• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சுவாரசியம் குறையும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள்; ரசிக உள்ளங்களை அள்ளிய ஆப்கான் - பாகிஸ்தான் போட்டி- காரணம் இதுதான்

சுவாரசியம் குறையும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள்; ரசிக உள்ளங்களை அள்ளிய ஆப்கான் - பாகிஸ்தான் போட்டி- காரணம் இதுதான்

ஆப்கான் அபாயகரமான அணி.

ஆப்கான் அபாயகரமான அணி.

  • Share this:
டி20 உலகக்கோப்பையில் நேற்று துபாயில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இல்லாத த்ரில்லை கொண்டு வந்தது. முதலில் 64/5 என்று 10வது ஓவரில் இருந்த ஆப்கானிஸ்தான் சவால் அளிக்க வாய்ப்புள்ள 147 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது.

ஸ்டேடியத்துக்கு வெளியே மக்கள் அலை அலையாக உள்ளே நுழைந்ததைப் பார்க்க முடிந்தது. டிக்கெட் இல்லாத ரசிகர்கள் உள்ளே வர முட்டி மோதியதையும் பார்க்க முடிந்தது. இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்கு இருக்கும் கவர்ச்சி குறைந்து விட்டது, இரு அணிகளும் அடிக்கடி ஆடினால்தான் சுவாரசியம் கூடும். ஆடிக்கொருமுறை அமாவாசைக்கு ஒருமுறை ஆடினால் அதன் சுவாரசியம் போயே போச்சு. வெறும் மீடியா மற்றும் விளம்பர நிறுவனங்களின் பில்ட் - அப், மற்றும் இரு நாட்டு அரசியல் உறவுகள் காரணமாகத் தான் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான சுவாரசியம் இருக்கிறதே தவிர ஒரு காலத்தில் இருந்தது போல் மியாண்டடா, வெங்சர்க்காரா?, கபில் தேவா, இம்ரான் கானா, சச்சினா - இன்சமாம் உல் ஹக்கா? என்ற கிரிக்கெட் தனமான ஆர்வம் போயே போச்சு. அந்த இடத்தில் வெற்று விளம்பர பில்ட் அப்கள்தான் இருக்கின்றன. பாபர் அசாமா? விராட் கோலியா என்பது கிரிக்கெட் தன்மையினால் எழும் போட்டித்தன்மை அல்ல, மாறாக விளம்பர பில்ட் அப்பினால் விளையும் போலி போட்டித்தன்மை.

ஆனால் ஆப்கான் - பாகிஸ்தான் போட்டிகளுக்கு கிரிக்கெட்டை முன் வைத்து புதிய கவர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2019 உலகக்கோப்பை பாக்-ஆப்கான் போட்டியிலேயே இது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்


நேற்றைய போட்டி விறுவிறுப்படைந்த 17-வது ஓவரில் ரஷீத் கான் பவுலிங்கில் அபாய பாபர் அசாமுக்கு கேட்சை விட்டாலும் அதே ஓவரில் ரஷீத் கான் கூக்ளியில் லெக் ஸ்டம்ப் பெயர்ந்து விழ 3 ஓவர்கள் 26 ரன்கள் பாகிஸ்தானுக்குத் தேவை எனும்போது சுவாரசியம் கூடியது.

அடுத்த 18வது ஓவரை நவீன் உல் ஹக் வீசினார், மிக மிக அருமையான ஓவர், காரணம் ஆசிப் அலி, மாலிக்குக்கு 2 ரன்களையே முதல் 2 பந்துகளில் விட்டுக் கொடுத்தார். 3வது பந்தில் மாலிக்கிற்கு கேட்ச் ட்ராப் ஆகிறது. நவின் உல் ஹக் தான் காட் அண்ட் பவுல்டு வாய்ப்பை நழுவ விட்டார். 4வது பந்து யார்க்கர் மாலிக்கினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 5வது பந்தை வைடாக வீசினார், மாலிக் கால்களை நகர்த்தாமல் மட்டையை மட்டும் விட எட்ஜ் ஆகி ஷஜாத்திடம் கேட்ச் ஆனது, ரசிகர்களை சீட் நுனிக்கு நகர்த்தியது ஆட்டம். கடைசி பந்தும் நோ ரன் ஆக 18வது ஓவர் 2 ரன்கள் ஷோயப் மாலிக் விக்கெட் என நவீன் உல் ஹக் அசத்த பாகிஸ்தானுக்கு கடைசி 2 ஓவரில் 24 ரன்கள் என்ற ஊசிமுனையில் நிற்கும் நிலை ஏற்பட்டது.

ஆனால் 19வது ஓவரை யார் வீச வேண்டும் என்பதில் சரியான திட்டமிடல் இல்லாததால் கரீம் ஜனத்திடம் கொடுத்தார். ஆனால் அவர் ஏற்கெனவே 3 ஓவர் 24 ரன்களை கொடுத்திருந்தார்,  இந்த ஓவரை ஜனத் டைட்டாக வீசியிருந்தாலும் 20வது ஓவரை வீச ஆளில்லை. ஆனால் ஆசிப் அலி இந்த ஓவரை வெளுத்து வாங்கி விட்டார். அவரும் நெட் பவுலிங் போல் வீசினார். முதல் பந்தே சிக்ஸ். யார்க்கர் லெந்த்தை பின்னால் சென்று லெந்த் பாலாக கன்வர்ட் செய்து லாங் ஆஃப் மேல் தூக்கினார். அடுத்த பந்து துல்லிய யார்க்கர், ஆனால் அடுத்த 2 பந்துகள் இலக்கைத் தவறவிட ஆசிப் அலி மேலும் 2 சிக்சர்களுடன் ஆட்டத்தை முடித்தார். 7 பந்தில் 25 ரன்கள்.

