"நீ பந்து வீசினால் கையில் விரல்கள் இருக்காது" என சிறு வயதில் தனது எதிரணியைச் சேர்ந்தவர்கள் மிரட்டியதாக இணையதளம் ஒன்றில் தனது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின்.
சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் நியூஸிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார். இந்நிலையில் சிறு வயதில் தான் கிரிக்கெட் விளையாடிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ”எனக்கு அப்போது வயது 15 இருக்கும். போட்டிக்குப் புறப்பட தயராக இருந்த போது நான்கு பேர் புல்லட்டில் வந்து என்னை அழைத்துச்செல்ல வந்துள்ளதாகக் கூறினார்கள். அவர்கள் பார்க்க நன்கு பலசாலிகளாக இருந்தனர். அப்போது நான் என்னை நான்கு பேர் வந்து அழைத்துச் செல்வதெற்கெல்லாம் ஏற்பாடு செய்துள்ளார்களே என பெருமையாக உணர்ந்தேன்.
பின் நால்வரும் சாண்ட்விச் ரொட்டி போல் நசுக்கிக்கொண்டு அழைத்துச் சென்றனர். ஆடம்பரமான தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று பஜ்ஜி, டீ , வடையெல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள். பின் போட்டி தொடங்கப் போகிறது செல்லலாமா என்று கேட்டேன். அப்போதுதான் அவர்கள், நீ போட்டிக்குச் செல்ல முடியாது. நாங்கள் எதிரணியைச் சேர்ந்தவர்கள். நீ விளையாடச் செல்வதைத் தடுக்கவே வந்துள்ளோம். எங்களை மீறி நீ விளையாடச் சென்றால் பந்து வீசும் உன் கை விரல்கள் இருக்காது என்று மிரட்டினர். பின் நான் விளையாட மாட்டேன் என உறுதியளித்த பின்னரே என்னை வீட்டிற்குச் செல்ல அனுமதித்தனர்” என்ற செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.