Home /News /sports /

நான் நிறவெறியனாக இருந்திருந்தால் முழந்தாளிட்டு பொய் வேஷம் போட்டிருப்பேன் - டி காக் உருக்கமான விளக்கம்

நான் நிறவெறியனாக இருந்திருந்தால் முழந்தாளிட்டு பொய் வேஷம் போட்டிருப்பேன் - டி காக் உருக்கமான விளக்கம்

குவிண்டன் டி காக் விளக்கம்

குவிண்டன் டி காக் விளக்கம்

நிறவெறிக்கு எதிராக மைதானத்தில் எதிர்ப்பு செய்கை செய்ய வேண்டிய உத்தரவை புறக்கணித்தார் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக், இது சர்ச்சையைக் கிளப்ப மே.இ.தீவுகளுக்கு எதிரான ஆட்டத்திலிருந்து திடீரென விலகினார். இந்நிலையில் நான் நிறவெறியனல்ல, என் வளர்ப்புத் தாயே கருப்பரினத்தை சேர்ந்தவர்தான் என்று குவிண்டன் டி காக் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக குவிண்டன் டி காக் கூறியதாவது: “என்னுடைய அணியிடம் மன்னிப்புக் கேட்கிறேன். ரசிகர்களிடத்திலும் மன்னிப்புக்கேட்கிறேன். நிறவெறிக்கு எதிராக நிற்பதன் அவசியத்தை புரிந்து கொள்கிறேன். அதே போல் வீரர்களாக உதாரணமாகத் திகழ வேண்டியதையும் ஒப்புக் கொள்கிறேன். நான் முழங்காலிட்டு நிறவெறி எதிர்ப்புக் காட்டுவதில் பலர் படிப்பினை பெறுவார்கள் என்றால் அதைச் செய்வதில் எனக்கு எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடாததன் மூலம் நான் யாரையும் மரியாதைக் குறைவாக கருதவில்லை. குறிப்பாக மே.இ.தீவுகள் அணியை நான் மரியாதைக் குறைவாகக் கருதவில்லை. சிலருக்கு இது புரியவில்லை. என்னால் ஏற்பட்ட குழப்பம் வேதனைக்கு, கோபங்களுக்கு நான் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது வரை இந்த முக்கியமான நிறவெறி விஷயத்தில் நான் அமைதியாகவே இருந்து வந்தேன். ஆனால் இப்போது என்னைப் பற்றி விளக்க வேண்டியுள்ளது. என்னைப் பற்றி தெரியாதவர்களுக்கு ஒன்றை வெளிப்படுத்துகிறேன் நானே கலப்பின குடும்பத்திலிருந்து வந்தவன் தான். என்னுடைய ஹாஃப் சிஸ்டர்கள் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் அல்ல. என்னுடைய வளர்ப்புத் தாய் கருப்பரினத்தைச் சேர்ந்தவர்தான்.

என்னைப் பொறுத்தவரை கருப்பரின உயிர்கள் முக்கியம் என்ற இயக்கம் நான் பிறந்ததிலிருந்தே இருப்பதுதான். இப்போது சர்வதேச இயக்கமாக அது மாறியுள்ளது. எந்த ஒரு தனிநபரையும் விட மக்களிடையே சமத்துவம் மிக முக்கியமானது. என்பதை அறிவேன். நான் என் எண்ணங்களை என்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்புகிறேன், என் குடும்பத்துக்காகவும் நாட்டுக்காகவும் ஆடுவதில் பெருமை அடைகிறேன்.

தினப்படியே அனைத்து பிரிவு மக்களையும் நேசிக்கும் நான் எதற்காக மண்டியிட்டு அந்தச் செய்கையைச் செய்துதான் என் உணர்வை நான் நிரூபிக்க வேண்டுமா என்ன? இதுதான் எனக்குப் புரியவில்லை. எந்த ஒரு விவாதமும் இல்லாமல் சொல்வதைச் செய் என்றால் அது அர்த்தத்தை இழக்கச் செய்கிறது என்றே நான் கருதுகிறேன். நான் நிறவெறியானாக இருந்திருந்தால் மண்டியிட்டு பொய் வேஷம் போட்டிருப்பேன். அது தவறு இதனால் நல்ல சமூகத்தைக் கட்டமைக்க முடியாது.

என்னுடன் வளர்ந்தவர்கள் விளையாடியவர்கள் அறிவார்கள் நான் எப்படிப்பட்டவன் என்பதை. என்னை பலரும் பலவிதமான திட்டியிருக்கின்றனர், சுயநலவாதி, முதிர்ச்சியற்றவன் என்பார்கள், ஆனால் அது என்னை காயப்படுத்தாது, ஆனால் நிறவெறியன் என்றால் அது காயப்படுத்தும் ஏனெனில் நான் அப்படியல்ல. இது என்னைக் காயப்படுத்துகிறது, கருத்தரிக்கும் என் மனைவியைக் காயப்படுத்துகிறது. என் குடும்பத்தையே காயப்படுத்துகிறது.

என் இதயத்தின் ஆழத்திலிருந்து கூறுகிறேன் நான் நிறவெறியாளன் அல்ல. ஆனால் முக்கியமான மேட்சுக்கு முன்னால் மண்டியிட்டு எதிர்ப்புக் காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது, அதோடு ‘இல்லையென்றால்’ என்ற அச்சுறுத்தலும் வருகிறது. நான் அணியில் உள்ள அனைவரையும் நேசிக்கிறேன். தென் ஆப்பிரிக்காவுக்காக கிரிக்கெட் ஆடுவதை தவிர நான் வேறு எதையும் நேசிப்பவன் அல்ல.

உலகக்கோப்பைக்கு வரும்போதெல்லாம் ஏதாவது நாடகம் அரங்கேறுகிறது. இது நியாயமற்றது. தெம்பா பவுமா, தென் ஆப்பிரிக்கா என்னை விரும்பினால் நான் நாட்டுக்காக ஆடவே கடமைப்பட்டிருக்கிறேன்.” என்று நீண்ட விளக்கத்தை கிரிக்கெட் வாரியத்துக்கு அளித்துள்ளார் டி காக்.

ஆனால் வரும் போட்டிகளில் டி காக் இருப்பாரா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.
Published by:Muthukumar
First published:

Tags: South Africa, T20 World Cup

அடுத்த செய்தி