ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Eng vs SA | ரபாடா ஹட்ரிக்... இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி

Eng vs SA | ரபாடா ஹட்ரிக்... இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டதால் இந்த போட்டி அவர்களுக்கு பயிற்சியாகவே இருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் இமலாய வெற்றி அடைந்தால் மட்டுமே நெட் ரன்ரேட் அடிப்படையில் அந்த அணி தகுதி பெறும். ஆனால் டாஸில் தோல்வியடைந்த போதே தென்னாப்பிரிக்காவின் கனவு சிதைந்தது.

  இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 189 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணி வீரர் வான் டெர் டுசென்60 பந்துகளில் 94 ரன்களும் ஏடம் மார்க்கம் 25 பந்துகளில் 52 ரன்களும் விளாசினர்.

  190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் அதிரடியாக விளையாடியது. அரையிறுதிக்கு முன்னேறிவிட்டாலும் இந்த போட்டியிலும் வெற்றி பெற இங்கிலாந்து வீரர்கள் முனைப்பு காட்டினர். தென்னாப்பிரிக்கா அணியும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை சீரான இடைவெளியில் வீழ்த்தி வந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டது.

  கடைசி ஓவரை தென்னாப்பிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா வீசினார். ரபாடா வீசிய முதல் 3 ஓவர்களில் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 40 ரன்களுக்கு மேல் வாரி வழங்கி இருந்தார். இதனால் கடைசி ஓவரில் அவர் பந்துவீச்சு எப்படி இருக்குமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தை நிலைகுழைய வைத்தார்.

  முதல் 3 பந்துகளில் தொடர்ச்சியாக 3 விக்கெட்களை வீழ்த்தி தனது சிறந்த பந்து வீச்சை ரபாடா வெளிப்படுத்தினார். கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தென்னாப்பிரிக்காவை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். ஆனால் இந்த வெற்றி தென்னாப்பிரிக்காவிற்கு ஆறுதல் வெற்றியாக மட்டுமே அமைந்தது. குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஒரே புள்ளிகளை பெற்றிருந்த போதும் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

  குரூப் 2 பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறும் அணி எது என்பது இன்று நடைபெறும் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் தான் தெரியவரும். நியூசிலாந்து வெற்றி பெற்றால் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும். ஆப்கன் வெற்றி பெற்றால் அரையிறுதியில் நுழைய இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: T20 World Cup