரி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “கில்லுக்கு 9 வயதாக இருக்கும் போதிலிருந்து தினமும் 1,500 ஷார்ட் பிட்ச், பவுன்சர் பந்துகளை வீசி பயிற்சியளித்திருக்கிறேன். தார்ப்பாய் ஒன்றில் பந்தை வீசுவேன் அதில் வேகம் அதிகமிருக்கும். மேலும் ஒரேயொரு ஸ்டம்பை வைத்து மட்டைபோல் பயன்படுத்தி பயிற்சி செய்திருக்கிறான் கில். அதனால்தான் பந்து மட்டையின் நடுவில் படுகிறது பாருங்கள்.

பிறகு மேட் பிட்சில் நிறைய ஆடியிருக்கிறான், அதில் பந்துகள் எகிறும். மேட்டில் ஆடினால் பேக்ஃபுட் ஆட்டம் நன்றாக வரும். உயர்மட்ட கிரிக்கெட்டுக்கு ஷார்ட் பிட்ச், பவுன்சர்களை நன்றாக எதிர்கொள்ள வேண்டியது அவசியம்” என்கிறார் ஷுப்மன் கில்லின் தந்தை... இல்லையில்லை ஷுப்மன் கில்லின் பயிற்சியாளர்-தந்தை.
Published by:Muthukumar
First published:

Tags: India vs Australia, Sachin tendulkar, Shubman Gill

அடுத்த செய்தி