அபார முஜீப் உர் ரஹ்மான், டர்னிங் பாயிண்ட் ரஷீத் கான்:

பாகிஸ்தான் ஓரளவுக்கு இலக்கு நோக்கி வசதியாக முன்னேறிய போதே லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் குடைச்சலைக் கொடுத்தார். முதல் 2 ஓவர்களில் பந்து எந்தப்பக்கம் திரும்பு என்பதைக் கணிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. குறிப்பாக பாபர் அசாமுக்கு ரஷீத் கான் பந்து வீச்சு புரியவில்லை. எட்ஜ் எடுத்தது. கூக்ளியில் ஏதோ தப்பிப் பிழைத்தார் பாபர். கடைசியில் பாபர் அசாமை வீழ்த்தியே விட்டார், கிளீன் பவுல்டு, என்னடா இது என்று ஒரு சுற்று சுற்று சுற்றினார் லெக் ஸ்டம்ப் பெயர்ந்தது முன்னதாக ஹபீஸ் விக்கெட்டையும் வீழ்த்தி ரஷீத் கான் 100வது டி20 சர்வதேச விக்கெட்டை வீழ்த்தினார். ரஷீத் உருவாக்கிய குடைச்சலினால் 4 ஓவர் 38 ரன்கள் என்று சற்றே பாகிஸ்தான் பதற்றம் அடைந்தது.முஜிபுர் ரஹ்மான் 4 ஒவர் 14 ரன் 1 விக்கெட் என்று பாகிஸ்தானால் மிகவும் மரியாதை அளிக்கப்பட்ட பவுலர் ஆனார். இவரது பவுலிங்கினால் பாகிஸ்தான் 7 ஓவர்களில் 44/1 என்று விரும்பிய தொடக்கத்தை பெற முடியவில்லை.

முன்னதாக பேட்டிங்கில் ஆப்கான் அணியின் புதிய அணுகுமுறையான அடித்தால் சிக்ஸ், பௌண்டரி இல்லை டாட் பால் என்ற அணுகுமுறை கைகொடுக்கவில்லை. ஷாகின் அப்ரீடி ஆட்டிப்படைத்து விட்டார். பவர் ப்ளேயில் ஆப்கான் ஸ்கோரிங் ஷாட்கள் எல்லாமே சிக்சர்கள்தான். இமாத் வாசிமின் ஒரே ஒவரில் 2 சிக்சர்கள் மூலம் 19 ரன்கள் விளாசப்பட்டன. பவர் ப்ளேயில் ஆப்கான் 49/4.

பிறகு நஜிபுல் சத்ரான், ஷதாப் கானை ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி, பிறகு ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் விளாசினார். நஜீபை ஷதாப் கான் வீழ்த்த ஆப்கான் அணி 13வது ஓவரில் 70/6. முகமது நபி 12 பந்தில் 5 ரன் எடுத்தார். பிறகு 23 பந்தில் 20 ரன்கள் மந்தம் காட்டினார். ஆனால் கடைசி 4 ஒவர்களில் 46 ரன்களை நபியும் (35), குல்பதீன் நயீப் (35) விளாச ஸ்கோர் சவாலான 147 ரன்களை எட்டியது. பாகிஸ்தான் இந்த இலக்கைப் போராடித்தான் வென்றது. கடைசியில் ஆசிப் அலி சொதப்பியிருந்தால் பாகிஸ்தான் அம்போவாகியிருக்கும்.

இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் ஒரு காலத்தில் ஷார்ஜாவில் நடந்தாலும் எங்கு நடந்தாலும் இப்படித்தான் இருக்கும், இன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் மீடியா பில்ட் - அப் விளம்பர வர்த்தக பில்ட் - அப்பாக குறுகிப் போய் காணாமல் போய்விட்டதே தவிர கிரிக்கேட்  இல்லை. சுவரில்லாமல் சித்திரம் இல்லை, கிரிக்கெட்தான் சுவர் அதன் நுணுக்கங்கள்,நுட்பங்களுக்குப்பிறகுதான் விளம்பரமும் வர்த்தகமும் ஆனால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஜிகினா வேலை பில்ட் அப்தான் இருக்கிறதே தவிர கிரிக்கெட் காணாமல் போய் விட்டது.இந்த ஜிகினா வேலையினால் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக ஆடும் முன்பே ஜெயித்து விட்டது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. இதனால் ஆட்டத்தில் போட்டித்தனம் கறார் தனம் குறைந்து வெறும் பார்மாலிட்டியாகப் போய்விட்டது. வீரர்களும் ஜெயித்து விட்ட உணர்விலேயே ஆடுகின்றனர், கடைசியில் தோற்கும் போதுதான் ஓகோ என்று விழித்துக் கொள்கின்றனர். ஆடும் போது ஒரு கனவு நிலையில் ஆடுகின்றனர். பில்ட்-அப் ஒரு அணிக்கு இதைத்தான் செய்யும்.

பழைய இந்தியா-பாக் கவர்ச்சிகர கறார் கிரிக்கெட் இப்போது ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் போட்டிகளில் காணக்கிடைப்பதால்தான் ரசிகர்கள் வெள்ளம் இந்தப் போட்டிகளுக்கு அலை மோதுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: