பாகிஸ்தானுடன் டி20 உலகக்கோப்பையில் முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததையடுத்து கோலி அளித்த பேட்டியில் கூறியது முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் ஷாகீன் அப்ரீடியின் இன்ஸ்விங்கருக்கு இரையாக, பிற்பாடு விராட் கோலியும் 49 பந்துகளில் 57 ரன்கள் மட்டுமே எடுத்து ஷாகின் அப்ரீடியிடம் விழுந்தார். ரிஷப் பந்த் இடையில் 39 ரன்களை சடுதியில் அடித்து எடுத்ததால் இந்தியா 151ரன்கள் என்ற மரியாதையான இலக்கை எட்டியது. ஆனால் அதுவும் போதவில்லை, பாபர் அசாம், ரிஸ்வான் போட்டு பின்னி எடுத்து விட்டனர், நோ-லாசில் வென்று விட்டனர்.
இதனையடுத்து விராட் கோலி பேட்டியளிக்கும் போது பாகிஸ்தான் ஆடிய விதத்தை தூக்கிப்பிடித்தார், இந்தியாவை அவர்கள் பந்தாடி விட்டனர் என்ற ரீதியில் கருத்துக் கூற பலருக்கும் கடும் கோபம் ஏற்பட்டு வலைத்தளங்களில் நெகெட்டிவ் கருத்துக்களாக மழைப் பொழியத் தொடங்கின. ஆனால் கோலி போட்டி முடிந்து கூறிய கருத்து ஒன்றை அஜய் ஜடேஜ ஏற்கவில்லை, கோலியின் இந்தக் கருத்து இந்திய அணியின் அணுகுமுறையையும் மனநிலையையும் காட்டுவதாக அவர் சாடியுள்ளார்.
“நான் அன்று கோலி கூறிய கருத்தைக் கேட்டேன். நாம் இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து விட்டதால் பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் பின்னடைவு கண்டோம் என்றார், கோலி இப்படி பேசியது எனக்கு கடும் ஏமாற்றத்தை அளித்தது. கோலி போன்ற ஒருவர் களத்தில் நிற்கிறார் என்றால் ஆட்டம் நிச்சயம் எப்படி முடிந்து போனதாக கருதப்பட முடியும் அதுவும் அவரே இப்படி கூறுகிறார்.
அப்போது 2 பந்துகளைக் கூட கோலி ஆடியிருக்கவில்லை, ஆனால் அவர் மனநிலை விழுந்த 2 விக்கெட்டுகள் பற்றி இப்படிச் சிந்தித்தால் அது எப்படி விளங்கும்? இவரது இந்த மனநிலைதான் அன்று இந்திய அணியின் அணுகுமுறையை பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியைத் தீர்மானித்தது” என்றார்.
வரும் ஞாயிறன்று இந்திய அணி 2வது போட்டியில் டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியைச் சந்திக்கிறது. இன்னும் புள்ளிகள் பட்டியலில் இந்தியா வரவில்லை நமீபியா கூட வந்து விட்டது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.