‘காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா’- மறைந்த தாய்க்காக தமிழக வீரர் முருகன் அஸ்வின் உருக்கமான பதிவு

‘காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா’- மறைந்த தாய்க்காக தமிழக வீரர் முருகன் அஸ்வின் உருக்கமான பதிவு

சையத் முஷ்டாக் அலி கோப்பையுடன் முருகன் அஸ்வின்

ஒரு மாதத்திற்கு முன்பு என் தாயார் அக்யூட் மைலாய்ட் லுகேமியா நோயினால் காலமானார்.

  • Share this:
சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை வென்ற தமிழக அணியின் சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வின் தன்னை கிரிக்கெட் வீரராக வளர்த்தெடுத்த மறைந்த தன் தாயாருக்கு அர்ப்பணித்துள்ளார்.

சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையை தமிழ்நாடு அணி தினேஷ் கார்த்திக் தலைமையில் வென்றது, இந்த அணியில் லெக் ஸ்பின்னர் முருகன் அஸ்வின் அதிக விக்கெட்டுகள் மூலம் நல்ல பங்களிப்புகளைச் செய்தார்.

ஞாயிறன்று நடந்த பரோடாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. கிடத்தட்ட 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஒரே கேப்டனின் கீழ் கோப்பையை வென்றது தமிழக அணி.

இந்த வெற்றி தமிழக லெக் ஸ்பின்னர் முருகன் அஸ்வினுக்கு உணர்ச்சிமயமான கணமாக அமைந்தது. உணர்ச்சிவயப்பட்ட அவர் சையத் முஷ்டாக் அலி டிராபியை மறைந்த தன் தாய்க்கு அர்ப்பணித்து உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.

அதில் தன் தாயார் கிரிக்கெட்டின் ரசிகை என்றும் அவரால்தான் நான் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன் என்றும் கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அஸ்வின் முருகன் எழுதிய உருக்கமான கடிதம் வருமாறு: தன் தாயின் மடியில் பச்சிளம் பாலகனாய் தான் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் முருகன் அஸ்வின்.

தாயின் மடியில் முருகன் அஸ்வின் பச்சிளம் பாலகனாய்.


ஒரு மாதத்திற்கு முன்பு என் தாயார் அக்யூட் மைலாய்ட் லுகேமியா நோயினால் காலமானார். இது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது, துரதிர்ஷ்டவசமாக நாங்கள் அவரை இழக்க நேரிட்டது.

என் அம்மாவுக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். அவரால்தான் நான் கிரிக்கெட் ஆடவே ஆரம்பித்தேன். டஜன் கணக்கில் என் அம்மாதான் எனக்கு டென்னிஸ் பந்துகள் ரப்பர் பந்துகள், கிரிக்கெட் பந்துகளை வாங்கித் தருவார், அதன் மூலம்தான் என் கிரிக்கெட் ஆர்வம் துளிர்விட்டது. இதன் மூலம் கிரிக்கெட் ஆட்டத்தில் மெல்ல மெல்ல ஆர்வம் அதிகமானது.

என் ஆட்டத்தை மேம்படுத்துவதில் எனக்காக என் அம்மா நிறைய நேரம் செலவிட்டுள்ளார், காலையில் என்னை பயிற்சிக்கு அழைத்துச் செல்வார். வார இறுதியில் நான் ஆடுவதைப் பார்ப்பார்.. மேட்ச்களை ஆட என் பள்ளியிலிருந்து அனுமதியெல்லாம் வாங்கித் தந்திருக்கிறார். முறையான கிரிக்கெட் உபகரணங்களை வாங்கித் தந்தார். காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து எங்களுக்காகச் சமைத்து வைத்து விடுவார். 7 மணிக்கு அலுவலகம் சென்றால் மாலை 7 மணிக்குத்தான் திரும்புவார். பிறகு இரவு உணவு சமைப்பார், மீண்டும் இதே சுழற்சியில் காரியங்கள்...

என் அம்மாதான் என் நம்பர் 1 விசிறி, விமர்சகர், நான் நன்றாக ஆட வேண்டும் என்று எப்போதும் விரும்புவார். என் அம்மா இறந்தவுடன் நான் சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடருக்குச் சென்றேன். ஆனால் 13 நாட்கள் காரியமும் செய்ய வேண்டியிருந்தது. நான் குழப்பமாக இருந்தேன், அப்போது என் தந்தை, மனைவி, என் சகோதரி ஆகியோர் தொடருக்குச் செல்ல வேண்டும் அதுதான் அம்மாவின் விருப்பமாகவும் இருக்கும் என்றனர். அதுதான் அம்மாவுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்றனர்.

இந்த சையத் முஷ்டாக் அலி டிராபி உங்களுக்காக அம்மா! ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் என் அம்மாவை இதயத்தில் சுமந்து செல்வேன். அணி வெற்றி பெற உதவ நான் நன்றாக ஆட விரும்புகிறேன். கோப்பையை வென்றதை என் அம்மா இருந்திருந்தால் நிச்சயம் மகிழ்ச்சியுடன் கொண்டாடியிருப்பார். அதிக விக்கெட்டுகளை தமிழக அணிக்காக வீழ்த்தினேன்.

இவ்வாறு தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முருகன் அஸ்வின்.
Published by:Muthukumar
First published: