ஹோபார்டில் நடைபெறும் 5வது ஆஷஸ் டெஸ்ட் பகலிரவு பிங்க் பந்து போட்டியில் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 303 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
கடுமையான கிரீன் டாப் பிட்சில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து பந்து வீச்சுக்கு ஒரு கனவுத் தொடக்கம் கிடைத்தது. 12/3 என்ற நிலையில் சரிந்த ஆஸ்திரேலிய அணியை ட்ராவிஸ் ஹெட் (101) அதிரடி, கவுண்ட்டர் அட்டாக் இன்னிங்ஸ் மூலம் மீட்டெடுத்தார்.
ஆலி ராபின்சன் முதல் ஸ்பெல்லில் பிரமாதமாக வீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஆனால் உடனேயே முதுகு வலிவந்து டின்னர் இடைவேளைக்குப் பிறகு ஒரு ஓவர் வீசி அதன் பிறகு வீசவே இல்லை. டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட் ஆகி வெளியேறினர்.
ஆனால் மார்னஸ் லபுஷேன் சிலபல ஆ...ஊ... க்களுக்கு பிறகு அடித்து ஆடினார், புல்ஷாட், கட் ஷாட், ட்ரைவ் என்று அசத்தி 44 ரன்கள் எடுத்தார், கேமரூன் கிரீன் 74 ரன்கள் விளாசினார். டிராவிஸ் ஹெட் மார்க் உட் பந்தில் அடி வாங்கினார், ஆனால் இனிமே போடுவியா என்பது போல் மார்க் உட் போடப்போட வெளுத்து வாங்கினார், இங்கிலாந்தின் அதிவேக பவுலர் மார்க் உட் ஒரு கட்டத்தில் 11 ஓவர்களில் 75 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார், விக்கெட் ஊஹூம். ஹெட் தன் 4வது டெஸ்ட் சதத்தை எடுத்தார்.
லபுஷேனையும் ராபின்சன் வீழ்த்தியிருப்பார், எட்ஜ் ஆனதை ஜாக் கிராலி தவற விட்டார். ஜோ ரூட்டுக்கு விட்டிருந்தால் அது சுலபமான கேட்ச். தேவையில்லாமல் ரூட்டுக்கு முன்னால் டைவ் அடித்து கேட்சை விட்டார். சிட்னியில் 2 சதங்கள் அடித்த கவாஜாவுக்கும் எட்ஜ் எடுக்க வெளியேறினார்.
ட்ராவிஸ் ஹெட், லபுஷேன் இருவரும் மார்க் உட், கிறிஸ் வோக்ஸ் இருவரையும் வெளுத்துக் கட்டி பவுண்டரிகளாக விளாசித் தள்ளினர். 7 ஓவர்களில் அரைசதக் கூட்டணி அமைத்தனர். லபுஷேன் ஒரு கட்டத்தில் நடந்து வந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயிருந்து வோக்ஸ் பந்தை ஒரே தூக்குத் தூக்கினார், விவ் ரிச்சர்ட்ஸை பார்த்தது போல் இருந்தது. ஆனால் அதே போன்று இன்னொருமுறை பிராட் பந்தில் இறங்கி வந்தார் வந்து பின்னால் ஸ்கூப் ஷாட் ஆட முயன்றார் பவுல்டு ஆகிவிட்டார்.
அதன் பிறகு கிரீன், ட்ராவிஸ் ஹெட் புகுந்து விளையாடினர். 121 ரன்களை 26 ஓவர்களில் எடுத்தனர். கடைசியில் 101 ரன்களில் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து நிம்மதியடைந்தது, 28 ஓவர்களில் 130 ரன்கள் விளாசல் என்றால் சும்மாவா? ஹெட் போனால் என்ன என்று கிரீன் ஒரு முனையில் காட்டடி அடிக்க ஆரம்பித்தார். கடைசியில் பவுன்சர் உத்திதான் சரி வரும் என்று மார்க் உட் வந்து 2 பவுன்சர் போட்டு, 3வது பவுன்சரில் கிரீனை காலி செய்தார்.
241/6 என்று இன்று காலை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க், கமின்ஸ் இருவரையும் மார்க் உட் வீட்டுக்கு அனுப்பினார். ஆனால் நேதன் லயனிடம் ஷார்ட் பிட்ச் எகிறு பந்து பாச்சா பலிக்கவில்லை. இரண்டு பவுன்சர்களையும் டீப் ஸ்கொயர்லெக் பவுண்டரிக்கு வெளியே மைதானத்தைத் தாண்டி சிக்ஸ் அடித்தார் நேதன் லயன். கடைசியில் பிராடிடம் பவுல்டு ஆனார். போலண்ட் 10 நாட் அவுட் ஆஸ்திரேலியா 303 ஆல் அவுட். இங்கிலாந்து தரப்பில் பிராட், உட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர், உட் 18 ஓவர் 115 ரன்கள் விளாசப்பட்டார்.
பிறகு இறங்கிய இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ், லபுஷேன் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆகி டக்கில் வெளியேறினார், ஜாக் கிராலி 3 பவுண்டரிகளுடன் 21 பந்தில் 18 என்று நன்றாக ஆடிவந்த போது கமின்ஸ் பந்தை இன்சைடு எட்ஜ் ஆக்கி ஷார்ட் லெக்கில் ஹெட்டிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
இங்கிலாந்து சற்று முன் வரை 60/2 என்று ஆடிவருகிறது. ஜோ ரூட் 21, மலான் 17 நாட் அவுட்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.