ஆஷஸ் தொடர் 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது, 2ம் நாளான நேற்று ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 473 ரன்களுக்கு 9 விக்கெட் என்று டிக்ளேர் செய்ய தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து பொறிப்பறக்கும் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் எடுத்து திண்டாடி வருகிறது.
ஆட்டம் பகலிரவு போட்டி என்பதால் நேற்று அடிலெய்டில் மின்னல் தாக்கியதில் முன்கூட்டியே முடிக்கப்பட்டது, இதில் டேவிட் மலான் 1 ரன்னுடனும், இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 5 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் 31 வயதில் அறிமுகமான மைக்கேல் நேசர் பின் வரிசையில் பேட்டிங்கில் இறங்கி 5 பவுண்டரி 1 சிக்சருடன் 24 பந்துகளில் 35 ரன்கள் எடுத்ததோடு தன் முதல் ஓவரின் 2வது பந்திலேயே பொறிப்பறக்கும் பந்து வீச்சில் ஹசீப் ஹமீத் விக்கெட்டை நிறுத்தி வைத்து எடுத்தார்,
முன்னதாக மார்னஸ் லபுஷேன் ஏகப்பட்ட லக்கில் தன் 6வது டெஸ்ட் சதத்தை எடுத்ததோடு டான் பிராட்மேன், மைக் ஹஸ்சி, வரிசையில் 2000 ரன்களை அதிவிரைவில் எடுத்த 5வது வீரர் ஆனார். மார்னஸ் லபுஷேன் 103 ரன்களில் 4 முறை தப்பிய பிறகு எல்பி. ஆகி வெளியேறினார். முதல் செஷனில் இவர், ட்ராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் ஆகியோர் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 294/5 என்று குறுக்கப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் (3/113), ரூட் (1/72) இந்த விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஸ்டீவ் ஸ்மித்
ஆனால் ஸ்மித்தும், அலெக்ஸ் கேரி (51) யும் சேர்ந்து 6வது விக்கெட்டுக்காக 91 ரன்களைச் சேர்த்தனர். ஸ்டீவ் ஸ்மித் பிரமாதமாக ஆடினார், ஆனால் அழகாக ஆடினார் என்று சொல்ல முடியாது, ஆனாலும் கிறிஸ் வோக்ஸ் பந்து ஒன்றை ஸ்கொயர் லெக் மேல் சவட்டியதில் பந்து சிக்ஸ் போனது அனைவரையும் திகைக்கச் செய்தது. அவர் 93 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து ஒன்று உள்ளே வர சற்றே தாழ்வாக வந்த பந்தில் ஸ்மித் எல்.பி.ஆகி வெளியேறினார். இதன் மூலம் அவருக்கு 12வது ஆஷஸ் சதமும் 28வது டெஸ்ட் சதமும் மறுக்கப்பட்டது.
Also Read: Ashes 2nd test day2: டான் பிராட்மேன் சாதனை வரிசையில் மார்னஸ் லபுஷேன்
Also Read: ஒரே ஆண்டில் 2000 ரன்கள் மொகமட் ரிஸ்வான் உலக சாதனை
ஆனால் ஆஸ்திரேலியாவின் டெய்ல் எண்டர்கள் வெளுத்துக் கட்டி 10 ஓவர்களில் 83 ரன்களை விளாசினர். பாட் கமின்ஸுக்கு பதில் இறங்கிய மைக்கேல் நேசர் 24 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார். கிறிஸ் வோக்ஸ் ஓவரில் 2 பவுண்டரி 1 சிக்சர் விளாசினார். ஸ்டார்க் 39 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். ஸ்டோக்ஸின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்தார் ஸ்டார்க். ஜை ரிச்சர்ட்ஸன் இறங்கி தன் பங்குக்கு கிறிஸ் வோக்சை மிட்விக்கெட்டில் ஒரு பெரிய சிக்ஸ் விளாசினார். இவர் 9 ரன்கள் எடுத்தார். இவர் ஆட்டமிழந்தவுடன் டிக்ளேர் என்றார் ஸ்டீவ் ஸ்மித்.
473/9 என்ற இமாலய ரன்களுக்கு எதிராக களமிறங்கிய இங்கிலாந்து அதற்குரிய விதத்தில் ஆடவில்லை, விளக்கு வெளிச்சத்தில் பந்துகள் ஸ்விங் ஆகி எழும்பின, ஸ்டார்க் பந்து ஒன்று குத்தி எழும்ப ரோரி பர்ன்ஸ் 4 ரன்களில் ஸ்லிப்பில் ஸ்மித்திடம் கேட்ச் ஆனார். ஹசீப் ஹமீது 6 ரன்களில் அறிமுக வீச்சாளர் நேசரின் பந்தை மிட் ஆனில் ஸ்டார்க் கையில் கொடுத்து விட்டுச் சென்றார். இங்கிலாந்து 17/2. இன்று மூன்றாம் நாள் ஆட்டம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.