ஐபிஎல் தொடரில் ஆ... ஊ என்று குதித்த வீரர்களெல்லாம் உண்மையான கிரிக்கெட்டில் சொதப்பி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரில் 0-2 என்று உதை வாங்கியது ராகுல் திராவிட் பயிற்சிப்பொறுப்பின் மீதும் ரிஷப் பண்ட்டை கேப்டனாக்கியதன் மீதும் கடும் விமர்சனங்களை ஈர்த்துள்ளது.
இந்திய அணியிடம் போராடும் குணம் மிகவும் தாழ்ந்து விட்டது என்று இந்திய அணியின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் சாடியுள்ளார், ராகுல் திராவிட் இன்னும் கண்டிப்புடன் செயல்பட்டு, வலுவான வார்த்தைகளை வீரர்களிடத்தில் சொல்ல வேண்டும் என்கிறார் ஜாகீர் கான்.
கிரிக்பஸ் இணையதள விவாதத்தில் ஜாகீர் கான் கூறும்போது, “கிளாசன் - பவுமா கூட்டணி சேர்ந்து அடித்து நொறுக்கும் போது இந்திய அணியின் உந்துதல் தாழ்ந்திருந்ததை என்னால் உணர முடிந்தது. களத்தில் இது தெரிந்தது. ராகுல் திராவி உள்ளிட்டோர் இதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டு விரைவில் வலுவான சொற்களால் இந்திய வீரர்களிடத்தில் பேச வேண்டும்.
விரைவில் ராகுல் திராவிட் இதைச் செய்ய வேண்டும் அடுத்த டி20யில் தோற்றால் தொடரை இழப்போம். 40 ஓவர்கள் போராடி ஆட அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிய ராகுல் திராவிட் சில கடினமான உரையாடல்களைத் துவக்க வேண்டும்.
முதல் போட்டியில் இந்தியா நல்ல நிலையிலிருந்து போட்டியை கோட்டை விட்டது, 2வது போட்டியில் புவனேஷ்வர் குமார் அருமையாக வீசி நல்ல தொடக்கம் கொடுத்த பிறகு வெற்றி பெற முடியாமல் போயுள்ளது. இந்தியாவுக்கு இந்தத் தொடரில் கவலைகள் உள்ளன. நிறைய அழுத்தங்கள் உள்ளன” என்றார் ஜாகீர் கான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.